போராட்டம்!

ஒன்று கூடி திட்டமிட்டே ஒரு மனதாகச் செய்தனவே
 போராட்டம்!

கதைப்பாடல்!
 ஒன்று கூடி திட்டமிட்டே
 ஒரு மனதாகச் செய்தனவே
 சந்தனக் காட்டு மிருகங்கள்
 சாலை மறியல் போராட்டம்!
 
 பானை வயிறு ஆனையுமே
 படுத்துக் கொண்டது சாலையிலே!
 பூனைக் கண்ணன் கரடியுமே
 பூதம் போல நின்றதுவே!
 
 மானும் புலியும் குரங்கு முயல்
 மற்ற காட்டு விலங்குகளும்
 கானகம் ஒட்டிய சாலையிலே
 கண்டே வியந்தனர் மக்களுமே!
 
 போக்கு வரத்து பாதிப்பு
 போக வில்லை பேருந்துகள்!
 மூட்டைகளோடு சரக்குந்துகள்
 முடங்கி நின்றன வரிசையிலே!
 
 இந்தச் செய்தி ஆட்சியர்க்கு
 எட்டிவிட்டது அவர் உடனே
 அங்கே வந்தார் வனத்துறையின்
 அலுவலர்களும் விரைந்தனரே!
 
 காண வந்த ஆட்சியரும்
 காட்டைச் சுற்றிப் பார்த்திடவே
 ஆனைக்குட்டி அப்புவுமே
 அழைத்தது தோழன் சுப்புவுடன்!
 
 அப்புவின் மொழியில் சொல்லுவதை
 ஆட்சியரிடத்தில் அப்படியே
 சுப்புவும் தமிழில் சொல்லிவந்தான்
 சோகம் நிறைந்த கதையினைத்தான்!
 
 "ஆனை இடித்த வீடெனவே
 அங்கே தெரியும் இடமதுவோ
 ஆனை படுத்து உறங்கிடவே
 அங்கே பெரும் மரம் இருந்த இடம்!
 மச்சு வீடுகள் சிறுதொழில்கள்
 மழித்துக் கிடக்கும் பல இடங்கள்
 பட்டினி இன்றித் தின்றிடவே
 பசும்புல் தழைகள் நிறைந்த இடம்!
 
 மட்டமாக்கித் தூர்ப்பதனால்
 மறைத்துக் காணும் பள்ளம் அது
 கொட்டும் மழைநீர் தேக்கி வைத்தே
 குடித்திடத் தண்ணீர் கொடுக்கும் இடம்!
 எங்கள் இடத்தை நாளுக்கு நாள்
 இப்பிடி மாந்தர் அபகரித்தால்
 என்ன செய்வோம் விலங்குகள் நாம்
 எங்கே போவோம் வாழ்வதற்கு?
 
 காட்டு நிலத்துக் கப்பாலே
 காலை வைத்திட மாட்டோம் அதை
 நாட்டு நிலம் எனச் சொல்வது பொய்
 காட்டு நிலம்தான் அளந்தறிவீர்!
 
 அய்யா எங்கள் கோரிக்கை
 அதுதான் நியாயம் வழங்கிடணும்!''
 சொல்லி முடித்ததும் ஆட்சியரும்
 சுருக்காய் அங்கே முடிவெடுத்தார்!
 
 அளவையாளரை அழைத்திட்டார்
 "ஆக்கிரமிப்பினை அகற்றிடுவீர்
 அளந்தே அறிவீர் காட்டெல்லை
 ஆழப் புதைப்பீர் எல்லைக்கல்!
 
 அரணும் அமைக்கணும் சுற்றிலுமே
 ஆக்கிரமித்தால் கைது செய்வீர்!''
 அருமையான தீர்ப்பதனை
 அளித்தார் விலங்குகள் மகிழ்ந்தனவே!
 புலேந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com