குறள் நெறிக் கதைகள்

முன்னொரு காலத்தில் ஒரு முனிவரிடம் சுந்தரன்,குமரன்,வீரன் மற்றும் அகிலன் என நான்கு பேர் சீடர்களாக இருந்தனர்.
குறள் நெறிக் கதைகள்

 1.அகிலன்.
முன்னொரு காலத்தில் ஒரு முனிவரிடம் சுந்தரன்,குமரன்,வீரன் மற்றும் அகிலன் என நான்கு பேர் சீடர்களாக இருந்தனர். இவர்களுள் அகிலன் பிறவியிலேயே வளர்ச்சி இல்லாமல் குள்ளமாகவும் அவலட்சணமாக மாறு பட்ட தோற்றத்துடன் இருந்தான். இதனால் மற்ற மூவரும் அவனை கேலி பேசுவர். குரு இல்லாத பொழுது பல வேலைகளை அகிலனின் தலையில் கட்டி விடுவர். அவனைப் பலவாறு அவமானப் படுத்தியும் அலட்சியப் படுத்தியும் வந்தனர்.
 இவை எதையும் பொருட்படுத்தாமல் அகிலன் பொறுமையுடனும்,குருவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப் படிந்தும் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் முனிவர் சீடர்கள் நால்வரையும் அழைத்துக் காட்டிற்குள் சென்று விறகுகளையும் , காய்ந்த சுள்ளிகளையும் பொறுக்கி வருமாறு கூறினார். அகிலன் தங்களுடன் வருவதை மூன்று சீடர்களும் விரும்பவில்லை. அவனை முனிவருடனேயே தங்கி இருக்குமாறு கூறினர்.இதைக் கேட்டுக் கொண்டிருந்த முனிவர் "எங்கு சென்றாலும் நீங்கள் நால்வரும் ஒன்றாகவே செல்ல வேண்டும்!' என்று கூறினார்.
 எனவே வேறு வழி இல்லாமல் அகிலனையும் அழைத்துக் கொண்டு காட்டிற்குச் சென்றனர். அகிலன் ஒரு சிறிய மூட்டையில் புளியங் கொட்டைகளை எடுத்துக் கொண்டு சென்றான். மற்ற மூவருக்கும் தெரியாமல் செல்லும் வழி எங்கும் ஒவ்வொரு புளியங் கொட்டையாகப் போட்டுக் கொண்டே வந்தான்.
 வழக்கம் போல மூவரும் மர நிழலில் அமர்ந்து கதை பேசத் தொடங்கினர். அகிலனையே சுள்ளிகளையும் விறகையும் எடுத்து வருமாறு அனுப்பி வைத்தனர். அகிலனும் அவர்கள் வார்த்தையைத் தட்டாமல் விறகுகளை சேகரித்துத் தன் தலையில் சுமந்து வந்தான்.
 சுந்தரன் அவனிடம், "நாங்கள் மூவரும் இந்தக் காட்டிற்குள் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வருகிறோம்! நீ இந்த விறகுக் கட்டை குரு நாதரிடம் கொண்டு சேர்த்து விடு!' என்றான். ஆனால் அகிலனோ "நம் குரு நாதர் எங்கு சென்றாலும் நாம் அனைவரும் ஒன்றாகவே செல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார். நம் குரு நாதரின் வார்த்தையை நான் மீற மாட்டேன் ! ஆகவே நான் உங்களை விட்டுப் பிரிய மாட்டேன் !' என்றான்.
 மிகுந்த வெறுப்புடனும்,ஆத்திரத்துடனும் அகிலனைத் திட்டிக் கொண்டே காட்டுப் பகுதிக்குள் செல்லலாயினர். கொஞ்ச தூரம் சென்றதும் தரையெங்கும் சாணம் கிடந்தது. அதிலிருந்து துர் நாற்றம் வீசியது.
 உடனே அகிலன் தன் நண்பர்களிடம், "இந்தப் பகுதியில் எங்கோ யானைகள் சற்று முன் தான் நடமாடி இருக்கின்றன. எனவே இதற்கு மேல் நாம் செல்வது நல்லதல்ல! திரும்பி விடுவோம்!' என்றான்.
 "முட்டாளே! உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டான் சுந்தரன்.
 "கீழே கிடக்கும் சாணத்திலிருந்து வீசும் நாற்றம் சற்று முன் தான் யானைகள் இங்கு நடமாடி இருப்பதை உணர்த்துகிறது. சாணம் காய்ந்து இருந்தால் அதிலிருந்து துர் நாற்றம் வீசாது!' என்றான் அகிலன்.இவர்கள் இவ்வாறுபேசிக் கொண்டிருக்கும் பொழுதே சற்று தொலைவில் யானைகள் கூட்டமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தன.
