நாடகத்தில் நாய்! 

"நம்ம காவேரி நகர் ரெசிடென்ஷியல் அசோ சியேஷன் சார்பாக சுதந்திர தினத்துக்கு ஒரு சின்ன கலை நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு பண்ணி இருக்கோம்! நம்ம ஏரியாவுல இருக்கிற குழந்தைகள் கலந்துக்கலாம்!
நாடகத்தில் நாய்! 

தினேஷின் உலகம்! 15
"நம்ம காவேரி நகர் ரெசிடென்ஷியல் அசோ சியேஷன் சார்பாக சுதந்திர தினத்துக்கு ஒரு சின்ன கலை நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு பண்ணி இருக்கோம்! நம்ம ஏரியாவுல இருக்கிற குழந்தைகள் கலந்துக்கலாம்! டான்ஸ், ட்ராமா இப்படி எது வேணும்னாலும் நடத்தலாம்! ஆனால் சினிமாப் பாட்டுக்கு ஆடாமல் சொந்தமா புதுசா ஏதாவது பண்ணனும்! கலந்துக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாயம் ஏதாவது பரிசு கொடுக்கப்படும்!' என்றார் காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் குமரேசன். 
தினேஷுக்கு நாடகம் நடிக்க வேண்டும் போல் இருந்தது. யஷ்வந்த்தின் வீட்டுக்கு அருகில் இருந்த பூங்காவில் ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று ஒரு குழுவினர் வீதி நாடகம் போட்டனர். ஆடை மாற்றங்கள் இல்லை! அலங்காரமும் இல்லை! ஆனால் அந்த நாடகம் மிகச் சிறப்பாக இருந்தது. அதைக் கண்டதில் இருந்து தினேஷுக்கு தான் அதுபோல் ஏதாவது புது முயற்சி செய்ய வேண்டும் தோன்றியது. 
"டேய்! நாம ஒரு நாடகம் போடலாமா?'' தன் நண்பன் ரவியிடம் கேட்டான். 
"எந்த கதைக்கு போடுறது?'' 
" நம்ம முரளி அண்ணா கிட்ட கேட்போம்!'' என்றான் தினேஷ். 
"ஆஹா!.... போச்சுடா! கவிதை எழுதி முடிச்சாச்சு! இப்ப நாடகமா? ஏன் தினேஷ்? உன் கலை ஆர்வத்துக்கு அளவே இல்லையா? சரி உங்களுக்கு நாடகம் தானே வேணும்? சிறுவர் பத்திரிகையிலே எத்தனையோ நாடகங்கள் வருது. அதுல ஏதாவது ஒரு நாடகத்தை செலக்ட் பண்ணிக்கோங்க!'' என்றார் முரளி அண்ணா. 
அன்றிலிருந்து மிகவும் பிஸியாகி விட்டான் தினேஷ். சிறுவர் பத்திரிகையிலிருந்து பொருத்தமான நாடகம் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொண்டான். அதை ஜெராக்ஸ் எடுத்து தன் நண்பர்களிடம் கொடுத்தான். 
தன் வீட்டு மொட்டை மாடியில் நண்பர்களே அழைத்து வந்து ஒரு நாள் தவறாமல் ஒத்திகை பார்த்தான். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் நாடக ஒத்திகை தான் முதல் வேலையாக இருந்தது அவனுக்கு. ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது அவன் வீட்டு மொட்டை மாடி. 
" போறும்டா! நீங்களும் உங்க நாடகமும்!'' என்று அலுத்துக் கொண்டார் பாட்டி. அவன் வீட்டுக்கு தூரத்து சொந்தம் ரமணி அத்தை வந்திருந்தார். அவர், "மாடியில ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கு! என்னால நிம்மதியா தூங்க முடியல! எல்லாரும் வெளியே போங்க!'' என்று விரட்டிக்கொண்டே இருந்தார். தினேஷுக்கு இது பிடிக்கவே இல்லை. வேறு வழி இல்லாமல் பொறுத்துக் கொண்டான். 
அப்பாவின் வேட்டியை திரை கட்ட பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த ராமு பயலுக்கு பெரிய மீசை தேவைப்பட்டது. நாடகத்தில் அவன் தான் குடுகுடுப்பைக்காரன். "மையினால் மீசை வரைந்து கொள்ளலாம்!'' என்றான். அவன், "வேண்டாம்'' என்றான். தினேஷுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. ரமணி அத்தை தன் சவுரி முடியை கழற்றி ஆணியில் எப்பொழுதும் மாட்டி வைத்திருப்பார். வெளியில் செல்லும் நேரங்களில் மட்டுமே அதை அணிந்து கொள்வார். சட்டென்று அதில் பாதியை கத்தரித்து ஒரு மெல்லிய அட்டையில் பசை தடவி ஒட்டி வைத்துக் கொண்டான் தினேஷ். 
"என் சவுரி முடியை யார் கட் பண்ணினா?'' என்று அத்தை மறுநாள் முழுவதும் கத்திக் கொண்டே இருந்தது தனி கதை. அவர்கள் நடத்தவிருந்த நாடகத்தில் நாயும் ஒரு கதாபாத்திரம். 
