நதியாவின் வானவில்!

நதியா வானவில்லின் தோழி! ஐந்து வயதுச் சிறுமி! ஓர் ஆற்றங்கரையோரம் அவள் வசித்து வந்த வீடு இருந்தது.
நதியாவின் வானவில்!

நதியா வானவில்லின் தோழி! ஐந்து வயதுச் சிறுமி! ஓர் ஆற்றங்கரையோரம் அவள் வசித்து வந்த வீடு இருந்தது. எப்போதெல்லாம் மழை வருகிறதோ அப்போதெல்லாம் அந்த ஆற்றங்கரையில் வானவில் தோன்றும்! நதியாவும் வானவில்லும் ஆற்றின் கரையோரமாக நடந்து செல்வார்கள். அப்போது வானவில் நிறைய விஷயங்களை அவளோடு பேசியபடி வரும்! அது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
 ஒரு மழைகாலப் பொழுதில்தான் முதன்முதலாக வானவில் நதியாவிற்கு அறிமுகம் ஆனது. அன்று ஆற்றில் நீர் அதிக சலசலப்பின்றி பளிங்கு போன்று ஓடிக் கொண்டிருந்தது. நதியா அதில் தனது முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அப்போது தண்ணீரில் அவளின் தலைக்குப் பின்னால் வண்ணங்களைக் குழைத்தெடுத்தது போன்ற ஒரு பிம்பம் தெரிவதைக் கண்டாள். ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். வானவில்! வானவில்லைக் கண்டு அவள் அளவற்ற மகிழ்ச்சி கொண்டாள். கள்ளங்கபடம் இல்லாத சிறுமியின் சிரிப்பு வானவில்லின் மனத்தைக் கொள்ளை கொண்டது. அது நதியாவோடு நட்பு பாராட்டியது.
 வானவில் வரும்போதெல்லாம் நதியா அதனுடன் நீண்டதூரம் நடக்கப் ஆசைப்படுவாள். ஆனால் வானவில் பாதி வழியிலேயே கரைந்து மறைந்து விடும். அதற்குக் காரணம் வானவில்தான்! ஒவ்வொரு முறை நடந்து செல்லும்போது ஏதேனும் பறவையோ மிருகமோ செடிகளோ வானவில்லின் நிறத்தால் கவரப்பட்டு அதனிடம் நிறத்தைக் கேட்கும். வானவில்லும் கொடுத்து விடும். இதனால் வானவில் அடர்த்தி குறைந்து மறைந்து விடும்.
 ஒருமுறை நதியாவும் வானவில்லும் நடந்து சென்று கொண்டிருந்த போது சூரியகாந்திப்பூ ஒன்று வந்தது. அது வெளிர் நிறத்தில் இருந்தது. அது வானவில்லிடம் "என்னைச் சுற்றி நீண்ட தாள்களைக் கொண்ட செடிகள் இருந்ததனால எனக்குப் போதுமான சூரியவெளிச்சம் கிடைக்கல! அதுனால நான் என் நிறத்தை இழந்துட்டேன்! எனக்கு நிறம் கொடேன்!'' என்றது. வானவில் மஞ்சள் வண்ணத்தை அளித்து சூரியகாந்திப்பூவை அழகாக்கியது.
 ஒருநாள் குயில் ஒன்று வந்தது. அது சாம்பல் வண்ணத்தில் இருந்தது. "நான் வசந்தகாலப் பொழுதில் ராகமிட்டுப் பாடி அனைவரையும் துயில் எழுப்புவேன்! புல்லாங்குழல் இசைக்கும் கண்ணனைப் போன்று எனக்குக் கருநீலநிறம் வேண்டும்!" – என்றது. வானவில் சிரித்தபடி தனது வண்ணங்களைக் குழைத்தெடுத்து கருநீலநிறத்தைத் தந்தது. குயில் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றது.
