கருவூலம் - உத்தரப் பிரதேசம்!

 மதுரா மாவட்டத்தின் தலைநகரம். வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம். இதிகாசங்களிலும், புராணங்களிலும் இந்நகரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
கருவூலம் - உத்தரப் பிரதேசம்!

.... சென்ற இதழ் தொடர்ச்சி....
 மதுரா!
 மதுரா மாவட்டத்தின் தலைநகரம். வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம். இதிகாசங்களிலும், புராணங்களிலும் இந்நகரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்து மதக் கோட்பாடுகளின் படி முக்தி தரும் ஏழு நகரங்களில் இதுவும் ஒன்று.
 கேசவ தேவ் கோயில்!
 இந்து புராணங்களின்படி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடம் இது. இங்குள்ள பாதாள சிறையில் கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில்தான் கேசவ தேவ் கோயில் உள்ளது. கிருஷ்ணரின் பேரன் வஜ்ரநாபன் இந்தக் கோயிலை நிறுவியதாகக் கருதப்படுகிறது. அதன்பின் பல மன்னர்களால் புனரமைத்துக் கட்டப்பட்ட இக்கோயில் மொகலாய மன்னர்களால் இடிக்கப்பட்டது. தற்போது உள்ள கோயில் 1951 - இல் கட்டப்பட்டது.
 அரசு அருங்காட்சியகம்!
 இந்தியாவின் முதல் தொல்பொருள் அருங்காட்சியகம் இதுவே! 1874 - ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு கலை நயத்துடன் கூடிய சுடுமண் பானைகள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் பண்டைய நாணயங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 கி.மு. 3 - ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12 - ஆம் நூற்றாண்டு முடிய இந்திய துணைக்கண்டத்தை ஆட்சி செய்த இந்தோ கிரேக்கர்கள், குஷானர்கள், மற்றும் குப்தர்கள் காலத்திய சிற்பங்கள் மற்றும் நாணயங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 பிருந்தாவனம்!
 மதுராவிற்கு வடமேற்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் பிருந்தாவனம் உள்ளது. இது இந்துக்களின் புனித இடமாகும். இங்குதான் கிருஷ்ணர் தனது பால பருவத்தில் இருந்தார். இங்கு ராதை, மற்றும் ஸ்ரீகிருஷ்ணருக்கு நூற்றுக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. பிருந்தா என அழைக்கப்படும் துளசிச் செடிகள் இங்கு நிறைந்திருக்கும் இடமாக இது இருந்துள்ளது. இங்கு ஓடும் யமுனை நதி மிகப் புனிதமாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறது.
 கோகுலம்!
 இந்தகர் மதுரைவிற்குக் கிழக்காக 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள நந்தகோபர், யசோதை தம்பதியரிடம் கிருஷ்ணர் வளர்ந்ததாக இந்து புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ணரின் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
 கோவர்த்தன மலை!
 இவ்விடம் மதுரைவிலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒரு முறை கோகுலத்தில் தொடர்ந்து 7 நாட்கள் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்பொழுது ஆயர்பாடியில் வாழ்ந்த ஆயர்களையும், ஆவினங்களையும் காக்க, அருகில் இருந்த கோவர்த்தன மலையைத் தன் ஒரு விரலில் குடைபோல் ஸ்ரீகிருஷ்ணர் தூக்கியதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
 கிருஷ்ண ஜன்ம பூமி!
 மதுரைவைச் சுற்றி அமைந்துள்ள கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களையும் இணைத்து "கிருஷ்ண ஜன்ம பூமி’ என்றும் "விரஜ பூமி’ என்றும் சொல்லப்படுகிறது. இது 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகச் சுற்றி வருவது "விரஜ பரிக்ரமா’ எனப்படுகிறது. இதில் பெரிய மற்றும் சிறிய பாதைகள் என 2 பாதைகள் உண்டு. பெரிய பாதையின் வழியாக சுற்றி வர 2 மாதங்கள் வரை ஆகும்.
 அயோத்தி!
 பைசாபாத் மாவட்டத்தில் உள்ள மாநகரம் இது. இந்து மதக் கோட்பாடுகளின்படி முக்தி தரும் ஏழு நகரங்களில் அயோத்தியும் ஒன்று. இந்நகரம் "சரயு’ நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் பண்டைய கோசல நாட்டின் தலைநகரமாக இருந்துள்ளது.
 ராமாயண காவியத்தின் நாயகனான ஸ்ரீராமர் பிறந்த இடமான "ராம ஜன்ம பூமி’ அயோத்தியில்தான் உள்ளது. விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமர் இந்த அயோத்தியைத் தலைநகராகக்கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி மகரிஷி தன் ராமாயண காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 நைமிசாரண்யம்!
