மரங்களின் வரங்கள்! ஆவ் மரம்!

 நான் தான் ஆலிவ் மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் ஒலியா யூரோபியா என்பதாகும்.
 மரங்களின் வரங்கள்! ஆவ் மரம்!

 குழந்தைகளே நலமா....
 நான் தான் ஆலிவ் மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் ஒலியா யூரோபியா என்பதாகும். நான் இஸ்ரேலிலும், பிற வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகிறேன். என் தாய் நாடு கிரேக்கம். என்னை தமிழில் "சைத்தூன்' என்றும். ஒலிவ மரம் என்றும் சொல்வாங்க. நான் எப்போதும் பசுமையாக இருப்பதுடன், 500, 1000ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து உங்களுக்கு பயன் தருவேன். ஆனால், ஒண்ணு குழந்தைகளே, நான் மெதுவாகத் தான் வளருவேன். மனிதர்களின் கலாசாரத்திலும், வரலாற்றிலும் மிகவும் முக்கிய இடம் வகிக்கும் மரங்களில் நானும் ஒருவன்.
 என் கிளைகளும், இலைகளும் தழைத்து வளர்ந்து மேல் பாகத்தில் கரும்பச்சை நிறமாகவும், அடிப்பாகத்தில் வெள்ளை கலந்த பச்சை நிறமாக மினுமினுப்பாக இருக்கும். என் காய்கள் பழுத்து கருப்பு நிறமாகும் போது அவைகளை சேகரித்து செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுக்கிறார்கள். முற்காலத்தில் குழந்தைகளே, அப்போ எல்லாம் மின்விளக்குகள் இருந்ததா ? இருட்டுல விளக்குகளை எரிய வைக்க நிரந்தரமாக ஒளி கொடுப்பதற்காக இஸ்ரேல் மக்கள் என் தெளிந்த எண்ணெய்யைத் தான் பயன்படுத்தினாங்க. ஆலிவ் எண்ணெய்யை சமையல் எண்ணெய்யாகவும், மருந்தாகவும் இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள்.
 குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமா, "ஆலிவ்' என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது தான் "ஒலிம்பிக்' என்னும் சொல். குழந்தைகளே நான் உங்களுக்கு இன்னொரு செய்தியையும் சொல்லட்டுமா, நான் சமாதானத்தின் சின்னம் மற்றும் நட்பின் அடையாளமுமாகும். ஐக்கிய நாட்டு சபையின் சின்னத்தில் என் மரக்கிளைகள் தான் இடம் பெற்றுள்ளன. பண்டைய காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெறுவோருக்கு என் மரத்தின் இலைகளால் பின்னப்பட்ட கிரீடம் சூட்டுவது வழக்கம். இதிலிருந்து என் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம்.
 உணவுப் பொருள்களைப் பத்திரப்படுத்தும் தன்மை நான் கொடுக்கின்ற பழங்களுக்கு உண்டு. மத்திய கிழக்கு நாடுகளில் மான்டிநிக்ரோ என்ற நாடு இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள ஒரு ஆலிவ் மரத்தின் வயது 2,244 என்று சொல்றாங்க. என்னை உள்ளூர்காரர்கள் "ஸ்டாரா மஸ்லீனா' என்று கூப்பிடறாங்க. என் எண்ணெய்யை அழகு சாதனப் பொருள்களிலும், மருந்து பொருள்களிலும், விளக்குகளில் எரிப்பொருளாகவும் பயன்படுத்தலாம். என் எண்ணெய்க்கு மதிப்பு அதிகம் என்பதால் திரவத் தங்கம் என்று சொல்லி மதிக்கிறாங்க.
 என் காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கருப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய் சத்து சற்று கூடுதல். இதுல, தாதுப் பொருள்களும், விட்டமின் ஏ, விட்டமின் சி போன்ற ஊட்டச் சத்துகளும் உள்ளன.
 உடலின் கொலாஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தவும், இதயத்திற்கு ஏற்ற எண்ணெய்யாகவும் உள்ளதால் உணவுப் பொருள்களில் என்னை அதிகமாக பயன்படுத்தறாங்க. பெண்கள் தினசரி உண்ணும் உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் மார்பக புற்றுநோயைத் தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. ஸ்பெயின் நாட்டில் நடந்த இன்னொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி, இதய நோய், இரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றைத் தவிர்க்கலாமுன்னு ஆய்வாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.
 ஓலிவ மலை உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, ஒலிவ மலை என்பது ஜெருசேலம் பழைய நகருடன் கிழக்கிலிருந்து இணையும் மலைத் தொடராகும். இங்கு சரிவு பகுதிகளை ஒலிவ மரங்கள் மூடியிருந்ததால் இதற்கு ஒலிவு மலைன்னு பேர் வெச்சிருக்காங்க போலிருக்கு. இந்த ஒலிவ மலையில் இப்போதும் கெத்சமனே தோட்டத்தில் 2000 ஆண்டுகள் பழமையான மரம் இன்னைக்கும் இருக்கு. என்ன ஆச்சரியம், இப்போதும் இந்த மரங்களிலிருந்து துளிர் வந்து கொண்டிருக்கிறது. மிக்க நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 -- பா. இராதாகிருஷ்ணன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com