அரங்கம்: உடையாத பொம்மை! 

செளம்யா ஸ்கூல் பையை எடுத்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து செருப்பைப் போட்டுக் கொள்கிறாள்.
அரங்கம்: உடையாத பொம்மை! 


காட்சி - 1
இடம் - வீடு
மாந்தர் - செளம்யா, செளம்யாவின் அம்மா
கல்யாணி, செளம்யாவின் அப்பா ராகவன். செளம்யாவின் தோழி உஷா.

(செளம்யா ஸ்கூல் பையை எடுத்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து செருப்பைப் போட்டுக் கொள்கிறாள். )

செளம்யா : அம்மா!....டைம் ஆச்சு!.... ஸ்கூலுக்குக் கிளம்பறேன்!....
கல்யாணி : என்ன செளம்யா!.... வழக்கமா உன் தோழி உஷா வருவாளே!.... ரெண்டு பேரும் சேர்ந்துதானே ஸ்கூலுக்குப் போவீங்க?.... உஷாவைக் காணோமே?
செளம்யா : அவ ஸ்கூலுக்கு லீவுன்னு நினைக்கிறேன்மா...எனக்கு டைம் ஆச்சு!.... நான் கிளம்பறேன்.... இனி நான் தனியாவே தினமும் ஸ்கூலுக்குப் போய்க்கிறேன்.... இல்லைன்னா லேட் ஆயிடும்!....
ராகவன் : உஷாவுக்கு உடம்பு சரியில்லையோ என்னமோ?.... சரிடா, கண்ணா நீ பத்திரமா போயிட்டு வா!....

(செளம்யா பள்ளிக்குச் சென்ற ஐந்து  நிமிடங்களில் வாசலில் உஷா குரல் கேட்கிறது)

உஷா: செளம்யா!....செளம்யா!....
கல்யாணி: அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் செளம்யா  கிளம்பிப் போனா!... நீ லீவுன்னு செளம்யா சொன்னாளே....நீ லீவு இல்லியா?
உஷா: லீவெல்லாம் இல்லை ஆன்ட்டி..... சரி, நான் கிளம்பறேன்.... ஏற்கெனவே லேட் ஆயிடுச்சு!....

(உஷா கிளம்பியதும் வீட்டுக்குள் வருகிறார் கல்யாணி) 

கல்யாணி : என்னங்க!.... ஏன் திடீர்னு உஷாவை விட்டுட்டு செளம்யா தனியா ஸ்கூலுக்குக் கிளம்பிட்டா?.... அவங்களுக்குள்ளே ஏதோ பிரச்னைன்னு நினைக்கிறேன்...
ராகவன் : அதான் எனக்கும் புரியலே.... எதுக்கும் சாயங்காலம் செளம்யா வந்ததும் இது பற்றிக் கேளு...

காட்சி - 2
இடம் - செளம்யாவின் வீடு
மாந்தர் - கல்யாணி, செளம்யா.

கல்யாணி : என்ன செளம்யா!.... காலையிலே நீ ஸ்கூலுக்குக் கிளம்பினப்புறம் உஷா உன்னைத் தேடி வந்தா!..... உஷா இன்னிக்கு லீவுன்னு சொன்னேல்ல....
செளம்யா : எனக்குத் தெரியலேம்மா.... எனக்குப் பசிக்குது!.... நான் சாப்பிடப் போறேன்....
கல்யாணி : உண்மையைச் சொல்லு செளம்யா!.... உஷாவோட சண்டை போட்டியா?.... அவளை வேணும்னுதான் விட்டுட்டு நீ தனியா ஸ்கூலுக்குப் போனியா?...
செளம்யா : நான் ஒண்ணும் உஷாகூட சண்டை போடலே..... ஆனா அவதான் நேற்று என்  புது பொம்மையை பார்த்துட்டுத் தர்றேன்னு வாங்கினா!.... ஆனா கொஞ்சம் கூட கவனம் இல்லாம பொம்மையைக் கீழே போட்டு உடைச்சுட்டா! அப்பா வாங்கித் தந்த புது பொம்மையை உடைச்சவ கூட நான் ஏன் பேசணும்? அதான் இனி அவகூட நான் பேச மாட்டேன்! இனி உஷா கூட சேர்ந்து ஸ்கூலுக்கும் போக மாட்டேன். 
கல்யாணி : ஓ!..... இதுதான் காரணமா?.... அவ என்ன வேணும்னா உன் பொம்மையை உடைச்சிருப்பா?.... கை தவறி கீழே விழுந்திருக்கும்!....
செளம்யா: புது பொம்மைன்னு தெரிஞ்சிருந்தும் கவனமா இரக்க வேண்டாமா? நான் இநி அவ கூட பேசவே மாட்டேன்!...

( செளம்யா சொன்னதைக் கேட்டதும் அம்மா கல்யாணிக்குச் சிரிப்பு வந்தது. பத்து வயது ஆன பிறகும் செளம்யா சிறு  குழந்தையாகவே இருக்கிறாளே.... என்ன செய்வது என்று நினைத்தார்)

காட்சி - 3
இடம் - செளம்யாவின் வீடு, கல்யாணி, ராகவன்.

