அரங்கம்: ஆறுவது சினம்!

ஏண்டா எப்பப் பாரு டி.வி. பார்க்கறயே!.... படிக்க வேண்டாமா? உருப்படாம போயிடுவேடா!
அரங்கம்: ஆறுவது சினம்!

காட்சி - 1
இடம் - செல்வத்தின் வீடு.
மாந்தர் - செல்வம், செல்வத்தின் தாயார் சிங்காரி.

(செல்வம் வீட்டில் படிக்கும் நேரத்தில் உட்கார்ந்து டி.வி. பார்க்கிறான். - அப்போது அவன் அம்மா சிங்காரி வருகிறாள்.)

சிங்காரி : ஏண்டா எப்பப் பாரு டி.வி. பார்க்கறயே!.... படிக்க வேண்டாமா? உருப்படாம போயிடுவேடா!
செல்வம் : நீ எந்நேரமும் சீரியல் பார்க்கறயே!..... நான் ஏதாவது சொல்றேனா? 
சிங்காரி : பல்லைத் தட்டிப்பிடுவேன்.... பக்கத்து வீட்டிலே போய்ப் பாரு!.... உங்க கூட படிக்கிற தேஜாவும், அவன் அக்கா பூஜாவும் எப்படிப் படிக்கிறாங்கன்னு!.... 
செல்வம் : ஆவூன்னா.... அவங்களோட என்னை ஜாயின்ட் பண்ணிப் பேசாதேம்மா!.... 
(கோபத்துடன் ரிமோட்டைத் தூக்கிக் கீழே 
வீசுகிறான்.)

சிங்காரி : ரிமோட்டையா தூக்கி அடிக்கிறே? உன்னை என்ன பண்றேன் பாரு....
(அருகில் உள்ள குச்சியை எடுத்துக்கொண்டு துரத்துகிறாள்.  -  செல்வம் வீட்டிற்குள் அங்கும், இங்கும் 
ஓடுகிறான். )

செல்வம் : அம்மா,..... அடிக்காதேம்மா..... அம்மா,..... அடிக்காதேம்மா.... 

காட்சி - 2
இடம் - பூஜாவின் வீடு.
மாந்தர் - பூஜா, தேஜா, அப்பா ஞானவேல்.

(பூஜா, தேஜாவின் அப்பா ஞானவேல் ஈஸி சேரில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு இருபுறமும், பூஜாவும், தேஜாவும் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். --- செல்வம் அலறும் குரல் அவர்கள் காதில் விழுகிறது.)

ஞானவேல் : பக்கத்து வீட்டு செல்வம் படிக்காம, அவங்க அம்மாகிட்டே அடிவாங்கறான் போல இருக்கு...
தேஜா : எங்களை நீங்க அடிக்க மாட்டீங்கதானே?..... 
ஞானவேல் : நல்ல பிள்ளைங்களை யாராவது அடிப்பாங்களா?
பூஜா : குழந்தைகளை அடிக்கக்கூடாது..... இல்லையாப்பா....
ஞானவேல் : ஆமா..... அது அவங்க மனநிலையைப் பாதிக்கும்..... அன்பா புரியும்படி சொல்லித் திருத்தணும்....
இருவரும் : எங்கப்பா..... நல்ல அப்பா!.... 

காட்சி - 3
நேரம் - காலை பள்ளிக்குப் புறப்படும் நேரம்.
மாந்தர் - செல்வம், பூஜா, தேஜா, செல்வத்தின் அம்மா சிங்காரி.