 108 வைணவத் திருத்தலங்களில் நைமிசாரண்யமும் ஒன்று. "சீதாப்பூர்’ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கோமதி ஆற்றங்கரையில் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் இறைவனை ஆரண்ய வடிவில், அதாவது காட்டையே வணங்குகின்றனர். இயற்கை வழிபாடு முறைப்படி இறைவனை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
 வியாச முனிவர் இங்கிருந்துதான் மகாபாரதம், பாகவதம் மற்றும் புராணங்கள் போன்றவற்றை எழுதியதாகக் கூறப்படுகிறது.
 சாரநாத்!
 வாரணாசிக்கு 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கெளதம புத்தர் தனது முதல் போதனையான "தர்மம்’ என்பதை போதித்தார். மேலும் இங்குதான் முதல் பெளத்த சங்கமும் தொடங்கப்பட்டது. இவ்வூர் இந்தியாவிலுள்ள முக்கியமான பெளத்த மத புனிதத் தலமாகத் திகழ்கிறது.
 அசோகரின் தூண்கள்!
 மெளரிய அரசரான அசோகரால் கி.மு. 3 - ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட தூண்களே அசோகரின் தூண்கள் எனப்படுகிறது. முதலில் பல்வேறு தூண்கள் இருந்தன. ஆனால் இப்போது 19 தூண்கள் மட்டுமே உள்ளன. சராசரியாக 40 முதல் 50 அடி உயரம் கொண்டவை. ஒவ்வொன்றும் சுமார் 50 டன் எடை கொண்டவை. இவை அனைத்தும் வாரணாசிக்குத் தெற்கே "சுன்னார்’ என்ற இடத்தில் செய்யப்பட்டவை. பின்பு நூற்றுக்கணக்கான மைல்தொலைவு எடுத்துச் செல்லப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் சாரநாத்திலுள்ள அசோகர் தூண் குறிப்பிடத்தக்கது. இந்த அசோகர் தூணில் இருக்கும் நான்கு சிங்கங்கள்தான் இன்றைய இந்தியாவின் தேசியச் சின்னமாக உள்ளது. மேலும் இந்தத் தூணில் உள்ள அசோக சக்கரம் இந்திய தேசியக் கொடியின் மையத்தை அலங்கரிக்கிறது.
 தாமேக் ஸ்தூபி!
 கெளதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர் (இறந்த பிறகு) அவரது உடலை எரியூட்டிக் கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகள் எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு எட்டு இடங்களில் வைத்து அதன் மேல் ஸ்தூபிகள் எழுப்பினர். அவ்வெட்டு இடங்களில் சாரநாத் குறிப்பிடத்தக்கது. தாமேக் ஸ்தூபி கி.பி. 500 - இல் நிறுவப்பட்டது. சீன அறிஞர் யுவான் சுவாங் தனது பயணக்குறிப்பில் தாமேக் ஸ்தூபி வளாகம் அருகே 1500 புத்த பிக்குகள் தங்கியிருந்ததாகவும், தாமேக் ஸ்தூபி 300 அடி உயரத்துடன் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
 கல் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்ட உருளை வடிவ தாமேக் ஸ்தூபி தற்போது 43.6 மீ. உயரமும், 28 மீ விட்டமும் கொண்டுள்ளது.
 செளகந்தி ஸ்தூபி
 கெளதம புத்தர் முதன் முதலில் சாரநாத்தில் போதனை செய்ததன் நினைவாக செளகந்தி ஸ்தூபி குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டது.
 சாரநாத் அருங்காட்சியகம்!
 1907 - ஆம் ஆண்டில் இருந்தே பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் இந்த இடத்தில் செய்யப்பட்டு பல்வேறு நினைவுச் சின்னங்களும் மற்றும் கலைப்பொருள்களும் எடுக்கப்பட்டுள்ளன. இவை சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
 குஷிநகர்!
 இந்த நகரத்திற்கு அருகில் இருக்கும் ஹிரண்யாவதி ஆற்றின் கரையில்தான் புத்தர் தன் 80 - ஆவது வயதில் காலமானார். கி.மு. 3 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெளரியப் பேரரசர் அசோகரால் இங்கு பல ஸ்தூபிகள், மற்றும் புத்த விஹாரங்களைத் தோற்றுவித்தார். பெளத்தர்களின் புனிதத் தலம் இது.
 6 அடி நீளத்தில் படுத்த நிலையுலுள்ள மகாபரிநிர்வாணா கோயில், புத்தர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள ராமாபார் ஸ்தூபி, புத்தருக்காகக் கட்டப்பட்டுள்ள சீனக்கோயில், இந்தோ ஜப்பானியக் கோயில்கள் இங்குள்ளன. ஒரு அருங்காட்சியகமும் இங்குள்ளது.
 சங்கஸ்ஸா! (SANKASSA)
 பருகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பழமையான நகரம். கெளதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபி தர்மத்தைத் தனது தாய் மாயா
 தேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்கஸ்ஸா.அசோகர் இவ்விடத்தில் புத்தரின் நினைவாக ஒரு யானை ஸ்தூபியையும், புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு விஹாரையும் நிறுவினார். பெளத்தர்களின் புனிதத் தலம் இது!