 பொன்வண்டுகள் வண்ணத்துப்பூச்சிகள் செடிகள் மலர்கள் கொடிகள் என்று அனைத்தும் வானவில்லிடம் நிறங்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டன. கேட்டவுடன் கொடுத்து விடும் வானவில்லின் இந்த குணம் நதியாவிற்கு ஆச்சரியத்தைத் தந்தது.
 "கேட்டவுடனே கொடுக்குறதுனாலதான சீக்கிரமா கரைஞ்சு போயிற! நீ இல்லைனு சொல்லலாமே?'' என்றாள் நதியா!
 "கேட்டா கிடைக்கும்ங்குற நம்பிக்கைலதான கேக்குறாங்க! நான் கரைஞ்சு போனா என்ன? ரொம்ப அழகா ரொம்ப அடர்த்தியா மேலும் புத்துணர்ச்சியோட திரும்பத் திரும்ப வர்றேனே!'' என்றது வானவில்!
 நதியா அமைதியாக இருக்கவே அது தொடர்ந்து பேசியது. "கொடுக்குறதுல நாம ஆறு மாதிரி இருக்கனும்!'' என்றது.
 "ஆறு மாதிரியா?'' என்று கேட்டாள் நதியா!
 "இப்ப மழைகாலம்! அதுனால ஆத்துல வெள்ளம் போயிக்கிட்டுருக்கு! கோடைல ஆறு எப்படி இருக்கும்?''
 "கோடைல ஆறு தண்ணீர் இல்லாம வறண்டு போயி இருக்கும்!''
 "அப்ப நீ ஆத்துல நடந்து போயிருக்கியா?''
 "ஓ... நடந்துருக்கேனே...! மணல் சுடும்!''
 "அப்ப உனக்கு தாகம் எடுத்தா நீ என்ன செய்வ?'' வானவில் கேட்டது.
 "ரொம்ப சிம்பிள்! ஆத்து மணலை லேசாத் தோண்டுனா அதுல ஊற்று இருக்கும்! அதைக் குடிச்சு என் தாகத்தைத் தணிச்சுக்குவேன்!'' என்றாள் அவள்!
 "தான் வறண்ட காலத்துல கூட தன்னோட ஊற்று நீரால மத்தவங்க தாகம் தணிக்கிறது ஆற்றோட உயர்ந்த குணம்! அதுனாலதான் கொடுக்குறதுல நாம ஆறு மாதிரி இருக்கனும்னேன்!'' என்றது வானவில்!
 "உன்கிட்ட நிறம் இருக்கு! ஆறுகிட்ட ஊற்று இருக்கு! என்கிட்ட என்ன இருக்கு மத்தவங்களுக்குக் கொடுக்குறதுக்கு!" – கேட்டாள் நதியா!
 "கல்வி இருக்கே! நல்லா படிச்சேன்னா அந்தக் கல்வி மூலமா மத்தவங்களுக்கு நீ உதவ முடியுமே!'' என்றது வானவில்! நதியா வானவில்லின் வார்த்தைகளை தலையசைத்து ஏற்றுக் கொண்டாள்.
 "நல்லவேளை! இன்னைக்கு யாரும் இதுவரை உன்கிட்ட வந்து நிறம் கேட்கலை! உன்னால என்கூட ரொம்ப தூரம் நடந்து வர முடியுது!" – என்றாள் அவள்!
 "நீ மழைச் சாரலுக்குப் பிடிச்சுருக்குற இந்தக் குடையோட நிறம் நீ போட்டுருக்குற பிராக்குக்குப் பொருத்தமா இல்லை! நான் அதை மாத்தப் போறேன்!'' என்றது வானவில்! அது தனது நிறத்தால் குடையை வண்ணமிகு அழகான குடையாக மாற்றியது.
 "நன்றி!'' – என்றாள் நதியா குடையை பார்த்தபடி! ஆனால் அந்த நன்றியைப் பெற்றுக் கொள்ள வானவில் அங்கே இல்லை.
 - முற்றும்-
 - மா.பிரபாகரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com