நான் ஒருத்தன் பண்ணினா என்ன ஆயிடும்?

இப்போ நீ ஒருத்தன் மட்டும் பெயில் ஆவறதாலே இப்ப என்னடா கெட்டுப் போச்சுன்னு நாங்க கேட்டா உனக்கு எப்படியிருக்கும்?
நான் ஒருத்தன் பண்ணினா என்ன ஆயிடும்?

அரங்கம்
காட்சி -1
 இடம் - சாலை, மாந்தர் - ராமு,
 ஸ்ரீகாந்த், சந்திரன், பாண்டி, சுப்பு.
 ராமு : ச்சே!.... ஒவ்வொருத்தனும் பபுள்கம் மென்று எவ்வளவு பெரிய முட்டை, முட்டையா விடுறாங்க!.... எனக்கு வர மாட்டேங்குதே!.... விடா முயற்சி செய்யணும்னு ஆசிரியர் சொல்லியிருக்காரு...
 ((ஸ்ரீகாந்த் அங்கு வருதல்)
 ஸ்ரீகாந்த்: டேய்,... பபுள்கம் சாப்பிடறது நம்ம உடல் நலத்துக்கு நல்லது இல்லேன்னு ஆசிரியர் சொன்னாங்கல்லே?
 ராமு : ஆமாம்.... பெரிய எம்.பி.பி.எஸ். டாக்டரு வந்துட்டாரு புத்தி சொல்ல!... போடா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு!...
 (ஸ்ரீகாந்த் ராமுவை முறைத்துக்கொண்டே
 செல்லுதல்)
 ராமு : ச்சீ!.... முட்டையும் வரமாட்டேங்குது ஒண்ணும் வரமாட்டேங்குது!.... இதெல்லாம் ஒரு பபுள்கம்மா! தூ...
 (சந்திரன் அங்கு வருதல்)
 சந்திரன் : டேய் ராமு!.... சாலையில் எச்சில் துப்புறியே,.... இதனால் நோய்க்கிருமி பரவுதுன்னு நம்ம பாடத்துலே படிக்கிறோமே நினைவில்லையா உனக்கு?
 ராமு : வேறே எங்கடா துப்பறது? நான் ஒருத்தன் எச்சில் துப்பறதாலே என்னடா ஆயிடும்? அறிவுரை சொல்ல வந்துட்டான்! போடா!.... போ!
 (சந்திரன் செல்கிறான்)
 ராமு : (தனக்குள்) இது வேறே அவசரமா வருது!.... எங்க போறது?.... பரவாயில்லே.... இந்தச் சாலை ஓரத்துலே போகலாம்!.... திறந்த வெளியில் போறது எவ்வளவு சுகம்மா இருக்கு!
 (பாண்டி அங்கு வருதல்)
 பாண்டி : டேய் ராமு!
 ராமு : இருடா வர்றேன்!
 பாண்டி : டேய் ராமு!... இப்படி சாலையிலே சிறுநீர் கழிக்கக் கூடாதுடா!.... பட்டப் பகல்லே இப்படி சாலையிலே போறியே!....உனக்கு வெட்கமா இல்லே!....
 ராமு : இதுக்கெல்லாம் வெட்கப்பட்டா முடியுமா?....எல்லாருக்கும் வர்றதுதானே!.....
 பாண்டி : இல்லடா ராமு,.... இதனாலே சுற்றுச் சூழல் எல்லாம் கெட்டுப்போகுமில்லே!.....
 ராமு : ஏண்டா,.... இவ்வளவு பெரிய உலகத்திலே ஒரு மூலையிலே நான் ஒருத்தன் இத்துனூண்டு போறதுலே என்னடா சுற்றுச் சூழல் கெட்டுப் போயிடும்?...
 பாண்டி : இப்படியே எல்லாரும் சொல்லிக்கிட்டிருந்தா....கெட்டுப் போகாதா?...
 ராமு : போடா, வேலையைப் பார்த்துக்கிட்டு!..... வந்துட்டான்!... பெருசா சொல்ல!....
 (ராமு பையிலிருந்து
 சிப்ஸ் பாக்கெட்டை
 எடுத்துப் பிரித்துத் தின்கிறான்.)
 ராமு : (மனதிற்குள்) இந்த சிப்ûஸத் தின்னுட்டு பிளாஸ்டிக் கவரை சாலையில் போட்டாக்கூட எவனாவது வந்துடுவான் புத்தி சொல்ல....இதை எங்கே போடலாம்?....ஆங்... இந்தத் தண்ணீர் போற கால்வாயிலே போட்டுடலாம்!
 (அங்கே சுப்பு வருதல்)
 சுப்பு : டேய்!....டேய்!... ராமு, பிளாஸ்டிக் கவரை தண்ணீர் போற சாக்கடைக் கால்வாயில் போடறியே அது அடைச்சுக்கிட்டு தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசி, கொசுத்தொல்லை வராதாடா?
 ராமு : டேய், நான் ஒருத்தன் போட்டா என்னடா ஆயிடும்?.... நான் மட்டுமா பிளாஸ்டிக் கவரை சாக்கடைக் கால்வாயில் போட்டிருக்கேன்!.... அங்க பாருடா!... எத்தனை பேரு போட்டிருக்காங்க.... அவங்களை எல்லாம் போய்க் கேட்க மாட்டீங்களே.... அது என்ன ஒவ்வொருத்தனா வந்து என்னையே கேட்கறீங்க?... நான் ஒருத்தன் பிளாஸ்டிக் கவரைப் போட்டதாலேதான் தண்ணி தேங்குதா?.... எல்லாரையும் கொசு கடிக்குதா?....
 சுப்பு : இவனெல்லாம் எப்பத்தான் திருந்தப் போறானோ?.
 (ராமு பேருந்தில் ஏறுகிறான்....பேருந்தில் பள்ளியில் கூடப் படிக்கும் வாசீம் இருக்கிறான்.)
 
