மென்மையான இதயம்!

 தேர்வாளர் - (இண்டர்காமில்) பூங்குழலி மேடம், அடுத்து குமார் என்பவரை வரச் சொல்லுங்க.... 
 மென்மையான இதயம்!

அரங்கம்
 காட்சி 1

 இடம் - மென்பொருள் அலுவலகத்தில்
 ஏழாம் மாடியில், எம்.டி அறை
 மாந்தர் - சன்ஷைன் மென் பொருள் கம்பெனி
 மேனேஜிங் டைரக்டர் மற்றும் உரிமையாளர்
 சிவஞானம், ஹெச் ஆர் எனப்படும் ஊழியர்
 கண்காணிப்பு அதிகாரி பூங்குழலி, மற்றும்
 பணி நியமன தேர்வாளர்கள்.
 காலம் : காலை பதினோரு மணி
 (எம்.டி அறைக்கு வெளியே நேர்முக தேர்வுக்கு
 வந்துள்ள இளைஞர்கள்)
 பூங்குழலி - மிஸ்டர் கனகராஜ் நீங்க உள்ளே போங்க....
 (கனகராஜ் எழுந்து தன் டையை சரி செய்துகொண்டு கையில் வைத்துள்ள சர்டிபிகேட்கள் உள்ள ஃபைல் ஃபோல்டருடன் உள்ளே சென்று கதைவைத் தள்ளி நுழைகிறார். )
 தேர்வாளர் ஒருவர் - வாங்க மிஸ்டர் கனகராஜ்!.... உட்காருங்க. உங்க சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தைப் பார்த்தோம். நிறைய படிச்சிருக்கீங்க. நல்ல அனுபவம் இருக்கு. எங்கள் தேவைக்கேற்ற மென்பொருள் பிரிவில் நிறைய வேலை பார்த்து இருக்கீங்க. சொல்லுங்க. ஏற்கெனவே வேலை பார்த்த நிறுவனத்தை விட்டு இங்கு வர முயற்சிக்க என்ன காரணம்?....
 கனகராஜ் - சம்பளமும் பதவி உயர்வும் தான்!
 தேர்வாளர் - இப்போ நீங்க வாங்கும் சம்பளத்தை விட இருமடங்கு என்பதாலா?....
 கனகராஜ் - ஆமாம் சார்!.... தனியார் நிறுவனங்களில் கம்பெனி மாறினால் தானே பதவி உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைக்குது!...
 நிர்வாக இயக்குநர் சிவஞானம் - அப்போ இதைவிட அதிக சம்பளம் தருவதாய் இருந்தால் இங்கிருந்து வேறே கம்பெனிக்குப் போயிடுவீங்க அப்படித் தானே.....
 கனகராஜ் - (விழிக்கிறார்)
 சிவஞானம் - சரி, நீங்க போகலாம். தகவல் அனுப்புகிறோம்.
 (கனகராஜ் வணங்கி வெளியே செல்கிறான்)
 
 தேர்வாளர் - (இண்டர்காமில்) பூங்குழலி மேடம், அடுத்து குமார் என்பவரை வரச் சொல்லுங்க....
 ஹாலில் பூங்குழலி - சார், மிஸ்டர் குமார் யாரு?... உள்ளே போங்க!....
 (யாரும் எழுந்து செல்லவில்லை)
 பூங்குழலி - குமார் வரலியா?.... (இண்டர்காமில்) சார் குமார் என்பவர் வரவில்லை. அடுத்து லிஸ்ட்டில் உள்ள சுரேஷை அனுப்பவா? ..... மிஸ்டர் சுரேஷ், உள்ளே போங்க.
 (ஒவ்வொருவராக நேர்முகத் தேர்வு அறைக்குள் சென்று தேர்வு முடிந்து வெளியே வருகின்றனர்.)
 சிவஞானம் - (இண்டர்வியூ அறையில்) சரி, எல்லோரும் வந்திட்டாங்க.... ஒருவர் இருவரைத் தவிர மற்ற யாரும் நம்ம எதிர்பார்ப்பு அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. அனுபவம் இருந்தால் படிப்பு இல்லை.. படிப்பு இருந்தால் அனுபவம் போதவில்லை. கனகராஜ் பரவாயில்லை. தேர்வு செஞ்சால் சில மாதங்கள் இருப்பார்.
 (அப்போது இண்டர் காம் ஒலிக்க....)
 பூங்குழலி - சார் விடுபட்ட குமார் என்பவர் வந்திருக்கார்.
 சிவஞானம் - என்னம்மா இப்போ வர்றார். தேர்வர்கள் கிட்டத்தட்ட கிளம்பிட்டாங்களே. பதினோரு மணி இண்டர்வியூவுக்கு ஒரு மணிக்கு வர்றார். போகச் சொல்லிடுங்க. காலம் தவறாமை தெரியாதவர்.. முக்கிய பொறுப்புக்கு எப்படி தகுதியாக இருப்பார்?
 பூங்குழலி ஹாலில் - சாரி மிஸ்டர் குமார்.... எம்.டி லேட்டா வர்றதை அனுமதிக்க மாட்டார். போயிட்டு வாங்க!...
 குமார் - மேடம் எதனால் நான் தாமதமா வந்தேன்னு தெரிஞ்சா சார் என்னை நிச்சயம் அனுமதிப்பார்.
 பூங்குழலி - சார், நேரத்தை வீணாக்காதீங்க. போயிட்டு வாங்க..... எல்லோரும் சாப்பிடக் கிளம்பிட்டாங்க.
 (குமார் ஏமாற்றத்துடன் திரும்பி தளர்வுடன் நடக்கிறான் கை இடுக்கில் ஃபைல் ஃபோல்டரைச் செருகியபடி)
 