(மறுநாள் விடுமுறை என்பதால் செளம்யா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா கடைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பினார். அம்மா முழுக்க முழுக்க நனைந்தபடி வீட்டிற்கு  வருவதைப் பார்த்த  செளம்யா பதறிப் போனாள்)

செளம்யா : என்னம்மா இப்படி நனைஞ்சுக்கிட்டே வர்றீங்க?.... காலையிலேயே மழை வர்ற மாதிரி இருந்ததே.... குடை எடுத்துட்டுப் போகலாமில்லே.... இப்படி மழையிலே நனைஞ்சீங்கன்னா உடம்பு சரியில்லாம போயிடுமே!.... நான் மழையிலே நனைஞ்சா நீங்க எனக்கு அறிவுரை சொல்வீங்க!.... நீங்க மட்டும் இப்படி நனைஞ்சுக்கிட்டு வர்றது சரியா?
கல்யாணி : (சிரித்தபடி) நம்ம எதிர்வீட்டு விஜயா ஆன்ட்டிதான் அன்னிக்கு என் குடையை வாங்கிட்டுப் போனாங்க.... அப்புறம் காத்துலே குடை கிழிஞ்சு போச்சுன்னு சொல்லி, குடையைக் கிழிச்சுக் கொண்டு வந்து குடுத்துட்டாங்க.... இப்ப நான் விஜயா ஆன்ட்டி கூட பேசறதே இல்லை....
செளம்யா : என்னம்மா சொல்றீங்க?.... பாவம் அந்த ஆன்ட்டி!.... குடையைக் கிழிச்சா என்ன?.... அதுக்காக அவங்ககூட பேசாம இருக்கலாமா அம்மா!.... விஜயா ஆன்ட்டி நமக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்காங்க.... நாம புது குடை வாஙகியிருக்கலாமில்லே.... புதுக்குடை வாங்கியிருந்தா இப்போ இப்படி நனைஞ்சுக்கிட்டு வந்திருக்க வேண்டாமே!.... இப்ப உங்களுக்குக் காய்ச்சல் வந்தா நம்ம எல்லோருக்கும்தானே கஷ்டம்!.....

(செளம்யா சொன்னதைக் கேட்டு அப்பா ராகவன் சிரித்தபடி வருகிறார்)

ராகவன் : ஏன் செளம்யா!... உன்னோட  ஃபிரெண்டு உஷாவும் தெரியாம உன் பொம்மையை உடைச்சுட்டா!.... அதுக்காக அவ கூட பேசமாட்டேன்னு சொல்றியே!.... உஷாவும்தான் உன்னை எத்தனையோ முறை சைக்கிள்லே உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கா!.... அவ கூட சண்டை போடலாமா?...

(சிறிது நேரம் யோசித்தாள் செளம்யா)

செளம்யா : ஸாரிப்பா!.... ஏதோ ஆத்திரத்திலே அவ கூட சண்டை போட்டுட்டேன்!..... நாளைக்கே அவ கூட பேசறேன்!.... 
ராகவன் : செளம்யா!.... அம்மா விஜயா ஆன்ட்டிகூட சண்டை  எதுவும் போடலே..... ஏதோ ஞாபக மறதியா குடையை மறந்து வெச்சுட்டுப் போயிட்டாங்க.... அதுக்குள்ளே மழை வந்திடுச்சு!.... அவ்வளவுதான்! இன்னிக்குக் காலையிலே கூட விஜயா ஆன்ட்டி,  அம்மாவோட பேசிட்டிருந்தாங்களே....  நீ பார்க்கலையா?.....ச 
செளம்யா : ஐ!.... ஆமா!.... காலையிலே வந்து சர்க்கரை வாங்கிட்டுப் போனாங்களே..... மறந்தே போனேன்!....
ராகவன் : ஹா!ஹா!.... சின்ன விஷயத்துக்காக எல்லாம் யார் கூடவும் சண்டை போடக்கூடாது... செளமாயா.... இதோ!.... உனக்காகப் புது பொம்மை வாங்கிட்டு வந்திருக்கேன்.... இதை உஷா கீழே போட்டாலும் உடையாத துணி டெட்டி பியர்!.... உனக்கு மட்டுமில்லே!..... உஷாவுக்காகவும் ஒரு பொம்மை வாங்கியிருக்கேன்!.... அடுத்த வாரம் அவ பிறந்த நாளுக்கு உன்னொட பரிசா கொடு!..... இந்த உடையாத பொம்மைகள் மாதிரி உங்க நட்பும் உடையக் கூடாது!.... இப்பவே உஷாவுக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லு!.... இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து மதிய உணவு சாப்பிடணும்!

(சொன்னபடி அப்பா ராகவன் இரண்டு டெட்டி பியர் பொம்மைகளை செளம்யாவிடம் கொடுக்க,.... சொம்யா வாங்கியபடி மகிழ்ச்சியாக உஷாவுக்கு ஃபோன் செய்ய ஓடுகிறாள்)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com