 காட்சி - 2
 இடம் - சாலை, மாந்தர் - ராமு, வாசீம்
 (பேருந்திலிருந்து ராமுவும் வாசீமும்
 இறங்குகிறார்கள்)
 வாசீம் : டேய் ராமு!... நீ பஸ்லே டிக்கட் வாங்கவே இல்லையே....
 ராமு : நீ சொல்றது சரிதான்!.... நான் டிக்கட் வாங்கவே இல்லே.... கண்டக்டரும் அதைக் கண்டுக்கவே இல்லே...
 வாசீம் : என்னடா இது?.... டிக்கெட் வாங்காம பயணம் செய்யறது தப்பில்லையா....
 ராமு : ஆரம்பிச்சிட்டாண்டா!.... டேய்!.... நான்ஒருத்தன் டிக்கெட் வாங்காததாலே இந்தியாவின் பொருளாதாரம் கெட்டுப் போயிடுமா என்ன?
 வாசீம் : மாட்டிக்கிட்டேன்னா ரொம்ப அவஸ்தையா ஆயிடும்!....
 ராமு : தெரியும் போடா!....
 
 காட்சி - 3
 இடம் - பள்ளி, வகுப்பறை, மாந்தர் - ராமு,
 சந்திரன், ஸ்ரீமான், சுப்பிரமணி, பாண்டி,
 (அன்று தேர்வு.... ராமு காலதாமதமாக வருகிறான்)
 சந்திரன் : டேய் ராமு!.... நீ இவ்வளவு காலம் தாழ்த்தி வருவதை நம் தலைமையாசிரியர் பார்த்தாரு.... உனக்கு தண்டனைதான் கிடைக்கும்!....
 ராமு : நான் ஒருத்தன் காலம் தாழ்த்தி வர்றதாலே என்னடா கெட்டுப்போச்சு!.... சும்மா என் பேச்சுக்கு வராதீங்கடா!...
 (மாணவர்கள் தங்களுக்குள் ராமுவைப் பற்றிப் பேசிக்கொள்ளுதல்)
 ஸ்ரீமான் : டேய் சந்திரா, ராமு ஏண்டா எப்பப் பார்த்தாலும் நான் ஒருத்தன் செய்யறதாலே என்ன ஆயிடும்னு கேட்கிறான்? தான் செய்யறது தப்புன்னு எப்படா புரியும் அவனுக்கு?
 சந்திரன் : அதாண்டா எனக்கும் புரியலே....
 ஸ்ரீமான் : எனக்கும் புரியலேடா!....
 சுப்பிரமணி : எனக்கும் கூடப் புரியலே...
 பாண்டி : உங்களுக்கெல்லாம் புரியாதபோது எனக்கு மட்டும் எப்படிப் புரியும்?.... சரி வாங்கடா தேர்வு எழுதப் போகலாம்!
 ராமு : ஐயோ இன்னிக்குத் தேர்வு இல்லே,.... மறந்துட்டேன்,..... இதென்னடா கேள்வித்தாள்லே ஒண்ணுமே தெரியலே.... கேள்வித்தாளை மாற்றிக் கொடுத்துட்டாங்களா?....