 காட்சி 2
 இடம் - சாலை யோரம் உள்ள பெட்டிக்கடை
 மாந்தர் - பெட்டிக் கடைக்காரர் அண்ணாமலை, குமார்
 (குமார் பெட்டிக் கடையில் ஒரு வாழைப் பழத்தை வாங்கிச் சாப்பிட )
 கடைக்கார அண்ணாமலை - என்ன தம்பி,... இண்டர்வியூ என்ன ஆச்சு?
 குமார் - எங்கே ஐயா,..... தாமதமா போனதால் முடிஞ்சு போச்சு. அனுமதி மறுத்திட்டாங்க....உள்ளேயே விடலை!
 அண்ணாமலை - அடடா!.... உங்களை மாதிரி நல்ல மனுஷாளுக்கு இப்படி ஒரு சோதனையாய... நீங்க மட்டும் நமக்கென்ன என்று இண்டர்வியூவுக்குப் போயிருக்கலாம். ஆனால் ஒரு ஏழை உயிரைக் காப்பாற்றினீங்க. அந்தப் புண்ணியம் உங்களுக்கு நிச்சயம் நல்ல வழி காட்டும். அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கும் பாப்பா பூங்குழலி எங்க வீட்டு அருகில் தான் வசிக்குது நான் நடந்ததைச் சொல்றேன்.
 குமார் - எதுக்கு ஐயா உங்களுக்குச் சிரமம்?...
 அண்ணாமலை - இதில் என்னப்பா சிரமம்.... நடந்ததைச் சொல்லப் போறேன்.... உங்க செல் நம்பரைச் சொல்லுங்க!
 குமார் - (நம்பிக்கை இன்றி) உங்க ஃபோன் நம்பர் சொல்லுங்க... ஒரு மிஸ்டு கால் தரேன்.
 (நம்பர் பதிவானதும் கிளம்புகிறான்)
 
 காட்சி 3
 இடம் - பூங்குழலி வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு
 மாந்தர் - பெட்டிக்கடை அண்ணாமலை பூங்குழலி, அவள் தாயார் மங்களம்
 
