மாங்கொட்டைகள்

காலை நேரம். பசியோடு இருந்த ஒரு ஏழை விவசாயி, இரண்டு மாம்பழங்களை வியாபாரியிடமிருந்து வாங்கி, பழத்தைத் தின்றுவிட்டு, கொட்டைகளைத் தூக்கி தூர வீசிட இரண்டு கொட்டைகளும் ஒரே இடத்தில் அருகருகே விழுந்தன.
மாங்கொட்டைகள்

காலை நேரம். பசியோடு இருந்த ஒரு ஏழை விவசாயி, இரண்டு மாம்பழங்களை வியாபாரியிடமிருந்து வாங்கி, பழத்தைத் தின்றுவிட்டு, கொட்டைகளைத் தூக்கி தூர வீசிட இரண்டு கொட்டைகளும் ஒரே இடத்தில் அருகருகே விழுந்தன.
 நேரம் ஆக ஆக சுட்டெரித்தது வெயில், வறுத்தெடுத்தது அனல். "ஐயோ சுடுகிறதே... சுடுகிறதே... என்னால் தாங்க முடியவில்லையே'' எனக் கதறியது ஒரு மாங்கொட்டை. மற்றொரு மாங்கொட்டையோ, ""பொறுத்துக்கொள் எந்தத் துன்பமும் நிரந்தரமல்ல. இப்போது நீ துன்பத்தைக் கண்டு துவண்டு போகாமல் சதித்துக் கொண்டால் பிறகு இன்பம்தான்'' என புத்தி சொன்னது.
 அதற்கு, வெப்பத்தால் அலறித் துடித்த மாங்கொட்டையோ "உன் உபதேசம் எனக்குத் தேவையில்லை. என்னால் வெயிலின் உக்கிரத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை'' என மீண்டும் அலறிப் புலம்பியது.
 இரண்டு மாங்கொட்டைகளின் உரையாடல் அந்தப் பக்கமாக வந்த ஒரு வழிப்போக்கரின் காதில் விழ, இரண்டு மாங்கொட்டைகளையும் அருகில் சென்று உற்றுப் பார்த்தார். அப்போது வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அலறித் துடித்த மாங்கொட்டை, "அண்ணே... அண்ணே... என்னை சுட்டெரிக்கிறது இந்த சூரியன். அதன் வெப்பத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தயவு செய்து என்னை பக்கத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் குட்டைக்குள் தூக்கிப் போட்டுவிடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்'' எனக் கெஞ்சிட, வழிப்போக்கர் அந்த மாங்கொட்டையைத் தூக்கி தண்ணீர் குட்டைக்குள் வீசினார்.
 தண்ணீரின் குளிரிச்சியால் குளிர்ந்து மகிழ்ந்த மாங்கொட்டை ஆகா ரொம்ப குளிர்ச்சியாக இதமாக, சுகமாக இருக்கிறது. பாவம் அந்த மாங்கொட்டை அனலில் கிடைந்து வெந்து சாம்பலாகட்டும்'' என்று மகிழ்ச்சியில் திளைத்தது.
 நாட்கள் சென்றன. கரு மேகம் திரண்டு மழை பொழிந்தது. மழையில் நனைந்த மாங்கொட்டை முளைத்து, வேர் ஊன்றி, துளிர்விட்டது. தொடர்ந்து பெய்த மழையால் வேகமாக வளர்ந்தது மாமரக்கன்று. நிலத்தின் உரிமையாளர் வளர்ந்த மரக்கன்றுக்கு பாதுகாப்பாக முள் வேலி அமைத்தார். மரக்கன்று மாமரமாகி கனி தர ஆரம்பித்தது. பறவைகள் அதன் கிளையில் கூடுகட்டி வசிக்கின்றன. வழிப்போக்கர்கள் மாமர நிழலில் தங்கி இளைப்பாறிச் செல்கின்றனர். வாயார வாழ்த்துகின்றனர்.
 அன்று வெயிலின் துன்பத்தையும், மழைத்துளியின் இன்பத்தையும் சமமாக பாவிக்க தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதால், பலருக்கும் பயன்படும் விருட்சமாக உயர்ந்து வளர்ந்து நிற்கிறது. வெயில் தந்த வெப்பத்தின் துன்பத்தை தற்காலிகமாகத் தாங்கிக்கொள்ள முடியாத மாங்கொட்டை தண்ணீர் குட்டைக்குள் மூழ்கி... அழுகி ஒன்றுக்கும் உதவாமல் போனது.
 துன்பங்களும், துயரங்களும் நிரந்தரமல்ல. துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இருந்தால் பின்னர் நிரந்தர இன்பம்தானே!
 -எஸ். டேனியல் ஜூலியட்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com