குறள் நெறிக் கதை!: பகைவனுக்கு அருள்வாய்! 

பொன்னனும் வண்ணனும் ஒரே ஊர்க்காரர்கள். அருகிலுள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்கள். பொன்னன் குடிசையில் வாழும் ஏழை. அவனது பெற்றோர் கறவை மாட்டை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்தனர்.
குறள் நெறிக் கதை!: பகைவனுக்கு அருள்வாய்! 

பொன்னனும் வண்ணனும் ஒரே ஊர்க்காரர்கள். அருகிலுள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்கள். பொன்னன் குடிசையில் வாழும் ஏழை. அவனது பெற்றோர் கறவை மாட்டை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்தனர். விடுமுறை நாட்களில் பொன்னன் மாடுகள் மேய்ப்பான். குளத்தில் நீந்தி விளையாடுவான். கறந்த பாலை வீடுகளுக்கு விநியோகம் செய்வதில் அம்மாவுக்கு உதவி செய்வான். பொன்னன் பொறுப்பாய் இருப்பதால் அவனது பெற்றோருக்கு மகிழ்ச்சி.

மேய்ச்சலின்போது மாடுகளை விரட்ட நேர்வதால் பொன்னன் வேகமாக ஓடுவதில் வல்லவனாகிவிட்டான். மாடுகளைக் குளிப்பாட்ட ஏரிக்கு அழைத்துச் செல்வதால் ஏரியில் நீந்தும் பழக்கம் பொன்னனுக்கு ஏற்பட்டது! நீச்சலிலும் கெட்டிக்காரனாகிவிட்டான்!

இத்தனை திறமைகள் இருப்பினும் வகுப்பில் பொன்னன் சாதுவானவன். பொறுமையும், அன்பும் நிறைந்தவன் என எல்லோரும் சொல்வார்கள். படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தான்.

வண்ணன் இதற்கு முற்றிலும் நேர்மாறானவன். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனவே அவனுக்கு எல்லோரும் மரியாதை செய்வார்கள். ஸ்கூட்டரில்தான் அவன் பள்ளிக்குச் செல்வான்.

பள்ளியில் நடக்கும் போட்டிகளில் வண்ணன் கலந்து கொண்டால் மற்ற மாணவர்கள் முதலாவது இடத்தைப் பெறத் தயங்குவர். பணக்கார வீட்டுப் பிள்ளையுடன் மோதல் எதற்கு என்று பின்வாங்கிவிடுவார்கள். எனவே எந்தப் போட்டியிலும் அவனே முதற் பரிசுக்கு உரிய மாணவனாக இருப்பான்.

ஆண்டு விழாப் போட்டிகளில் பொன்னன் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆண்டு விழாப் போட்டிக்கான அறிவிப்பு வந்தது. சில நண்பர்கள் வற்புறுத்தவே பொன்னன் 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டான். முதற்பரிசையும் தட்டிக்கொண்டான்! வண்ணனுக்கு ஆக்ரோஷம்! பொன்னனின் மீது அடக்கமுடியாத கோபம்!..... பழி வாங்கத் துடித்தான்!.... பள்ளியிலும் வெளியிலும் அவ்வப்போது சீண்டல்கள். சிறுசிறு துன்புறுத்தல்கள். பொன்னனின் ஏழ்மை நிலைகுறித்தும், அவனது பெற்றோர் குறித்தும் மனம் புண்படும் வார்த்தைகளால் ஏசினான். பொன்னன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர்களிடமும் கூறுவதில்லை. பொறுமையைக் கடைப்பிடித்தான். ஆண்டுத் தேர்வை எதிர்கொள்வதில் அவனது முழுக் கவனமும் இருந்தது.

பள்ளியிலிருந்து பொன்னனது வீட்டிற்குப் போகும் வழியில் ஓர் ஏரி இருந்தது. ஏரியைக் கடந்து செல்ல ஒரு பாலம் இருந்தது. பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். பொன்னனும் பாலத்தின் மீது நடந்து வந்தான். பின்னால் ஸ்கூட்டரில் வந்த வண்ணன், பொன்னன் மீது இடிப்பதுபோல் வந்து பயமுறுத்த எண்ணினான். சமயோசிதமாக பொன்னன் விலகிக்கொண்டான். ஸ்கூட்டர் பாலச் சுவரில் மோதி நின்றது. வண்ணன் நிலைதடுமாறி ஏரிக்குள் விழுந்துவிட்டான்!