 பாண்டி : டேய், அது நம்ம வகுப்புக் கேள்வித்தாள்தான்.... சரியா பாரு!...
 ராமு : ஆமாம்!.... சரிதான்!.... ஒரு கேள்விகூடத் தெரியலையே.... (மனதிற்குள்)....அதான் நம்ம நண்பனுங்க இருக்காங்களே... ஆளுக்கு ஒண்ணு கேட்டு எழுதிட வேண்டியதுதான்!
 (ராமு ஒவ்வொருவரையும் கேட்கிறான்.
 எல்லோரும் மறுத்து விடுகிறார்கள்)
 (சில நாட்கள் செல்கின்றன)
 
 காட்சி -4
 இடம் - பள்ளி வளாகம், மாந்தர் - ராமு, சந்திரன், மற்றும் நண்பர்கள்.
 (பள்ளியில் ரிசல்ட் ஒட்டியிருக்கிறார்கள்)
 அனைவரும் : இன்னைக்கு ரிசல்ட்!....
 ராமு : நீங்க எல்லோரும் பாஸா?
 எல்லோரும் : ஆமாண்டா!... நாங்க எல்லோரும் பாஸ்! உன் நம்பர் பாருடா!
 ராமு : எங்கடா?
 (ரிசல்ட் ஒட்டியிருக்கும் பலகைகளில் தேடுகிறான்)
 எல்லோரும் : உன் நம்பர் இந்தப் பலகையிலேதான் இருக்கும் பாருடா!..... டேய், ராமு, பாஸாயிட்டா எங்களுக்கு இனிப்பு வாங்கித் தரணும்!
 ராமு : இருங்கடா!.... என் நம்பரையே காணோமே!....
 ஸ்ரீகாந்த் : பக்கத்து வகுப்பு லிஸ்டுலே பாரு!
 ராமு : ம்ஹூம் என் நம்பரையே காணோமே!
 எல்லோரும் : என்னடா ராமு?
 ராமு : நான் பெயில்டா!
 சந்திரன் : இப்போ நீ ஒருத்தன் மட்டும் பெயில் ஆவறதாலே இப்ப என்னடா கெட்டுப் போச்சுன்னு நாங்க கேட்டா உனக்கு எப்படியிருக்கும்?
 (ராமு வருத்தமாயிருக்கிறான்)
 ஸ்ரீகாந்த் : சந்திரா அவனை அப்படிச் சொல்லாதே,... அவனே பெயிலாயிட்டோம்னு வருத்தமா இருக்கான்!... நீ கவலைப் படாதே ராமு, நீ ஒருத்தன் பொறுப்பாப் படிச்சா உன் வீட்டிலே இருக்கிறவங்க சந்தோஷப்படுவாங்க... ஒவ்வொருத்தனும் பொறுப்பா இருந்தாத்தான் நாட்டுக்கும் நல்லது!... வீட்டுக்கும் நல்லது!
 ராமு : இப்போ அதை நல்லா உணர்ந்துட்டேன்....
 திரை
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com