புளியங்காய்!

அவ்ளோதான்.. மாட்டியாச்சு.. தம்பி, அந்த பிரேக்கைக் கொஞ்சம் புடிச்சுப் பாரு..
புளியங்காய்!

அரங்கம்
 காட்சி : 1,
 இடம் : வகுப்பறை, நேரம் : மாலை 3.55,
 மாந்தர் : கதிரேசன், தனபால், வைத்தியலிங்கம்
 
 (வைத்தியலிங்கம் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். தனபால் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான். முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் கதிரேசனின் முதுகை ஸ்கேலால் தொடுகிறான். கதிரேசன் லேசாகத் தலையைத் திருப்புகிறான். )
 தனபால் : ( முணுமுணுப்பது போல்) புளியங்காய் அடிக்க போலாமா ? கொத்துக் கொத்தா இருக்கு.. காலையிலதான் பார்த்தேன் ..
 கதிரேசன் : (முணுமுணுப்பது போல்) இன்னிக்கா ? லேட் ஆயிடும் .. அம்மா திட்டுவாங்க ..
 தனபால் : ( முணுமுணுப்பது போல்) ம்ஸ்ஸ்ஸ்.. லேட் எல்லாம் ஆகாதுடா .. கரெக்ட் டைமுக்குப் போயிரலாம் .. நாலஞ்சு கொத்து போதும். உப்பு மிளகாய்த்தூள் பொடிகூட வெச்சிருக்கேன் ..
 (கதிரேசன் எச்சில் ஊறும் வாயைத் துடைத்துக்கொள்கிறான். )
 கதிரேசன் : ( முணுமுணுப்பது போல்) நாம ரெண்டு பேர் மட்டும்தான் போறோமா..?
 தனபால் : ( முணுமுணுப்பது போல்) ஆமா..
 (வைத்தியலிங்கம் தனபாலின் மீது சாக்பீûஸ வீசுகிறார். )
 வைத்தியலிங்கம்: ஏன்டா.. இன்னும் ரெண்டு நிமிஷத்துல பெல் அடிச்சிருவாங்க ....அதுக்குள்ள பேசியாகணுமா ?
 தனபால் : (எழுந்து நின்று) சந்தேகம் கேட்டேன் சார்...
 வைத்தியலிங்கம் : சந்தேகமா ? நீயா ? நம்பிட்டேன் ..
 (மாணவர்கள் சிரிக்கிறார்கள். தனபால் தலையைச் சொறிகிறான்.... மணி அடிக்கிறது. )
 
 காட்சி : 2,
 இடம் : பள்ளி வளாகம், நேரம் : மாலை 4.15,
 மாந்தர் : கதிரேசன், தனபால், சுகேஷ்.
 
 (தனபால் மிதிவண்டியை எடுக்க காத்திருக்கிறான். கதிரேசன் வருகிறான். )
 கதிரேசன் : இந்த சுகேஷோட பெரிய தலைவலிடா .. ஏன்தான் இப்படியெல்லாம் இருக்காங்களோ !
 தனபால் : என்னடா ஆச்சு?
 கதிரேசன்: வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும் அம்மாகிட்ட சொல்லிடுனா, நானும் கூட வர்றேங்கிறான்..
 தனபால் : அவன்கிட்ட எதுக்குடா இதைப் பத்தி சொன்னே ?
 கதிரேசன் : அவங்க இப்போ எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் வாடகைக்கு வந்திருக்காங்க.. அதான் ..
 தனபால் : அதுக்குனு இப்படி உண்மையை சொல்லணுமா ?
 கதிரேசன்: என்னைப் பத்தி தெரியும்லடா.. எதுவாயிருந்தாலும் வீட்டுல மறைக்கமாட்டேன் ..
 தனபால் : ஓ.. இது வேறையா ! அவன கூட்டிட்டுப் போலான்டா, ஆனா அவன் மத்தவங்ககிட்ட சொல்லிட்டானா கூட்டம் கூடிரும்.. ஒரே நாள்ல மரத்தையே காலி பண்ணிருவாங்க...
 கதிரேசன்: இதோ வர்றான் பார்.. ஏதாவது சொல்லி சமாளி..
 (சுகேஷ் ஓடி வருகிறான். அவன் கையில் ஒரு டிஃபன் பாக்ஸ் இருக்கிறது. தனபால் அவனை வெறுப்புடன் பார்க்கிறான். )
 
 காட்சி : 3,
 இடம் : காடு, நேரம் : மாலை 4.45,
 மாந்தர் : கதிரேசன், தனபால், சுகேஷ்.
 
