அதிர்ஷ்ட தேவதை - திவி திவி மரம்

நான் தான் திவி திவி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் லிபிடிபியா கொரியேரியா.
 அதிர்ஷ்ட தேவதை - திவி திவி மரம்

மரங்களின் வரங்கள்!
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா,
 நான் தான் திவி திவி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் லிபிடிபியா கொரியேரியா. என் ஆங்கிலப் பெயர் தான் திவி திவி. நான் ஃபேபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு அலங்கார அழகு மரமாவேன். ஒரு காலத்தில் தோல் பதனிடும் நாடுகளில் அதிர்ஷ்ட தேவதையாக இருந்தேன். என் தலைப் பகுதி வட்ட வடிவமாக இருக்கும். பைசா நகர கோபுரம் மாதிரி நானும் சாய்ந்தே வளருவேன். இப்போ, சொல்ல நா கூசுது, நான் இந்தியாவில் காணக் கிடைக்காத ஒரு அரிய மரமாகி விட்டேன். நான் அழகானவன். குராகாவ் என்னும் புதிய ஐரோப்பிய நாட்டு அரசின் தேசிய மரம் நான் தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இது நெதர்லாந்து நாட்டின் ஒரு பகுதி.
 நெதர்லாந்து என்பது நான்கு தீவு. இந்த நான்கும் 2010-ஆம் ஆண்டு முதல் நான்கும், நான்கு தனி நாடுகளாகி விட்டன.
 அதே போல அரூபா நாட்டிலும் நான் பிரபலம். கொலம்பியா நாட்டில் எனக்கு மூன்று நாள் திருவிழா எடுக்கிறார்கள். அதற்கு திவி திவி விழா என்று பெயர். மத்திய அமெரிக்காவில் பல நூறு ஆண்டுகளாக தோல் பதனிட என் மரப்பட்டையைத் தான் பயன்படுத்தி வந்தாங்க. அதனால் நல்ல லாபம் கண்டாங்க. பின்னர், வெனிசுலாவும், கம்போடியாவும் போட்டி போட்டுக் கொண்டு திவிதிவி நாற்றுகளை மத்திய அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தன.
 ஒரு காலத்தில் இந்தியா கூட தனது தேவை போக மிகுதியை ஏற்றுமதி செய்தது. 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு என்னை அம்போன்னு விட்டு விட்டாங்க.
 எனக்கு ஏற்ற மண் மணல்சாரி, வடிகால் வசதி உள்ள மண். கார அமில நிலை உள்ள மண்ணிலும், 15 முதல் 28 சென்டிகிரேட் வெப்ப நிலை உள்ள பகுதிகளிலும் நான் நன்கு வளருவேன். என் தழை விளைநிலங்களுக்கு தழை உரமாகும். என் கனிகளிலிருந்து கருப்பு மை தயாரிக்கலாம். என் பூக்களை நாடி தேனீக்கள் வரும். என் பட்டை டேனின் நிறைந்தது. என் மரக் கூழிலிருந்து காகிதம் தயாரிக்கலாம். நான் ஆற்றோரம் நின்று வளர்ந்து மண் அரிப்பைத் தடுப்பேன். என் மரத்திலிரந்து பல்வேறு வகையான வேளாண் கருவிகள் செய்யலாம். ஏழை, எளிய மக்கள் என் இலைகள், கிளைகளை ஒடித்து அடுப்பெரிக்க பயன்படுத்தலாம். நான் வீசும் காற்றின் வேகத்தைத் தடுத்து தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தி உங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன்.
 இந்தியாவில் 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு என்னை அம்போன்னு விட்டு விட்டுட்டாங்க. வாழ்க்கையை தொலைச்சவங்க, பின்னர் வருந்தி வாழ்வை தேடுவது போல, இப்போ என்னை தொலைச்சிட்டு மலைப் பகுதிகளில் தேடிக்கிட்டிருக்காங்க. தேடுங்க, தேடுங்க கிடைப்பேன். எனக்கும் ஒரு பொற்காலம் நிச்சயம் வரும். நன்றி குழந்தைகளே மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 --பா.இராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com