 சாரநாத் சமணர் கோயில்!
 சாரநாத் மான் பூங்காவிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள சிங்பூர் என்ற இடத்தில் ஜைன மதத்தின் 11 - ஆவது தீர்த்தங்கரர் சிரேயன சனாதரர் பிறந்தார். இங்கு அவருக்கு கோயில் உள்ளது. இது சமணர்களின் புனிதத் தலம் ஆகும்.
 சந்தெளளி சந்திரபிரபா வனவிலங்கு சரணாலயம்!
 இந்த சரணாலயம் ஆசிய சிங்கங்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சரணாலயம். மேலும் இவ்வனப் பகுதியில் பல் வேறு வனவிலங்குகளும், 150 க்கும் மேற்பட்ட பறவையினங்களும் காணப்படுகின்றன. 78 ச.கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள சரணாலயம் இது.
 சிராவஸ்தி!
 சிராவஸ்தியில்தான் கெளதம புத்தர் 24 முறை போதனைகளுடன் கூடிய விரதங்கள் மேற்கொண்டார். யுவான் சுவாங் தன் பயணக்குறிப்புகளில் சிராவஸ்தி நகரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
 பைசாபாத் - மோடி மஹால்!
 மோடி மஹால் அல்லது முத்து அரண்மனை நவாப் சுஜா - உத் - தெளலாவின் மனைவி பஹீ பேகமின் வசிப்பிடமாக இருந்தது. இவ்வரண்மனை மொகலாய கட்டடக் கலையின் அற்புதமான உதாரணமாகத் திகழ்கிறது.
 சுனார் கோட்டை!
 மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் நகரத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது. இது மன்னர் சகாதேவரால் 1029 - இல் கட்டப்பட்டு, பிற்காலத்தில் "சேர் சா சூரி’ மற்றும் அக்பரால் செப்பனிடப்பட்டது. இக்கோட்டை விந்திய மலைத்தொடரின் ஒரு பகுதியான கைமூர் மலையில் 280 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 1690 மீ. நீளமும் சுமார் 20 அடி அகலமும் கொண்டது. கோட்டைக்குள் அழகிய குடில்களும், அரண்மனையும் உள்ளன. திறந்தவெளி அரங்கமும், படிக்கிணறும் உள்ளன.
 கலிஞ்சர் கோட்டை!
 பாந்தா மாவட்டத்தில் 1203 அடி உயரத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது. கருகற்களால் ஆனது. சுற்றுச் சுவர் 1.6 கி.மீ. நீளம் கொண்டது. 0.8 கி.மீ. அகலம் கொண்டது. தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
 பனாரஸ் இந்து பல்கலைக் கழகம்!
 வாரணாசியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் இது. 1916 - ஆம் ஆண்டு பண்டித மதன் மோகன் மாளவியாவால் நிறுவப்பட்டது. 20,000 மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும் வசதியுடன் கூடியது. முதன்மை வளாகம் 1300 ஏக்கர் பரப்பும், தெற்கு வளாகம் 2700 ஏக்கர் பரப்பும் கொண்டது. ஆசியாவிலேயே பெரிய பல்கலைக் கழகம் இது!
 தோவாப்!
 உத்திரப் பிரதேசம் மாநிலம் 5 புவியியல் பகுதிகளைக் கொண்டது. அவற்றில் யமுனை ஆற்றுக்கும், கங்கை ஆற்றுக்கும் இடையே உள்ள தோவாப் பகுதியும் ஒன்று. தோவாப் என்ற சொல்லிற்கு இரண்டு ஆறுகள் என்பது பொருள். இந்த இடைப்பட்ட பகுதி 60.500 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. செழிப்பான இந்நிலங்களில் நெல், கோதுமை, கரும்பு, பழங்கள், காய்கறிகள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.
 வேத, புராண இதிகாச மற்றும் வரலாற்று காலங்களில் தோவாப் சிறப்புடன் இருந்துள்ளது. வேதகாலத்திய குருநாடு இப்பிரதேசமே! வியாசரின் மஹாபாரதம் குருநாட்டை மையப்படுத்தி எழுதப்பட்டதே!
 ஜைன, பெளத்த, இந்து மதங்களின் பழைய புனிதத்தலங்கள் நிறைந்ததும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும், பண்பாட்டுச் சின்னங்கள் நிறைந்ததும், கலாச்சாரச் சிறப்புகள் கொண்டதும், இயற்கை எழில்கள் நிறைந்ததும் ஆன உத்தரப் பிரதேச மாநிலம் மனதைக் கொள்ளும் அழகு கொண்டது!
 நிறைவு
 தொகுப்பு : கே . பார்வதி,
 திருநெல்வேலி டவுன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com