 தனபால் : சுகேஷ்.. இந்த ஒத்தையடிப் பாதையில சைக்கிள் போவாது ....நீ இதைப் பார்த்துக்கிட்டு இங்கேயே நில்லு.. நாங்க சீக்கிரமா வந்திர்றோம்..
 சுகேஷ் : உள்ள ரூட் இருக்கு-ண்ணா .. சைக்கிள் போகும்..
 கதிரேசன் : (கோபமாக) சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சுனா அவனும் நம்மள மாதிரி நடந்துதான் வரணும்.. நம்ம வீடாவது பக்கம்.. தனபால் வீடு?
 சுகேஷ் : ஓ.கே-ண்ணா.. ஓ.கே-ண்ணா.. வெயிட் பண்றேன்..
 
 (மிதிவண்டியை நிறுத்திவிட்டு இருவரும் ஒற்றையடிப் பாதையில் செல்கிறார்கள். சுகேஷ் நிற்கும் மிதிவண்டியின் மீது ஏறி அமர்கிறான். )
 
 காட்சி : 4,
 இடம் : காடு, நேரம் : மாலை 5.15,
 மாந்தர் : கதிரேசன், தனபால், சுகேஷ்.
 
 (தனபாலும் கதிரேசனும் புளியமரத்தின் வேர் மீது அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அருகே ஒரு துணிப்பை நிறைய புளியங்காய்கள் இருக்கின்றன. கதிரேசன் புளியங்காயை உப்புமிளகுத் தூளில் தொட்டு கடிக்கிறான். )
 கதிரேசன்: ஆஹா.. என்னதான் சாக்லெட், வேஃபர் பிஸ்கெட்டெல்லாம் சாப்பிட்டாலும் நம்ம ஊர் புளியங்காய்தான் பெஸ்ட்டா ..
 தனபால்: ( மென்றுகொண்டே) ம்ம்ம்... உண்மைதான்.. அதே சமயம் இந்த மரக்காயைப் பத்தி மத்தவங்களுக்கு தெரிஞ்சுதுனா..
 கதிரேசன் : ( இடைமறித்து) ஏன்டா அதையவே சொல்லிட்டிருக்கே ?
 தனபால் : சுகேஷை நீ கூட்டிட்டுவந்திருக்கக் கூடாது..
 கதிரேசன் : அடேயப்பா.. நான்தான் போய் அவனை வம்படியா இழுத்திட்டு வந்தேன்.... போடா டேய்..
 தனபால் : சரி அத விடு.. அவங்கிட்ட என்ன சொல்லணும்னு தெரிஞ்சிருச்சு.. நான் பாத்துக்கிறேன்..
 கதிரேசன்: ஏதோ சொல்லு.. மறக்காம இந்த துணிப்பையை உன் ஸ்கூல் பேக்குல வெச்சுக்கோ.. ரெண்டு நாளைக்கு ரெண்டு பேரும் சாப்பிடலாம்..
 (தனபால் புளியங்காய் நிறைந்த துணிப்பையை ஸ்கூல் பேக்கில் வைக்கிறான். )
 
 காட்சி : 5,
 இடம் : காடு, நேரம் : மாலை 5.25,
 மாந்தர் : கதிரேசன், தனபால், சுகேஷ்.
 
