சிட்டுக்குருவி எங்கள் ஆசான்!



சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி!
குட்டை மூக்கு! குஞ்சம் உன் வால்!
பட்டுப் போலே மெத்தென மேனி!
தொட்டுப் பார்க்க ஆசை! வாராய்!

முற்றம், திண்ணை, வாசற்படியில்
கொட்டிக் கிடக்கும் தானிய மணிகள்
குட்டித் தாவல்! கொத்தித் தின்ன
கற்றாய் ! எந்தப் பள்ளிக் கூடம்? 

மண்ணைக் குடைந்து புழுதிக் குளியல்,
சின்னச் சண்டை,  இரைச்சல் கொஞ்சம்
தண்ணீர்க் குட்டை இறக்கை அலம்பல்!
பின் என் சன்னல் எட்டிப் பார்ப்பாய்!

வீட்டின் சந்து பொந்து விடாமல் 
சீட்டி அடித்துப் பறந்து திரிவாய்
கொடிக்கம்பங்கள் குருவிக்கூட்டம்!
படிக்கும் தொடக்கப் பள்ளிக்கூடம்!

துறுதுறு வென்று சும்மாயிராமல்
சுறுசுறுப் பருமை சொல்லிக் கொடுப்பாய்!
வருகையோர் நாள் தவற விடாமல் 
வருவாய்! நட்பை வளர்த்தாய் என்னுள்!

கோடைக்காலம் மரத்தின் கிளைகள் 
ஆடும் ஊஞ்சல்!  அந்திப் பொழுதில் 
ஆடல்!  பாடல்! அரங்க மேடை!
காடும் மேடும் உனது ராஜ்யம்!

வசிக்கும் இடமோ ஓட்டுக் கூரை!
பசிக்கு அளவாய் இரைகள் தேடல்!
கசப்பே இல்லாக் கூட்டு வாழ்க்கை!
நிசம்தான் நீயே எங்கள் ஆசான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com