முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
பகிர்ந்துண்டு வாழும் பறவை!
By - வளர்கவி | Published On : 27th June 2020 10:00 AM | Last Updated : 27th June 2020 10:00 AM | அ+அ அ- |

காகம் ஒன்று மரத்திலே
கட்டி வைத்த கூட்டிலே
எட்டு முட்டை இட்டதும்
இரை எடுக்கப் போனதாம்!
கூடு கட்டும் கலையினைக்
கற்றறியாக் கருங்குயில்
நாடி அந்தக் கூட்டிலே
நாலு முட்டை இட்டதாம்!
கூட்டில் உள்ள முட்டைகள்
குஞ்சு பொரிக்கும் நாள் வரை
காட்ட வில்லை வேற்றுமை
கருத்த குயிலின் குஞ்சிடம்!
அலைந்து திரிந்து இரையினை
அலகில் எடுத்து வந்திடும்
தலையை நீட்டும் குஞ்சுகள்
தின்னக் கொடுத்து மகிழ்ந்திடும்!
நாளும் நாளும் இப்படி
நடந்து கொண்டால் எப்படி?
வாழும் காக்கைக் குஞ்சுகள்
வாயைத் திறந்து கத்தவும்....
.... ஏய்த்த குயிலின் குஞ்சுகள்
இரையை வேண்டிக் கத்தின!
சாய்த்துத் தலையைக் காகமும்
சப்தம் கேட்டு வியந்தது!
பார்க்க யாவும் ஒரு நிறம்
பறவை எல்லாம் ஓரினம்!
வியக்கும் வண்ணம் குயில்களின்
உருவம் எண்ணி ஒரு கணம்
அதிசயித்த காக்கையும்
அன்பு கொண்டு அவற்றிடம்
புதிய வானப் பாதையில்
பறந்து செல்வீர் நீங்களே!
பறவை தமது பார்வையில்
பழிக்கும் ஜாதி பார்ப்பது
இறக்கும் காலம் வரையிலே
இருக்கப் போவதில்லையே!
சிறகு முளைக்கும் நாள்வரை
சேர்ந்திருப்போம் நாமெலாம்!
பகிர்ந்து உண்டு வாழ்வதே
நமது பண்பு என்றதாம்!