சாதனை தங்கம் கோமதி உயர்க!
By DIN | Published On : 18th May 2019 10:00 AM | Last Updated : 18th May 2019 10:00 AM | அ+அ அ- |

பாராட்டுப் பாமாலை! 39
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
கத்தாரின் தோகாவில் நடந்த
கோலமிகு ஆசியத் தடகள
முத்தான சேம்பியன்ஷிப் களத்தில்
முதல் தங்கம் பெற்றாரே கோமதி!
திருச்சியதன் முடிகண்டம் பெற்ற
திரு மாரி முத்தவரின் மகளே!
வருங்காலம் உனதாகும் புகல்வேன்;
வென்றெடுப்பாய் ஒலிம்பிக்கில் இனியே!
தந்தையே உனைவார்த்த ஆசான்!
தவறினார் அவருமே! உன்றன்
பிந்தையப் பயிற்றுநரும் இழந்தாய்!
இருந்தாலும் தடகளத்தில் வென்றாய்!
விவசாயி மகளாய் வளர்ந்தாய்!
வேதனைகள் பல கடந்து உயர்ந்தே
நவரத்தின மாலையென தங்கம்
நீ பெற்றாய்!.. இந்தியாவின் பெருமை!
காத்தவளே! முதல் தங்கம் பெற்று - தமிழ்
நாட்டிற்குப் பெருமையினைச் சேர்த்து
பூத்தவளே! உனைப்போற்றி நாங்கள்
புவனமிதில் வாழ்த்துகிறோம்! உயர்க!
திருச்சியதன் ஆட்சியரும் மக்கள்
திருவிழா நாள் போலக் கூடி
வரவேற்ற காட்சியதை நாங்கள்
வரலாறாய்ப் பார்க்கின்றோம் இன்றே!
காவலராம் ராசாமணி பயிற்சி
கொடுத்ததனை மறவாமல் கூறும்
பூவை நீ வாழி நீ! வாழி நீடு!
பாரினிலே உயர்ந்திடுவாய் வாழி!
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்
தந்திட்டார் பத்துலட்சம் பரிசாய்!
அமிழ்தான இதைத்தொட்டு உனக்கே
அரவணைப்பு பல கிடைக்கும்! உண்மை!
உலகத்தட களப் போட்டி தன்னில்
உயர் இடத்தைப் பிடித்திடவே எங்கள்
உளமார்ந்த வாழ்த்துகள் தந்தோம்
உன் தந்தை மகிழ்ந்திடுவார் அன்றோ!
-கவிச்சிற்பி இளம்விழியன்
இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று,
அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...