பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!: எம்மதமும் சம்மதம்!

சிறுவன் ராமகிருஷ்ணன் சமையலறைக்கு வந்து, ""அம்மா... ஏம்மா அப்பா எப்பப் பார்த்தாலும் இந்த மாதிரியான நியூசையே பாக்குறாரு...''
பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!: எம்மதமும் சம்மதம்!

சிறுவன் ராமகிருஷ்ணன் சமையலறைக்கு வந்து, ""அம்மா... ஏம்மா அப்பா எப்பப் பார்த்தாலும் இந்த மாதிரியான நியூசையே பாக்குறாரு...''

""என்ன பாத்துட்டு இருக்கார்?''

""அதுதான்... உன் சாமி பெருசா, என் சாமி பெருசாங்கர செய்தி... ஏம்மா இவங்க இப்படி சண்டை போட்டுக்கறாங்க? எந்தச் சாமியா இருந்தா என்ன... கும்பிட வேண்டியதுதானே...

""அவங்கவங்க கடவுள், மதம் அவங்களுக்கு ஒசத்தியா தெரியுது... அதனாலதான் இந்தச் சண்டை சச்சரவெல்லாம்...

""அப்படின்னா... நிறைய கடவுள் இருக்காராம்மா...?''

""இல்லையே... கடவுள் ஒருவர்தான். அவர்தான் பல பெயர்களில் இருக்கிறார்.''

""ஒருத்தரே எப்படிம்மா... வேறு வேறு பெயருல இருக்க முடியும்?''

""தண்ணீர் எல்லோருக்கும் பொதுவானதுதானே. அதைத் தமிழில் நீர் என்றும், ஆங்கிலத்தில் வாட்டர் என்றும், தெலுங்கில் நீலு என்றும், இந்தியில் பாணி என்றும், மலையாளத்தில் வெள்ளம் என்றும் சொல்றோமில்லையா... அப்படித்தான் கடவுளும். அவர் ஒருவர்தான். ஆனால் மக்கள் அழைக்கும் பெயர்கள்தான் வேறு வேறு... இப்படி பகவான் ராமகிருஷ்ணர் சொல்லியிருக்கிறார்.

""புரியலையேம்மா.....?
""உனக்குப் புரியும்படியாகவே சொல்றேன்.. நான் உனக்கு அம்மாவா, உன் அப்பாவுக்கு மனைவியா, உன் பெரியம்மாவுக்கு தங்கையா, என் மாமியாருக்கு மருமகளா, என் அப்பா-அம்மாவுக்கு மகளாக இருப்பது போலத்தான் கடவுளும் இருக்கிறார். அவரவருக்குப் பிடித்த பெயர்களில் மக்கள் அவரை வணங்குகிறார்கள் அவ்வளவுதான். எம்மதமும் சம்மதம்னு வாழ ஆரம்பிச்சா பிரச்னை இல்லையே...
""எல்லா மதமும் என்னம்மா சொல்லுது?''
""எல்லா மதமும் அன்பைத்தான் போதிக்கின்றன. சாமிகிட்ட அன்பு செய்யறது மாதிரி உலகத்துல இருக்குற உயிர்களிடமும் அன்பு செய்யணும், எல்லோருடனும் ஒற்றுமையாக இருக்கணும்னுதான் போதிக்கிறது. இந்த போதனைகளையெல்லாம் மறந்ததுனாலதான் இப்போ சண்டை நடக்குது...
உலகத்துக்கு ஒரே ஒரு சூரியன்தானே இருக்கு. அதோட ஒளிக் கதிர்கள் கோயில் மீதும் விழுகிறது, மசூதியின் மீதும் விழுகிறது, தேவாலயத்தின் மீதும் விழுகிறது. ஒளி ஒன்றுதான்... இடங்கள்தான் வேறுவேறு... கடவுளும் அப்படித்தான். அவர் இருக்கும் இடங்கள்தான் வேறுவேறாக இருக்கின்றன. ஆனால், அவர் எல்லாருக்கும் பொதுவானவர்.
""அம்மா... இப்படித்தான் என் சாமி ஒசத்தின்னு சொல்லி ஒரு தெருவுல சண்டை நடந்துச்சாம்... அந்த இடத்துக்குப் பறந்து போன சில புறாக்கள் சண்டை போடுகிறவங்களைப் பார்த்து, நாங்கள் கோயில் கோபுரத்திலும் உட்காருகிறோம், மசூதியிலும் உட்காருகிறோம்... தேவாலயத்திலும் உட்காருகிறோம்... ஆனால் நாங்கள் சண்டை போட்டதே இல்லை... ஒற்றுமையாகவே வாழ்கிறோம். ஆனால், மனிதர்களான நீங்கள் மட்டும் ஏன் இப்படி என் சாமி, உன் சாமி என்று சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்?' என்று கேட்டுச்சாம்... இதை அப்பா எனக்கு ஒரு புத்தகத்துல படிச்சு சொல்லியிருக்கார்.. நல்லா இருக்குல்லம்மா...?
""குட் எக்ஸாம்பிள் கிருஷ்ணா...''
""இவர்கள் சண்டையை நிறுத்த நான் ஒரு ஐடியா பண்ணிட்டு வரேம்மா...''
டிராயிங் அறைக்கு ஓடிய ராமகிருஷ்ணன் பதினைந்து நிமிடம் கழித்து கையில் ஒரு தாளைக் கொண்டு வந்து, ""அம்மா... சண்டையை நிறுத்த இதுதான் வழி... இதோ பாருங்க... ஒரு ஊர்ல... ஒரே தெருவுல... இப்படி கோயிலையும், சர்ச்சையும், மசூதியையும் வரிசையாகக் கட்டிட்டோம்னா... யாரும் சண்டை போட்டுக்காம ஒற்றுமையா அவங்க அவங்க சாமியை கும்பிடுவாங்கல்ல...எப்படி என் ஐடியா...?''
ஒரு கோடி நூல்கள் சொல்லாத, செய்யாத மாற்றத்தை ஓர் ஓவியம் செய்துவிடுகிறதே!... மறக்காமல் சூரியனையும் வரைந்து வைத்திருக்கிறானே...என்று மகிழ்ந்த அவன் அம்மா, ""உன் பிஞ்சு உள்ளத்தில் தோன்றிய இந்த ஒற்றுமை உணர்வு... உலகம் முழுவதும் பரவினால் சண்டை, சச்சரவே ஏற்படாது கிருஷ்ணா....'' என்று கூறி மகனை வாரி அணைத்தாள்.

த. பிரஜனா,
2- ஆம் வகுப்பு, நாகர்கோயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com