மரங்களின் வரங்கள்!: பயோ டீசல் மரம்

நான் தான் காட்டாமணக்கு மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஜட்ரோஃபா கர்கஸ் என்பதாகும். நான் எப்போரபியாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: பயோ டீசல் மரம்


காட்டாமணக்கு மரம்

குழந்தைகளே நலமா?

நான் தான் காட்டாமணக்கு மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஜட்ரோஃபா கர்கஸ் என்பதாகும். நான் எப்போரபியாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தாயகம் அமெரிக்கா. எனக்கு ஆதாளை, எலியாமணக்கு என்ற வேறு பெயர்களுமுண்டு. என் இலை, பால், பட்டை, எண்ணெய் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை. நான் சுமார் 5 மீட்டர் உயரம் மட்டுமே வளரக் கூடிய ஒரு சிறிய மரமாவேன். நான் வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப நாடுகளில் நன்றாக வளருவேன். தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் என்னை வேலிக்காக வளர்க்கிறார்கள்.

என் இலைகள் நன்கு அகலமாக விரிந்து கரும்பச்சை நிறத்திலிருக்கும். என் இலை உமிழ்நீரையும் பெருக்கும், பால் ரத்தக் கசிவை நிறுத்தவும், சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுது. அவை விளை நிலங்களுக்கு தழை உரமாகும். பட்டுபூச்சிக்களுக்கு என் இலை நல்ல உணவு. என் இலையை விளக்கொண்ணெயில் வதக்கிக் கட்ட, கட்டிகள் கரைவதோடு, வலியும் ஓடி விடும்.

என் மலர்கள் கொத்தாகப் பூப்பதோடு, அவை மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலிருக்கும். என் காய்கள் கருநீல நிறத்திலிருக்கும். ஒரு கொத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட காய்கள் இருக்கும். காய்கள் பச்சை நிறத்திலிருந்து 4 மாதங்களில் மஞ்சளாக மாறி விதைகள் முற்றி வெடிக்கும். விதையிலிருக்கும் வெள்ளையான சதையிலிருந்து தான் பயோ டீசல், எண்ணெய், தயாரிக்கிறாங்க.

குழந்தைகளே, என் எண்ணெய்யிலிருந்து சோப்பும், மெழுவர்த்தியும் தயாரிக்கலாம். இதிலுள்ள "ஜென்ரோபைன்' எனப்படும் ஆல்க்கலாய்டு புற்று நோய் எதிர்ப்பிற்கும் மருத்துவர்கள் பயன்படுத்தறாங்க. இந்த எண்ணெய் தோல் வியாதிகளுக்கும், கால்நடைகளின் புண்களுக்கும், ஈக்களினால் உண்டாகும் தொல்லைகளுக்கும் மருந்தாக பயன்படுது. என் விதை மூலம் வார்னிஷ் தயாரிக்கலாம். என் எண்ணெய்யில் குறைந்த அளவே பிசுபிசு தன்மை உள்ளதால், புகையைக் கக்காது.

ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரின் போது மின்பொறிகளுக்கு என் எண்ணெய்யைத் தான் மசகு எண்ணெய்யாக பயன்படுத்தினாங்க. குழந்தைகளே, இந்த எண்ணெய்யை ஜப்பானுக்கு உற்பத்தி செய்து கொடுத்தது யார் தெரியுமா ? இந்தோனேசியா. என் எண்ணெய்யை இயற்கை பூச்சிக் கொல்லியாகவும், உராய்வு காப்பு பொருள் தயாரிக்கவும், தோல் பதனிடவும், தீ தடுப்பு சாதனங்களுக்காகவும் பயன்படுத்தலாம். இப்போதெல்லாம், நூற்பாலைகளில் என் எண்ணெய்யை தான் பயன்படுத்தறாங்க.

என் மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கருநீல வண்ணம் துணிகளுக்கும், மீன் வலைகளுக்கும், நிறம் கொடுப்பதற்காகவும் பயன்படுது. என் எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து புண், சிரங்கு மேல் பூசினால் அவைகள் இருந்த இடம் தெரியாது.

உங்களுக்கு வாய் புண் இருக்கா? என் பாலை வாயில் விட்டுக் கொப்பளிங்க, வாய் புண் ஆறிவிடும். பாலைத் துணியில் நனைத்து, ரத்தம் கசியும் புண்களில் வைக்க ரத்தப் பெருக்கு நிற்கும், புண் சீழ் பிடிக்காமல் ஆறும்.

என் வேர்பட்டையை மைய அரைத்து சுண்டைக்காய் அளவு பாலில் கலந்து குடித்தால் மஞ்சள் காமாலை, வீக்கம், வயிற்றில் கட்டி, வயிறு வீக்கம், குஷ்டம் குணமாகும். என் இளங்குச்சியால் பல் துலக்கினால் பல் வலி, பல் ஆட்டம், இரத்தம் சொரிதல் பிரச்சனைகள் தீரும். ஒரு காலத்தில் உயர் ரக டீசல் தயாரிக்க தகுந்த மரம் காட்டாமணக்கு மரமுன்னு பேசிக்கிட்டாங்க. ஏன் தெரியவில்லை, அந்த முடிவை கைவிட்டுட்டாங்க. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்க.

குழந்தைகளே, சுட்டெரிக்கும் வெயிலை தடுத்து நிறுத்தும் ஆற்றலும், மழையை வரவழைக்கும் பெரும் திறனும் படைத்தது மரங்கள். மரங்களும் ஒரு உயிரினமே, மறக்கலாமோ அதுவும் உங்களினமே. மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com