தியாக தீபம்!: பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!

""கல்யாணி சிஸ்டர்... உங்க  வீட்டுக்காரர் குழந்தையோட வெளியில நிற்கிறார்...'' என்றாள் நர்ஸ் ஜோதி.
தியாக தீபம்!: பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!

""கல்யாணி சிஸ்டர்... உங்க வீட்டுக்காரர் குழந்தையோட வெளியில நிற்கிறார்...'' என்றாள் நர்ஸ் ஜோதி.
மருத்துமனை வாசலுக்கு ஓடினாள் கல்யாணி.
கரோனா நோய்த் தொற்று பரவியதிலிருந்து 48 நாட்களாக வீட்டுக்குச் செல்லாமல் தன்னை முழுவதுமாக தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவமனையும், நோயாளிகளின் நலனுமே முக்கியம் என்று இரவு, பகலாக சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாமல் பணியாற்றுகிறாள்.
செவிலியர் பணி அவளைக் கட்டிப் போட்டுவிட்டது. வீட்டு நலனைக் காட்டிலும் நாட்டு நலனே அவளுக்குப் பெரிதாகப் பட்டது. அவ்வப்போது தொலைபேசியில் பேசுவதோடு சரி... அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று குமார் அடம் பிடித்தாலும்... அழைத்துவர வேண்டாம் என்று கூறிவிடுவாள். ஆனால்... இன்று பார்த்தே ஆக வேண்டும் என்று தொலைபேசியில் அவன் அழுத அழுகையால் சரி என்று ஒப்புக் கொண்டாள்.
முகம், கை, கால்கள் என உடல் முழுவதையும் மூடி மறைத்துக் கொண்டு நின்றிருந்த அம்மாவை குமாருக்கு அடையாளம் தெரியவில்லை. கல்யாணி கையசைத்து "குமார் கண்ணா... நல்லா இருக்கியா...' என்று நா தழுதழுக்கக் கூப்பிட்டதும் தன் கை, கைல்களை உதறி அம்மாவிடம் போக வேண்டும் என்று அடம் பிடித்து அழுதான்.
அதற்குள் மருத்துவமனை வாசலில் பார்வையாளர்களின் கூட்டம் கூடிவிட்டது.
கல்யாணியின் மனம் ஓடிச் சென்று குமாரை அப்படியே தூக்கி மார்போடு மார்பாக அணைத்துக் கொள்ள ஏங்கியது. ஆனால், இந்தியாவும், இந்திய மக்களும்தான் அவள் கண்முன் தெரிந்தன. உடனே தன் பாசத்தையெல்லாம் மறைத்துக்கொண்டு மருத்துவமனை வாசலில் நின்றபடியே, சாலையில், கணவர் கைப்பிடியில் இருந்த குமாரைப் பார்த்து, கையை அசைத்தாள்.
""நல்லா இருக்கியா கண்ணா... அழக்கூடாது!... இந்த நேரத்துல நாம தனியா இருந்தாதான் அம்மா சீக்கிரமா வீட்டுக்கு ஓடிவர முடியும்...'' என்று சொல்லிக்கொண்டே கல்யாணி விம்மி விம்மி அழுதாள். அவளுடன் நின்றிருந்த செவிலியர் இருவரும் கண்கலங்கினர்.
""அம்மா... வீட்டுக்கு வாங்க... ப்ளீஸ்... இந்த வேலை வேண்டாம்...'' என்று அழுத குமாரை சமாதானப்படுத்தும்படி தன் கணவருக்கு கையால் ஜாடை காட்டினாள், உடனே கூட்டிக்கொண்டு போகும்படி சொன்னாள்.
உடனே சங்கர் தன் செல்போனில் மனைவியை அழைத்தார். அதை எடுத்து தன் மகனை சமாதானப்படுத்திப் பேசினாள்.
""குமார் கண்ணா.... அழக்கூடாது...நீ அழுதா... அம்மாவும் அழுவேன்...நோய்த் தொற்றால் உலகமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்துலதான் உங்க அம்மா முன்பைவிட அதிகமாக வேலை செய்யணும்... எனக்கு நீ வேறு... இந்தியா வேறு கிடையாது கண்ணா... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ...அப்பாவோட சமத்தா கிளம்பு கண்ணா... நான் சீக்கிரமே வந்துடுவேன்...''
கண் எதிரே அம்மாவும் பிள்ளையும் இருந்தும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொள்ள முடியாமல் அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே தொலைபேசியில் நடக்கும் இந்தப் பாசப் போராட்டத்தைக் கண்ட பார்வையாளர்கள் கண்களும் கலங்கின... சிலர் அதை செல்பேசியில் பதிவு செய்தனர்.
""கல்யாணி சிஸ்டர்!.... உங்களை டாக்டர் உடனே கூப்பிடறார்'' என்று நர்ஸ் சோதி வந்து சொன்னவுடன் குமாரைப் பார்த்து கையசைத்துவிட்டு... தன் கண்களைத் துடைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினாள்.
குமார் வெகுநேரம் அம்மா போன திசையைப் பார்த்தபடி அழுது கொண்டே இருந்தான்.
இரவு வெகு நேரமாகியும் குமார் தூங்கவில்லை. அவனை தன் மடியில் போட்டபடி ""கண்ணா...
ஃபோன்ல அம்மா... உங்கிட்ட என்ன சொன்னாங்க...? அதை நினைச்சுகிட்டே கண்ணை முடித் தூங்கு... அம்மா கனவுல வருவாங்க...'' என்றார் சங்கர்.
கண்ணை மூடி அம்மா பேசியதை நினைக்கத் தொடங்கினான் குமார்... சிறிது நேரத்தில் தூங்கிப் போனான்.
மறுநாள் எழுந்ததும் சங்கர் கேட்டார்.... ""அம்மா கனவுல வந்தாங்களா செல்லம்....?''
""ஓ... வந்தாங்க டாடி.... என்னை எப்போதும் கட்டிப் பிடித்திருப்பாங்கல்ல.... அதேமாதிரி நம்ம இந்தியாவையும் கட்டிப் பிடித்திருக்கிற மாதிரி எனக்குச் தெரிஞ்சாங்க டாடி... மை மம்மி ஈஸ் கிரேட்...''
இடைமருதூர் கி.மஞ்சுளா

படம் வரைந்தவர் -

எஸ்.ஷ்ருதிகா,9 - ஆம் வகுப்பு, சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com