"பேசாம ஒரு நாய் பொம்மையை வச்சுக்கலாம்!'' என்றான் தினேஷ். குமார் குறுக்கிட்டு, "அதெல்லாம் வேணாம்! எங்க வீட்டு நாய், "கட்டப்பா" இருக்கு! அதை நான் கயத்துல கட்டி பிடிச்சுக்கறேன்! ரொம்ப சாதுவான நாய் அது! ரொம்ப நேச்சுரலாக இருக்கும்!'' என்றான். 
தினேஷ் அரைகுறை மனசோடு, "சரி'' என்றான். சென்னை மாநகராட்சியில் உயர் அதிகாரியாக பணிபுரிபவரை சுதந்திர தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இவர்களது நாடகத்திற்காக சிறிய பெஞ்சுகளை ஒன்றாக இணைத்து சிறிய மேடை ஒன்றை அமைத்திருந்தார்கள். அதற்கு நேர் எதிரே சிறப்பு விருந்தினர் அமர்வதற்காக நாற்காலியும் பொதுமக்களுக்கு என்று தனியாக நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன. தினேஷின் நாடகத்தை காண அனைவரும் ஆவலோடு கூடியிருந்தனர். 
மேடையில் ஏறிய தினேஷ், "அனைவருக்கும் வணக்கம்! நீங்கள்லாம் மனுசங்களா?'' என்று கேட்டுவிட்டு சிறிது நொடி மெளனமாக நின்றான். அனைவருக்கும் ஒரே குழப்பம். 
"என்ற தலைப்பில் ஒரு நாடகம் நடத்த இருக்கிறோம்!'' என்றான். சற்றே உதறலுடன். சிறுவர்கள் படபடவென கைதட்டினர். அவள் பெற்றோருக்கு இப்பொழுதுதான் "அப்பாடா!' என்று இருந்தது. பாட்டி பெருமிதத்தோடு சிரித்தார். ரமணி அத்தை மட்டும் வெறுப்புடன், "ம்க்கும்!'' என்று முகவாயை தோளோடு இடித்துக்கொண்டார். முரளி அண்ணன் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தனது இரு கட்டை விரல்களையும் உயர்த்திக் காட்டினார் தினேஷிடம். முதல் காட்சி ஆரம்பமானது. 
குமார் தன் நாய் கட்டப்பாவின் கழுத்தில் கட்டியிருந்த சங்கிலியை இறுக பிடித்தபடியே வசனம் பேசினான். அவனுக்கு சபைக்கூச்சமோ, பயமோ இல்லை. தினேஷ் தன் பங்கு வசனத்தை பேசி முடித்தான். முதல் காட்சி ஒருவாறு முடிவடைந்தது. அனைவரும் கைதட்டினர். சிறப்பு விருந்தினர் சிரித்தபடியே கைதட்டி ரசித்தார். 
இரண்டாவது காட்சி ஆரம்பமானது. குமார் தன் நாய் கட்டப்பாவுடன் மேடையின் இந்த முனையில் இருந்து எதிர்முனைக்கு நடந்தபடியே வசனம் பேசினான். அந்த சமயத்தில் குடுகுடுப்பைக்காரன் வேட
மணிந்த ராமு உள்ளே நுழைய வேண்டும். அவன் தன் ஒட்டு மீசை மேலேயே கவனமாக இருந்தான். கீழே விழாத வண்ணம் அதை தன் இடது கையால் பிடித்தபடியே இருந்தான். 
மேடையின் எதிர்முனையில் இருந்த தினேஷ், " வா! வா!'' என்று அவனுக்கு சைகை செய்தான். ராமு தன் கையிலிருந்த உடுக்கை போன்ற சிறிய மேளத்தை அடித்தபடியே' நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!' என்று கூறியபடியே உள்ளே நுழைந்தான். 
அவ்வளவுதான்! அதுவரை பொறுமையாக இருந்த கட்டப்பா அவனைப் பார்த்து வள்!வள்! என்று குறைக்கத் தொடங்கியது. ராமுவிற்கு தான் பேச வேண்டிய வசனம் எல்லாம் மறந்து போனது. 
" ஏய்!... கட்டப்பா! ஷட்டப்! ஷட் அப்!'' என்று கத்தினான் குமார். வித்தியாசமான வேடமணிந்த ராமுவை பார்த்ததும் மேலும் குறைத்துக்கொண்டே அவன் மீது பாய முற்பட்டது கட்டப்பா. 
பயத்தில் நடுங்கிய ராமு ஓடத் தொடங்கினான். குமாரின் கையிலிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு ராமுவின் மேல் பாய்ந்தது கட்டப்பா! ராமு மேடையை விட்டு கீழே குதித்து சிறப்பு விருந்தினர் அமர்ந்திருந்த மேஜையை நோக்கி ஓடினான். 
அப்பொழுதும் அவனை விடாமல் துரத்திய கட்டப்பாவிடம், '' இந்தா பிஸ்கட்!'' என்று தன் ஒட்டு மீசை விட்டெறிந்தான். 
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த சிறப்பு விருந்தினரும் எழுந்து ஓட, அவரைத் தொடர்ந்து ராமுவும் ஓட, அவனை துரத்தியபடியே கட்டப்பா ஓட, கட்டப்பாவை பிடிக்க குமார் ஓட....! 
இவை அனைத்திற்கும் காரணமான தினேஷ் அதற்குள் எங்கேயோ காணாமல் ஓடிப் போய் இருந்தான்! 
தொடரும்....
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com