 அண்ணாமலை - ஐயா ஐயா.... இதோ அழைப்பு மணி பொத்தான் இருக்கே!... (அடிக்கிறார்)
 மங்களம் - யார் நீங்க? என்ன வேணும்?
 பின்னால் வரும் பூங்குழலி - ஓ! பெட்டிக்கடை அண்ணாமலை சாரா.... வாங்க வாங்க.... அம்மா இவரு என் கம்பெனி எதிரில் பெட்டிக்கடை வச்சிருக்கார்.... இரவு ரொம்ப நாழி ஆயிட்டால் எனக்குத் துணையாக இருப்பார். தெரிந்த ஆட்டோக்காரரை வரவழைச்சு அனுப்புவார். என் டூவீலர் சமயத்தில் பழுது என்றால் இவர் கடை வாசலில் நிறுத்துவேன். மெக்கானிக்கை வரச் சொல்லி அங்கேயே பழுது சரி பார்த்து வைப்பார்.
 மங்களம் - உட்காருங்க ஐயா!... காபி போட்டு கொண்டு வரேன்.
 பூங்குழலி - அண்ணாமலை அண்ணே, என்ன விஷயமா வந்தீங்க?
 அண்ணாமலை - அம்மா, இன்னிக்கு காலையில் உங்க கம்பெனி இண்டர்வியூவுக்கு குமார்ன்னு ஒரு தம்பி தாமதமா வந்தாரா ?
 பூங்குழலி - ஆமாம். ஒரு மணிக்கு வந்தார். பதினோருமணிக்கு வர வேண்டியவர்.
 அண்ணாமலை - அம்மா நடந்ததைச் சொல்றேன். அந்த தம்பி வெளியூர் மதுரை பக்கம். சரியான நேரத்துக்கு வந்திட்டார். உங்க கம்பெனி வாசலில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்க வாட்ச்மேனிடம் சொன்னீங்களா?
 பூங்குழலி - ஆமாம்.. யாரோ வந்து இன்னிக்கு பதினோரு மணிக்கு மூடியைத் திறந்து உள்ளே இறங்கி அடைப்பை எடுத்தாங்களே..... இப்ப சரியாயிடுச்சே....
 அண்ணாமலை - உங்க வாட்ச்மேன் சுத்தம் செய்யும் வேலைக்கு ஒரு ஆளை அழைச்சு வந்தார்.... அந்த ஆளும் அவர் பையன் ஒரு சிறுவனும் வந்தாங்க. மூடியைத் திறந்து இறங்கினதும் அந்த ஆளுக்கு வலிப்பு வந்து முழுகிட்டார். வெளியில் நின்ன சின்ன பையன் அப்பா அப்பான்னு கத்தறான்!... காப்பாத்தச் சொல்லி கெஞ்சறான்!.... இந்த குமார்தான் டக்குன்னு என் கையில் ஃபைலைக் கொடுத்திட்டு உள்ளே இறங்கி அவரைத் தோளில் தூக்கிக்கிட்டு மேலே வந்து, மூச்சுவிட முதலுதவி செஞ்சார். உடனே 108 ஆம்புலன்ஸ் நான் வரவழைச்சு ஆஸ்பத்திரியில் அந்த ஆள் பிழைச்சுக்கிட்டார்! டாக்டர், ஒரு நிமிஷம் தாமதமா போயிருந்தாலும் மூச்சுத் திணறி அபாயம் நிகழ்ந்திருக்கும்ன்னு குமாரிடம் சொன்னார். குமாரை என் வீட்டுக்கு அழைச்சுப் போய் குளிக்கச் சொன்னேன். அவர் குளிச்சு, சூட் கேஸில் கொண்டுவந்திருந்த மாற்று உடையை அணிந்து கம்பெனிக்கு ஆட்டோவில் வர தாமதம் ஆயிடுச்சு!..... இது தான் நடந்தது!....
 (மங்களம், பூங்குழலியும் நெகிழ்வுடன்)
 மங்களம் - அடடே!... அத்தனை நல்ல பையனா அவர்?
 பூங்குழலி - நான் இப்பவே எம் டி வீட்டுக்குச் செல்கிறேன். நடந்ததைச் சொல்லி அவருக்கு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும்!
 அண்ணாமலை - ரொம்ப நன்றிம்மா. அந்த பையனோட சேறான துணிகளை என் மனைவி அலசி காயவச்சிருக்கா. போய் எடுக்கணும்.
 (அண்ணாமலை சென்றதும் கை பேசியில் சிவஞானத்தைத் தொடர்பு கொள்கிறாள் பூங்குழலி)
 ஃபோனில் சிவஞானம் - ஆமாம் குழலி.....நான் தான் வாட்ச் மேனிடம் அடைப்பு நீக்க ஆள் கொண்டு வரச் சொன்னேன். அவரும் என்னிடம் மாலை நடந்ததைச் சொன்னார். ஆனால் மூழ்கியவரைக் காப்பாற்றிய ஆள் விவரம் சொல்லவில்லை. அது நீ சொல்ற குமார்தானா?.... வெரிகுட்!.... அந்தப் பையன் குமார் கை பேசி எண்ணுக்கு உடனே தொடர்பு கொண்டு நாளை காலை தேர்வுக்கு வரச் சொல்லம்மா.
 பூங்குழலி - சரி சார்.
 