வண்ணனுக்கு நீச்சல் தெரியாது! கை, கால்களை உதறினான். அவனுக்கு நீச்சல் தெரியாது என்பதை பொன்னன் உணர்ந்து கொண்டான். அடுத்த கணம் புத்தகத்தைப் பாலத்தில் போட்டான்! சடாரென்று ஏரிக்குள் குதித்தான்! லாகவமாக வண்ணனது தலைமுடியைப் பிடித்து இழுத்தவாறு கஷ்டப்பட்டு நீந்தினான்.... பின்னால் சைக்கிளில் வந்த நண்பன் காளியப்பன் இந்த விபரீத நிலையைக் கண்டான்! காளியப்பனும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்து பொன்னனுக்கு உதவி செய்தான். எப்படியோ மயக்க நிலையில் இருந்த வண்ணனைக் தூக்கி வந்து பாலத்தில் கிடத்தினர். ஏற்கெனவே பள்ளியில் கற்றுக் கொடுத்த முதலுதவிச் சிகிச்சையைச் செய்து வண்ணனை மீட்டனர்!

ஊருக்குள் செய்தி பரவியது. பலரும் பொன்னனைப் பாராட்டினர். பள்ளி ஆசிரியர்கள் மேலதிகாரிகள் அவனது பேருதவியையும், திறமையையும், தைரியத்தையும் ஆண்டு விழாவில் பலவாறு பாராட்டினர். அன்பு கொண்ட மனத்துடன், தீமை செய்ய முயன்றவனுக்கும் நன்மை செய்த பொன்னனின் பெருந்தன்மை குணத்தை வியந்தனர்.

பொன்னன் தன் நண்பன் காளியப்பனும் தான் செய்த செயலுக்கு உறுதுணையாக இருந்ததை ஆண்டு விழாவில் மைக்கில் சொன்னான். அனைவரும் கரகோஷம் செய்தனர்.

வண்ணனின் பெற்றோர் பள்ளிக்கு வந்து நன்றி சொல்லிப் பொன்னனை ஆரத் தழுவினர். மகனது தவறான செயலுக்கு மன்னிப்புக் கேட்டனர். பொன்னனது படிப்புக்கான எல்லாச் செலவுகளையும் தாங்கள் ஏற்பதாக உறுதியளித்தனர்.

மதிய உணவு இடைவேளை நேரம். வராண்டாவின் ஓரம் அமர்ந்து அம்மா தந்தனுப்பிய சாதத்தை அசைபோட்டவாறு போன்னன் அமர்ந்திருந்தான். அப்போது பொன்னனின் தோள்களில் இரு கரங்கள் படர்ந்தன. நிமிர்ந்து பார்த்தான். கலங்கிய கண்களுடன் வண்ணன்!

""வண்ணா!.... உட்காரு!..... ஏன் வாட்டமா இருக்கே?.... இன்னும் பயம் தெளியலையா?.... பசிக்குதா? மோர்விட்ட சாதம் இருக்கு!..... சாப்பிடுறயா?..... '' வாஞ்சையுடன் கேட்டான் பொன்னன்.

வண்ணன் பொன்னனது இரண்டு கரங்களையும் பற்றிக் கொண்டான். குரல் தழுதழுத்தது!

""ஓட்டப்பந்தயத்தில் முதற்பரிசு உனக்குப் போயிடுச்சேன்னு எனக்கு உன் மேலே பொறாமை வந்தது.....பழி வாங்க நினைச்சேன்!..... நானே அதுக்கு பலியாகிவிட்டேன்.... ஆனா நீ என்னைக் காப்பாத்திப் பெரிய மனுஷன் ஆயிட்டேடா,..... என் மனசு ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் துளைக்குதுடா....''

""இதைப் போய்ப் பெரிசு படுத்தறயே..... அந்த சமயத்துலே நான் உனக்கு உதவி செய்யலைன்னா நான் படிச்ச படிப்பெல்லாம் மண்ணுடா!.... அதுவும் காளியப்பன் உதவி செய்யலேன்னா உன்னைக் காப்பாத்தியிருக்க முடியாது'' என்று வண்ணன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தான் பொன்னன்.

""டேய்!....என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுடா!....'' வண்ணன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

""என்ன பேச்சுப் பேசறே!..... தமிழ் வாத்தியார் சொல்லிக் கொடுத்த குறள் படிக்க மட்டும்தானா?.... வாழ்க்கையில் இல்லையா?.... காளியப்பனுக்கும் உன்னைக் காப்பாற்றியதில் பங்கு உண்டு! அவனது உதவி இருந்ததால்தான் உன்னைக் காப்பாற்ற முடிந்தது. ....இந்தா மோர்சாதம்!.... உடம்புக்குக் குளிர்ச்சி.... சாப்பிடு!...'' என்று வண்ணன் வாயில் ஊட்டினான் பொன்னன்.

காளியப்பனிடமும் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தான் வண்ணன்.

அந்த வருடம் சாகசச் செயல்களுக்கான விருதைப் பொன்னனும், காளியப்பனும் பெற்றனர் விழாவில் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.

காளியப்பனுக்கு, தமிழாசிரியர் சொல்லிக்கொடுத்த, "சான்றாண்மை' அதிகாரத்தில் வரும் இன்னா செய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு . (987) என்ற குறள் நினைவுக்கு வந்தது. பொன்னனை மனதாரப் பாராட்டினான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com