சூப்பர் சிவா! - 11

ஆண்டு விழாவில்தான் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுப்பார்கள். அதை தொடர்பு படுத்தி அருளிடம் இளங்கோ பேசினான். 
சூப்பர் சிவா! - 11


விளக்கெண்ணெய் தடவலாம்....

ஆண்டு விழாவில்தான் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுப்பார்கள். அதை தொடர்பு படுத்தி அருளிடம் இளங்கோ பேசினான். 

""அருள், உனக்கு 800 மீ. ஓட்டப்பந்தயத்தில் பரிசு கிடைக்கிறது. உன்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிவா ஓட்டப்பந்தயத்தில் சேர்ந்தான்...'' என்றான் இளங்கோ.

""அதுதான் அவன் நாய் பின்னால் ஓடினான்...'' என்றான் அருள்.

"மால்கம்' மூலம் அவனுக்கு பெரிய பெயர் கிடைக்கப் போகுது!....அதைத் தடுக்கணும்!'' என்றான் இளங்கோ. 

 ""என்ன செய்யலாம்?'' அருள் ஆர்வம் காட்டினான்.

""மால்கம் போஸ்ட் முறிந்து விழுற மாதிரி பண்ணலாமா?'' என்று கேட்டான் இளங்கோ.

""அப்படிச் செய்யமுடியாது!'' எனறான் அருள்.

இளங்கோ சிறிது நேரம் யோசித்தான். அவன் மூளையில் "பளிச்' சென்று ஒரு திட்டம் தோன்றியது. 

""இப்படிச் செய்யலாமா? ..... "மால்கம்' போஸ்ட் ஒரு வழுக்கு மரம்!.... விளக்கெண்ணெய் தடவலாம். வழுக்கி விழுவான்!...'' என்றான் இளங்கோ.

திட்டம் அருளுக்குப் பிடித்திருந்தது. எண்ணெய் தடவுகிற வேலை இளங்கோவிற்கு என்று முடிவானது. 

ஆண்டு விழாவிற்கு முந்தின நாள்.... "மால்கம்' போஸ்டை மைதானத்திலிருந்து எடுத்து விளையாட்டுச் சாமான்கள் இருக்கும் அறையில் வைத்திருந்தனர். ஆண்டு விழா அன்று போஸ்டை கலை அரங்க மேடைக்கு முன்பாக நட இருந்தனர்.

இளங்கோ யாரும் இல்லாத நேரத்தில் விளையாட்டு சாமான்கள் இருக்கும் அறைக்கு வந்தான். கால்சட்டைப் பைக்குள்ளிருந்து எண்ணெய் பாட்டிலை எடுத்தான். இதயம் அவனுக்கு "தடக்....தடக்' கென்று அடித்தது. கை நடுங்கியது. நடுங்கியவாறே எண்ணெயை போஸ்டில் பூசினான். பூனை போல் அறையிலிருந்து நழுவினான். 

ஆண்டு விழாவிற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது! மாணவர்கள் குதூகலத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். சீருடை அணியத் தேவையில்லை என்று கூறியிருந்ததால் மாணவர்கள் வண்ண ஆடைகளில் காட்சியளித்தனர். கலை அரங்கம் வரைக்கும் பாதையில் வண்ணச் செடிகள் அசைந்தாடின. வண்ணத் தாள்களில் தோரணங்கள் பள்ளி முழுவதும் கட்டப்பட்டிருந்தன. மதியத்திலிருந்தே ஸ்பீக்கரில் பாட்டு ஒலித்தது!

அரங்கத்தில் முன்னால் போட்டிருந்த நாற்காலிகள் நிரம்பியிருந்தன. சிவா வீட்டில் எல்லோரும் வந்திருந்தனர். சந்திரா அக்காவும் கிருஷ்ணன் அண்ணனும் வந்திருந்தனர்.

அமைச்சர் காரில் வந்து இறங்கினார். அவரை தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் வரவேற்று மேடையில் அமர வைத்தனர். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்க ஆண்டு விழா தொடங்கியது. தமிழ் ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமை ஆசிரியர் ஆண்டறிக்கையை வாசித்தார். அமைச்சர் வாழ்த்துரை வழங்கினார்.

சம்பிரதாய நிகழ்ச்சிகள் எப்போது முடியும் என்று பெற்றோரும் பார்வையாளர்களும் காத்திருந்தனர். தங்கள் பிள்ளைகள் பரிசுகள் பெறுவதையும் திறமை காட்டுவதையும் பார்க்கவே அவர்கள் வந்திருந்தனர். 
சிவாவும் ஒருவித துடிப்புடன் உட்கார்ந்திருந்தான். அருளும், இளங்கோவும் தவிப்புடன் இருந்தனர். 

அமைச்சரும் மற்றவர்களும் மேடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்ததும் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.  இரண்டு நடன நிகழ்ச்சிகளுக்குப் பிறகு "மால்கம்' நிகழ்ச்சி வந்தது.