 காட்சி 4
 இடம் ரயில் நிலையம்
 மாந்தர் - குமார்
 (ரயில் பெட்டியில் ஏறும் போது கை பேசி ஒலிக்கிறது)
 குமார் - சொல்லுங்க அம்மா!....
 போனில் அம்மா குரல் - என்னப்பா ஆச்சு இண்டர்வியூ?....
 (குமார் விவரிக்கிறான். )
 அம்மா குரல் - பகவான் நல்ல வழி காட்டுவார். கவலைப் படாதே! அடுத்த வாரம் ஹைதராபாத் போகப் போறதா சொன்னியே.. அது நிச்சயம் கிடைக்கும்! ஊருக்கு வந்து மீதியைப் பேசலாம்.
 (சிறிது நேரம் கழித்து ரயில் புறப்பட சில மணித்துளிகள் இருக்க, கை பேசி ஒலிக்கிறது)
 அதில் பூங்குழலி குரல் - சார் மிஸ்டர் குமாரா.... நீங்க தாமதமா வந்ததுக்கு என்ன காரணம்ன்னு பெட்டிக்கடை அண்ணாமலை சார் சொன்னார். நான் உடனே எங்க எம்.டி கிட்டே விவரமா சொன்னேன். அவருக்கு உங்கள் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுடுச்சு! நாளைக் காலை மறுபடி உங்களை வரச் சொல்லி இருக்கார். காலை பதினோரு மணிக்கு அவசியம் வந்திடுங்க...
 குமார் - நன்றி மேடம்.
 (அம்மாவுக்கு ஃபோன் மூலம்
 செய்தியைச் சொல்கிறான்)
 
 காட்சி 5
 இடம் சன்ஷைன்மென்பொருள் கம்பெனி
 மாந்தர் - குமார், பூங்குழலி, எம்டி சிவஞானம்
 (சரியாக காலை பதினோரு மணிக்கு ஹாலில் நுழைய
 பூங்குழலி இண்டர்காமில்...)
 
 பூங்குழலி - சார் மிஸ்டர் குமார் வந்திருக்கார்.
 எம் டி சிவஞானம் குரல் - உள்ளே வரச் சொல்லுங்க
 (உள்ளே செல்லும் குமார் எம் டி சிவ ஞானத்தை
 வணங்க, அமரச் சொல்கிறார்)
 சிவஞானம் - மதுரையா நீங்க. முன் அனுபவம் சிறிய கம்பெனிகளில் தான். சரி மென் பொருள் சம்பந்தப்பட்ட வேலை தான் வேணுமா? இல்லே தனி உதவியாளரா ஒரு பெரிய அதிகாரிக்கு பணியாற்ற சம்மதமா?
 குமார் - நான் எம்.பி.ஏ முடிச்சிருக்கேன். தனி உதவியாளர் வேலை செய்யவும் தயார் சார்.
 சிவஞானம் - (இண்டர்காமில்) குழலி, எனக்கு பி.ஏ வாக மிஸ்டர் குமாரை நியமனம் பண்ணிய உத்தரவை எடுத்து வாங்க.
 (பூங்குழலி கவரை நீட்ட)
 சிவஞானம் - மிஸ்டர் குமார்.. எங்களுக்க்கு ஆயிரம் மென்பொருள் பொறியாளர்கள் கிடைப்பாங்க. ஆனால் மென்மையான இதயம் படைச்ச உங்களைப் போல் ஒருவர் கிடைப்பது அரிது. இந்த வேலையில் மென்பொறியாளர் சம்பளத்தைப் போல் இருமடங்கு உங்களுக்குக் கிடைக்கும்.
 குமார் - (மகிழ்ச்சிப் பூரிப்பில்) உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே சார்!
 சிவஞானம் - நாளைக்கே வேலையில் சேருங்கள். வாழ்த்துக்கள்!
 (வெளியே - ஹாலில் இருக்கும் பூங்குழலியிடம்)
 குமார் - மேடம் உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது
 பூங்குழலி - நீங்க நன்றி சொல்ல வேண்டியது பெட்டிக் கடை அண்ணாமலை சாருக்குத் தான்.
 (பூ பழம் இனிப்புகள் வாங்கிக்கொண்டு
 அண்ணாமலை வீட்டுக்குச் செல்கிறான் குமார்)
 
 திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com