(பூஜாவும், தேஜாவும் பள்ளிக்கூடம் போகின்றனர். செல்வம் வீட்டில் இருந்து, பள்ளிக்கூடம் போவதற்காக இவர்களுடன் சேர்ந்து கொள்கிறான். - அவன் அம்மா சிங்காரி வீட்டு வாசலில் வந்து நின்று.....-)

சிங்காரி : அம்மா பூஜா,..... நேத்தையிலிருந்து செல்வம் ஒண்ணுமே சாப்பிடலை..... கோபமா இருக்கான்..... கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் போகச் சொல்லும்மா..... 
பூஜா : அம்மா சொல்றாங்கல்லே.... சாப்பிட்டு வா செல்வம்....
செல்வம் : எனக்கு யாரும் புத்தி சொல்லத் தேவையில்லை.....
(முன்னால் நடந்து போகிறான்.)

காட்சி - 4
இடம் - பள்ளி வகுப்பறை
மாந்தர் - பூஜா, செல்வம், ஆசிரியர், மற்றும் மாணவ, மாணவிகள்.

(பள்ளிக்கூடத்தில் வகுப்பு முதல் வரிசையில் பூஜாவும், செல்வமும் அமர்ந்திருக்கிறார்கள். ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்.)

(ஆசிரியர்,..." உடல் நலம் பேணல்'.... என்று சொல்லிக் கொண்டே,  போர்டில் எழுதுகிறார்.) 

ஆசிரியர் : அப்படீன்னா என்ன?.... நம்ம உடலை ஆரோக்கியமா வச்சிருந்தால்தான் நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியும்..... கமான்....  பூஜா,.... எப்படி இந்த உடலைப் பாதுகாக்கணும்!
பூஜா : குளித்து, நகம் வெட்டி, தலைவாரி சுத்தமா வச்சிக்கணும் சார்..... 
ஆசிரியர் : அப்போ பல்லு விளக்க வேண்டாமா?.... விளக்கலேன்னா என்ன ஆகும்?.... 
அனைவரும் : கப்படிக்கும் சார்..... யாரும் பக்கத்துலே வரமாட்டாங்க..... 
(அனைவரும் சிரித்தல்)

ஆசிரியர் : சைலண்ட்..... சரி,..... வேறே எப்படி இந்த உடம்பைப் பாதுகாப்பா வெச்சிக்கலாம்?.... செல்வம்,... நீ சொல்லு!..... 
செல்வம் : (எழுந்து நின்று...) சார்,.... வந்து.... ஆ!.... 
(நிற்க முடியாமல் கீழே மயக்கமாய் உட்காருகிறான்.)

ஆசிரியர் : செல்வம்,.... என்னாச்சு உனக்கு?.... அவனுக்கு யாராவது தண்ணி குடுங்க..... 
பூஜா : சார்!.... இவன் அம்மா மேலே கோவிச்சுக்கிட்டு நேத்தையிலே இருந்து ஒண்ணுமே சாப்பிடலை!....
ஆசிரியர் : அப்படியா?.... பூஜா,.... இவனைக் கூட்டிக்கிட்டுப் போயி கேன்டீன்லே ஏதாவது வாங்கிக் குடும்மா.....
(ஆசிரியர், சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுக்கிறார்....)

பூஜா : வேண்டாம் சார்!.... எங்கிட்டேயே நிறைய சாப்பாடு இருக்கு..... வா, செல்வம்...... முதல்லே சாப்பிடலாம்....

காட்சி - 5
இடம் - பள்ளிக்கூடத்தின் வெளியில் மரத்தடி.
மாந்தர் - பூஜா, செல்வம்.

பூஜா : இங்கே பாரு செல்வம்,..... கோபப்பட்டா ஒண்ணும் நடக்காது!....... அது நம்ம உடம்பைத்தான் பாதிக்கும்..... அம்மா சாப்பிடச் சொன்னப்பவே நீ சாப்பிட்டிருந்தா, வகுப்பறையில் அவமானப் பட்டிருக்க வேண்டாம்.....
செல்வம் : ரொம்ப தேங்ஸ் பூஜா..... 
பூஜா : தேங்ஸ் எதுக்கு?.... இனிமேலாவது எதுக்கெடுத்தாலும் கோபப்படாம இரு.....
செல்வம் : சரி....

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com