அகில்குட்டியின் டைரி!: பொம்மை

மாலி பெரியப்பா வந்திருந்தார்! (அதான் சுவாமிநாதனோட அப்பா) அவர் மூணு குரங்கு பொம்மைகள் கொண்டுவந்தார்! அந்த பொம்மைகளை பார்த்தபோது வித்தியாசமா இருந்தது! 
அகில்குட்டியின் டைரி!: பொம்மை

மாலி பெரியப்பா வந்திருந்தார்! (அதான் சுவாமிநாதனோட அப்பா) அவர் மூணு குரங்கு பொம்மைகள் கொண்டுவந்தார்! அந்த பொம்மைகளை பார்த்தபோது வித்தியாசமா இருந்தது! குரங்குகள் ஏதாவது குறும்பு செய்துகொண்டுதானே இருக்கும்?.... ஆனால் இந்த பொம்மைகள் அப்படி இல்லை.... ஒரு குரங்கு கண்களை மூடி இருந்தது!.... இன்னொரு பொம்மை காதுகளை மூடிக்கொண்டு இருந்தது! இன்னொரு பொம்மை வாயை மூடிக்கொண்டு இருந்தது! எனக்கு சிரிப்பாக வந்தது! ரகுவுக்கும்தான்! ஆனா இந்த பொம்மைகளை ஏன் இப்படி செஞ்சிருக்காங்கன்னு மனசுக்குள்ளே கேள்வியும் வந்தது! 

""ஏன் பெரியப்பா,.... இந்த பொம்மைகள் இப்படி இருக்கு?....'' அப்படீன்னு கேட்டேன்! அவரு சிரித்துக்கொண்டே "" இதுக்கு ஒரு பெரிய அர்த்தம் இருக்கு! இந்த பொம்மை ரொம்ப பிரபலமான பொம்மை!.... அது மட்டும் இல்லே!... இது மகாத்மா காந்திக்கு ரொம்ப பிடிச்ச பொம்மை!...'' அப்படீன்னார். 

எனக்கும் ரகுவுக்கும் ரொம்ப ஆர்வமா இருந்தது! ""சொல்லுங்க... இதுக்கு என்ன அர்த்தம்?'' அப்படீன்னு ரகுவும் கேட்டான். 

""அதாவது தீயதைப் பார்க்கக் கூடாது!....தீயதைக் கேட்கக் கூடாது!..... தீயதைப் பேசக்கூடாது!....'' அப்படீன்னு இந்த பொம்மைகளுக்கு அர்த்தம்!'' அப்படீன்னார் பெரியப்பா! ""ஓ!.... அப்படி ஒரு அர்த்தம் இருக்கா இந்த பொம்மைகளுக்கு!...'' ன்னு ரகு சொன்னான். 

ஜானகி சித்தியும் வந்துட்டாங்க!..... பெரியப்பா தொடர்ந்து, ""ஏன் அப்படி சொல்லியிருக்காங்க தெரியுமா?'' ன்னார்.

""சொல்லுங்க...'' ன்னேன்  நான்.

""அதாவது கெட்ட விஷயங்கள் நம்ம மனசிலே பதியக் கூடாதுங்கறதுக்காகத்தான், அதைப் பார்க்கக் கூடாதுங்கறாங்க....கெட்ட விஷயங்களை நாம கேட்கவே கூடாதாம்!.... ஏன்னா அந்த வார்த்தைகள் நம்ம மனசிலே அப்படியே தங்கிடும்!... நாம பார்த்த தீய காட்சிகளையோ, கேட்ட தீய செய்திகளையோ பற்றிப் பேசினால் அது மத்தவங்க காதிலே விழுந்துடும்!.... அது அவங்க மனசிலே தங்கிடும்!....அவங்க அதை அப்படியே மனசிலே வெச்சுக்க முடியாம மத்தவங்க கிட்டே  கொஞ்சம் கற்பனையோட பரிமாறிப்பாங்க....  இப்படியே தீய விஷயங்கள் சமுதாயத்திலே பரவிடும்! அதனாலே நாம ஜாக்கிரதையா இருக்கணும்! அதனாலே தீய விஷயங்களை பார்க்கவோ, கேட்கவோ, பேசவோ கூடாதுங்கறதுலே நாம தீர்மானமா இருக்கணும்! அதைத்தான் இந்த பொம்மைகள் நமக்கு சொல்லுது!'' அப்படீன்னு முடிச்சார் மாலி பெரியப்பா. 

""தீயவை தீய பயத்தலால் தீயவை .... தீயினும் அஞ்சப்படும்' னு வள்ளுவரும் சொல்லயிருக்காரில்லே!'' அப்படீன்னாங்க ஜானகி சித்தி.

""எனக்கு ஒரு செய்யுள் ஞாபகம் வருது சித்தி! இந்தக் குரங்கு பொம்மைகளுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும் செய்யுள்! 

தீயாரைக் காண்பதுவும் தீதே ; திரு அற்ற 
தீயார் சொல் கேட்பதுவும் தீதே 
தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே - அவரோடு
இணங்கி இருப்பதும் தீது!''  

 ""சபாஷ்!....'' அப்படீன்னார் பெரியப்பா!.... சித்தியும்தான்!
அகில் குட்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com