சுற்றுலா போன சிவசாமி!

 ஆற்றில் தண்ணீர் வந்ததுவாம்! ஆடியில் கோடையும் போனதுவாம்! 
சுற்றுலா போன சிவசாமி!

 ஆற்றில் தண்ணீர் வந்ததுவாம்!
 ஆடியில் கோடையும் போனதுவாம்!
 வாய்க்கால் நிறைந்தே நீரோடி
 வயல்மடை வழியே பாய்ந்ததுவாம்!
 உள்ளம் மகிழ்ந்தே உழவரெல்லாம்
 உழவுப் பணியைத் தொடங்கினராம்!
 நெல்லை விதைத்தே நாற்றெடுத்து
 நிறைவாய் வயலில் நட்டனராம்!
 அந்த ஊரின் விவசாயி
 அவனது பெயர்தான் சிவசாமி!
 தொங்கிய பையுடன் தோளினிலே
 தொடர்ந்தான் வெளியூர்ப் பயணத்தை!
 எதிரே வந்த ஆறுமுகம்,
 "எங்கே போகிறாய் சிவசாமி?
 இதுவரை தண்ணீர் காணாமல்
 ஏங்கிக் கிடக்குதே உனது நிலம்!....
 ..... மடையைத் திறந்தே நீர் பாய்ச்சி
 மளமள வென்றே வேலையைப் பார்!
 நடவு செய்தால் பயிர் விளைந்தே
 நல்ல மகசூல் தந்திடுமே!...''
 என்றதைக் கேட்ட சிவசாமி,
 " எல்லாம் சரிதான்! ஆனால் நான்...
 சென்றிட வேண்டும் அவசரமாய்
 சில நாள் கழித்து வந்திடுவேன்!...''
 சொல்லி விட்டு சிவசாமி
 சுற்றுப் பயணம் போய்விட்டான்!
 உள்ள பணத்தைச் செலவழித்தே
 ஊர்கள் பலவும் பார்த்திட்டான்!
 கொண்டு போன பணமெல்லாம்
 குளத்தில் விழுந்த மண்கட்டியாய்
 சென்றதன் பின்னே ஊருக்குச்
 சென்றான் திரும்பி சிவசாமி!
 அறுவடை செய்த வயல்களுமே
 அழகாய்த் தெரிந்தன! விவசாயிகள்
 அறுவடை நெல்லை விற்ற பணம்
 அவர்களின் கைகளில் சிரித்ததுவே!
 தனது நிலத்தைப் பார்த்திட்டான்
 தரையும் வெடித்தே எவருமின்றி
 தனியே நிற்கும் குழந்தையைப் போல்
 தன்னைப் பார்ப்பதாய் உணர்ந்தானே!
 கண்ணீர் விட்டே அழுதிட்டான்!
 கண்டான் அவனை ஆறுமுகம்!
 "அன்றே சொன்னேன் கேட்கவில்லை!
 அழுவதால் இன்று பயனில்லை!....
 ...உழுதிட வேண்டிய காலத்தில்
 ஊர்களைச் சுற்றிடப் போய்விட்டாய்!
 அழுதிட வேண்டாம் பாடுபட்டால்
 அள்ளிக் கொடுத்திடும் உனது நிலம்!''
 
 என்றான்.... உடனே சிவசாமி
 "இனிமேல் அப்படிப் போகமாட்டேன்!
 நன்கே உழைப்பேன் காலத்தில்
 நட்டே விளைப்பேன் முப்போகம்!
 
 அன்னையைப் போல உணவளிக்கும்
 அருமை நிலத்தைக் காத்திடுவேன்!....
 ....உழைப்பே என்றும் உயர்வு தரும்''
 உணர்ந்து சொன்னான் ஆறுமுகம்!
 புலேந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com