 (சுகேஷ் ஐந்து புளியங்காய்களை டிஃபன் பாக்ஸில் வைத்து மூடுகிறான். )
 சுகேஷ் : அண்ணா.. அவ்ளோதான் இருந்துச்சா ?
 தனபால் : ஆமாடா.. ஏற்கெனவே மரத்துல ஏறி நிறைய பேர் பறிச்சிட்டாங்க போல..
 (கதிரேசன் ரகசியமாகச் சிரிக்கிறான். தனபால் மிதிவண்டியைத் தள்ளுகிறான். முன் சக்கரம் ஒரு முள்ளின் மேல் ஏறுகிறது. காற்றுப் போகும் சத்தம் கேட்கிறது. )
 கதிரேசன்: டேய்.. எங்கயோ பாம்பு சத்தம் போடுது..
 தனபால் : ம்ஸ்ஸ்ஸ்.. அங்க பாருடா.. பஞ்சர்.. எல்லாம் நேரம் !
 கதிரேசன் : இப்போ என்ன பண்றது?
 தனபால் : நட்ராஜா சர்வீஸ்தான்..வீட்டுக்குப் போனா என்ன சொல்லுவாங்களோ !
 சுகேஷ் : தன்ஸ் அண்ணா.. கொஞ்ச நேரம் இங்கேயே வெயிட் பண்றீங்களா நான் வந்துர்றேன்..
 கதிரேசன் : டேய்.. இது என்ன எடம்.. இருட்டு வேறே..எங்க போறேங்கிற?
 சுகேஷ் : இருங்க வந்துர்றேன்..
 (சுகேஷ் ஓடுகிறான். தனபாலும் கதிரேசனும் அவனைப் பார்க்கிறார்கள். )
 
 காட்சி : 6,
 இடம் : சாலை ஓரம். நேரம் : மாலை 5. 45,
 மாந்தர் : கதிரேசன், தனபால், சுகேஷ், நல்லசிவம்.
 
 நல்லசிவம் : அவ்ளோதான்.. மாட்டியாச்சு.. தம்பி, அந்த பிரேக்கைக் கொஞ்சம் புடிச்சுப் பாரு..
 (தனபால் பிரேக்கை அழுத்துகிறான். )
 நல்லசிவம் : ஓ.கே. டைட்டாத்தான் இருக்கு..
 தனபால் : தேங்க்ஸ்-ண்ணா.. எவ்ளோ ரூபா? காசு நாளைக்கு தரட்டுமா?
 நல்லசிவம் : இதுல என்னப்பா. . இதுக்குப் போய் காசெல்லாம்.. நான் என்ன பஞ்சர் தொழிலா பண்றேன் ?
 கதிரேசன் : அப்போ நீங்க பஞ்சர் ஒட்டுறவர் இல்லியா..... இவ்ளோ டூல்ஸ் வெச்சிருக்கீங்க?
 நல்லசிவம் : நான் டீக்கடை வெச்சிருக்கேன் தம்பி.. சைக்கிள்லதான் போய் வரவேண்டியிருக்கும்.. கரடு முரடான ஏரியாவுல இப்பிடினு அழுத்துனாலே பஞ்சராயிடுது.....அதான் எல்லாம் நானே வாங்கிட்டேன் ..
 தனபால் : சுகேஷ்.. உனக்கெப்புடி இவர்கிட்ட இதெல்லாம் இருக்குனு தெரியும் ?
 சுகேஷ் : முன்னாடி இந்த ஏரியாவுலதான் குடியிருந்தோம்.. தெரிஞ்சவர்தான் ண்ணா..
 நல்லசிவம் : டிப்போக்குப் புறப்பட்டுடேன்..... சுகுதான் அண்ணண் வண்டி பஞ்சர்னு சொல்லி புடிச்சு இழுத்துட்டு வந்துட்டான்..
 (சுகேஷ் சிரிக்கிறான். தனபால் அவனைப் பார்க்கிறான்.)
 நல்லசிவம் : (சுகேஷிடம்) இந்நேரத்துல வீட்டுக்குப் போகாம இங்க எங்கடா சுத்திட்டிருக்கே ?
 சுகேஷ் : புளியங்காய் அடிக்க வந்தோம் ண்ணா. .
 நல்லசிவம் : அப்டியா, எத்தனை கிடைச்சது ?
 சுகேஷ் : கொஞ்சம்தான் ண்ணா..
 தனபால் : (இடைமறித்து) நிறையா இருக்கு சுகேஷ்.. இந்தா இது உனக்குத்தான்..
 (தனபால் துணிப்பை நிறைய புளியங்காயை நீட்டுகிறான். சுகேஷ் மகிழ்ச்சியுடன் வாங்குகிறான். கதிரேசன் தனபாலை வியப்பாகப் பார்க்கிறான். )
 (திரை)
 க. சங்கர்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com