டிரில் மாஸ்டர் "மால்கம்' நிகழ்ச்சியைப் பற்றி விளக்கம் சொன்னார். ""ஒரு திடுக்கிடும் காட்சியை இப்போது காணப் போகிறீர்கள்!.... உங்கள் இதயத்தை திடப்படுத்திக் கொண்டு பாருங்கள்!.... இந்த சாகசத்தைச் செய்வது எட்டாம் வகுப்பு மாணவன் சிவா!....'' என்று அறிமுகப்படுத்தியதும் மேடையில் தோன்றினான் சிவா. 

சிவா கூட்டத்தினரை வணங்கினான். அவனை உற்சாகப்படுத்தும் விதமாக மாணவர்கள் கை தட்டினர். 

"நன்றாகக் கை தட்டட்டும்!.... சிறிது நேரத்தில் சிவா கீழே விழுவான்!.... எல்லோரும், "அய்யய்யோ!' என்று "உச்' கொட்டுவார்கள்...' என்று இளங்கோ அருளுக்கு மட்டும் கேட்கும் விதமாக சொன்னான்.

"மால்கம்' வழுக்கு மரத்திற்கு வந்த சிவா அதில், "விறு விறு' என்று ஏறினான். உச்சிக்கு வந்த சிவா கவுட்டை கால் போட்டு இரு கைகளையும் கூப்பி வணங்கினான். எல்லோருடைய தலையும் ஆச்சரியத்தோடு பார்த்தது! சிவா தரையில் குட்டிக்கரணம் போடுவது போல் மரத்தில் கரணம் போட்டு இறங்கினான். இப்போது கை தட்டல் பலமாகக் கேட்டது! கைதட்டல் ஒலி இளங்கோ, அருள் காதுகளில் இடியோசையாகக் கேட்டது!  "எப்படி சிவா கீழே விழவில்லை?' என்ற கேள்வி அவர்கள் மனங்களில் குடைந்தது. காலையில் "மால்கம்' போஸ்டை மேடைக்கு முன்பாக நட்டவர்கள் எண்ணெயை நன்றாகத் துடைத்து சுத்தப்படுத்தியது அவர்களுக்குத் தெரியாது!.... அதனால் எதிர்பார்த்தது நடக்காமல் ஏமாந்து போனார்கள். சிவாவுக்கு நேரவிருந்த துன்பம் அவனுக்குத் தெரியாமல் சூரியனைக் கண்ட பனி போல மறைந்து விட்டது! சிவா தொடர்ந்து பல வித்தைகளை வழுக்கு மரத்தில் அசகாய சூரனாக, இருபது நிமிடங்களுக்கும் மேலாகச் செய்தான்!  பார்வையாளர்கள் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்! 

சிவா கடைசி நிகழ்ச்சிக்கு வந்து விட்டான்! முதலில் மரத்தின் உச்சியிலிருந்து குட்டிக் கரணம் போட்டு இறங்கியது போல் இப்போது குட்டிக் கரணம் போட்டு உச்சிக்கு ஏறினான்! இனி சிவா என்ன செய்யப் போகிறான் என்பதை கூட்டத்தினர் அமைதியாக கவனித்தனர். அமைதி!..... குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும்!.... அப்படிப்பட்ட அமைதி! வழுக்கு மரத்தின் உச்சிக்கு வந்த சிவா அதன் மேல் வயிற்றை வைத்துப் படுத்தான்! பிறகு மெதுவாக இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் காற்று வெளியில் தூக்கினான்! அமைதியுடனும், திகிலுடனும் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் கை தட்டி ஆர்பரித்தனர்! சிவாவின் வகுப்பு மாணவர்கள் "சூப்பர் சிவா!... சூப்பர் சிவா!' என்று முழங்கினர்! 

சிவா வழுக்கு மரத்திலிருந்து கீழே இறங்கி தரையில் நின்ற போது முன்னால் அமர்ந்திருந்த அமைச்சர் எழுந்து அவனுக்குக் கை கொடுத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்! தலைமையாசிரியருக்கும் கை குலுக்கினார்! 

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற, படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கினார். நமது சிவாவுக்கு சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது! அமைச்சர் தனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாடையை சிவாவுக்குப் போர்த்தியபோது கை தட்டல் பலமாகக் கேட்டது!  அம்மாவும் சந்திரா அக்காவும் கை தட்டுவதை மேடையிலிருந்து சிவா மகிழ்ச்சியுடன் பார்த்தான்! பள்ளி மாணவர்கள் அனைவருமே ""சூப்பர் சிவா!'' என்று வாழ்த்தொலி எழுப்பினர்! அந்த வாழ்த்தொலியில் இளங்கோ, அருளின் குரல்களும் கலந்திருந்தன. சிவா நன்றி உணர்ச்சியுடன் அவர்களைப் பார்த்துக் கையசைத்தான்!

(முற்றும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com