சகலமும் ஆசான்கள்!

தாய், மற்றும் தந்தை நமக்கு முதல் முதல் ஆசான்கள் ஆம்!சிறப்புடன் வாழக் கல்வி - ஐயம்
சகலமும் ஆசான்கள்!

தாய், மற்றும் தந்தை நமக்கு 
முதல் முதல் ஆசான்கள் ஆம்!
சிறப்புடன் வாழக் கல்வி - ஐயம்
தெளிவித்தார் பள்ளி ஆசான்

உத்தமர், சான்றோர், மேலோர்,
உண்மையை உரைப்போர், நல்லோர்
நமக்கு நல் புத்தி சொல்வோர்
அனைவரும் நம் ஆசான்கள் ஆம்!

காலையில் எழுக எனக் 
கூவிக் கரையும் காக்கை - நித்தம் 
""மாலையில் ஓடியாடி...
... மகிழ்க!'' எனும் குருவிக் கூட்டம்

""சாலையில் ஒழுங்கு பேணல் 
தவறாமை'' எறும்பின் பாடம்!
சாலவே கற்பிக்கின்ற 
சகலமும் நம் ஆசான்கள் ஆம்!

""இனத்தோடு கூடி வாழ்க!''
இவைகள் வெண் புறாக்கள் பாடம்!
""அனைத்தையும் தியாகம் செய்க'' 
என்பதே வாழையின் பாடம்!

""உருவு கண்டு எள்ளாமை வேண்டும்''
என்றிடும் மகிழம்பூக்கள்!
வணங்கிடத் தக்க ஆசான் 
வரிசையில் இவைகள் சேரும்!

""உழைத்துண்க!'' எனும் தேனீக்கள்
உழவர்களுக் குதவி செய்ய 
மண்தனைப் பிசையும் புழுக்கள்!
சலிப்புறா முயற்சி வெற்றி 

தந்திடும் சிலந்தி பாடம்!
குயிலிடம் இசையினைக் கேட்போம்!
சேவலால் வைகறையில் எழுவோம்!
இவையாவும் ஆசான்கள் ஆம்!

""பயிலுக!'' என்று இயற்கை 
தரும் பாடம் ஏராளம்தான்!
கண்கள் விழித்தாலே போதும்!
காட்சிகள் தந்திடும் பாடம்!

காதுகள் திறந்தால் போதும்!
இசையோடு கருத்துகள் சேரும்!
கனிவோடு கவனித்திட்டால்
சகலமும் நம் ஆசான்கள் ஆம்!
ச.கந்தசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com