 இதைக் கண்ட சுந்தரனும் குமரனும் அருகில் இருந்த உயரமான மரம் ஒன்றில் ஏறித் தங்களை மறைத்துக் கொண்டனர். ஆனால் மரம் ஏறத் தெரியாத வீரன் செய்வதறியாது திகைத்தான். இதற்குள் யானைகள் அவனை நோக்கி வேகமாக வரத் தொடங்கின.யானைகளின் கவனத்தை திசை திருப்பினால் அவை வீரனை விட்டு விடும் என்பதை உணர்ந்து கொண்ட அகிலன் "ஓ'வெனப் பெருங்குரலெடுத்துக் கத்திய படியே ஓடத்தொடங்கினான்.
 இப்பொழுது யானைகள் குரல் வந்த திசையை நோக்கி த் தம் கவனத்தைத் திருப்பி ஓடத் தொடங்கின. வேகமாக ஓடிய அகிலன் மரம் ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்த காட்டுக் கொடி ஒன்றைப் பற்றி விறுவிறுவென மரத்தில் ஏறி உச்சிக்குச் சென்று தன்னை மறைத்துக் கொண்டான். இதற்குள் வீரனும் காட்டுச் செடிகள் அடர்ந்த புதருக்குள் சென்று தன்னை ஒளித்துக் கொண்டான். அக்காட்டு யானைக் கூட்டம் கொஞ்ச நேரம் அங்கு நின்று விட்டு ஒருவரையும் காணாததால் கலைந்து சென்றது.
 அதிர்ச்சியில் உறைந்து போன அம்மூவரும் ஒருவாறு மீண்டும் ஒன்று கூடினர். ஒன்றும் பேசாமலேயே சுள்ளிகளையும் விறகுக் கட்டையும் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தனர். அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் அவர்களுக்கு வந்த வழியும் மறந்து போனது.
 இவை அனைத்தையும் கண்ட அகிலன் "பயப் படாதீர்கள் ! நான் வரும் வழியெங்கும் புளியங் கொட்டைகளை இறைத்துக் கொண்டே வந்துள்ளேன்! அவற்றை அடையாளம் கொண்டே நாம் வந்த வழியிலேயே திரும்பி விடலாம்!' என்றான். அகிலனின் உற்று நோக்கும் திறனையும் சமயோசித புத்தியையும் கண்ட அம்மூவரும் வெட்கித் தலை குனிந்தனர்.
 குடிலை அடைந்ததும் முனிவரிடம் நடந்தவை யாவற்றையும் கூறினர். தாங்கள் அகிலனிடம் கண்ட சிறந்த குணங்களையும் கூறினர். முனிவர் பின்வருமாறு அவர்களிடம் கூறினார்.
 "அன்பு செல்வங்களே! நீங்கள் யாவரும் அகிலனின் புறத் தோற்றத்தைக் கொண்டு அவனை சிறுமைப் படுத்திக் கொண்டே இருப்பதை நான் நன்கு அறிவேன்!அகிலனின் ஆற்றலை உங்களுக்குக் காட்டவே நான் உங்கள் அனைவரையும் காட்டுக்கு அனுப்பினேன்! ஒரு மிகப் பெரிய வீட்டை அதை விட அளவில் மிகச்சிறிய கதவு காக்கிறது. கதவை விட பல மடங்கு சிறிய தாழ்ப்பாள் கதவைப் பாதுகாக்கிறது. ஒரு தாழ்ப்பாளை அதை விட ப் பலமடங்கு சிறிய பூட்டு காக்கிறது . பூட்டின் அளவை விட மிகச் சிறிய சாவி இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாகப் பாதுக்கிறது. எனவே அளவில் சிறியது என்பதற்காக எதையும் உதாசீனம் செய்யக் கூடாது. ஆகவே அகிலனின் உருவத்தைக் கொண்டு நீங்கள் அவனை சிறுமைப் படுத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். உருவத்தைக் கொண்டு எவரையும் மதிப்பிடக் கூடாது!'' என்று தன் சீடர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
 ஆம்!உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! இந்தக் கருத்தையே திருவள்ளுவரும் "வினைத் திட்பம்' அதிகாரத்தில் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து" என்கிறார்.
 இதன் பொருள் "உருண்டோடும் மிகப் பெரிய தேரைக் காப்பது அதன் மிகச் சிறிய அச்சாணியே ஆகும்.எனவே தோற்றத்தைக் கொண்டு எவரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது "என்பதாகும்.
 - லக்ஷ்மி பாலசுப்ரமணியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com