பற்களின் காவலன்- கருவேல மரம்

 நான்தான் கருவேல மரம் பேசறேன். என்ன, என்னை எல்லாம் ஒரு மாதிரியா பார்க்கறீங்க.

மரங்களின் வரங்கள்!

 குழந்தைகளே நலமா....
 நான்தான் கருவேல மரம் பேசறேன். என்ன, என்னை எல்லாம் ஒரு மாதிரியா பார்க்கறீங்க. நான் சீமைக் கருவேல மரமில்லை! குழந்தைகளே. என்னையும் எனக்குப் பின்னால் வந்த சீமைக் கருவேல மரத்தையும் பலர் ஒன்றென கருதி என்னையும் தாக்கறாங்க. எனது அறிவியல் பெயர் அகாசியா யலோடிறக்கா என்பதாகும். நான் பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் தமிழகத்து மக்களுடன் தொன்மைக் காலந்தொட்டே தொடர்புடையவன். நம் தேசத்தின் பாரம்பரிய மரங்களில் நானும் ஒருவன்.
 நான் பெரும்பாலும் செம்மண் நிலங்களில் வளருவேன். நாங்கள் தனியா இருக்க மாட்டோம், கூட்டுக் குடும்பமாகத் தான் இருப்போம். வயல்வெளிகள், தோட்டங்களில் வேலியைக் காக்கும் மரங்களாக நாங்கள் வளர்ந்திருப்பதை நீங்கள் காணலாம். என் இலைகள் சிறியதாகவும், காய்கள் அவரைக்காய் போல் நீண்ட பட்டையான தோற்றத்தில் சிறிய முடிகளுடன் இருக்கும்.
 காற்றடிக்கும் நேரங்களில், காய்ந்த காய்களின் உள்ளிருக்கும் விதைகளின் ஒலி, காற்றில் எழும் ஒலி, சலங்கை ஒலி போல ஒலிப்பதை நீங்கள் என்னைக் கடந்து போகும் போது கேட்டிருப்பீர்கள். சிலர் இதை வைத்து கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவார்கள், பயப்படாதீங்க. மிகவும் உறுதியாக வைரம் பாய்ந்து காணப்படும் என்னை விவசாயப் பொருட்கள் செய்ய பயன்படுத்தறாங்க. என் இலைகள் மற்றும் காய்கள் கால்நடை
 களுக்கு சிறந்த உணவு. என் இலை, காய்கள் மற்றும் மரப்பட்டைகளில் இரும்பு சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், வாலைன், தெரோனின் மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்கள் நிறைஞ்சிருக்கு.
 உங்களின் உயிரணுக்களின் ஆற்றலை மேம்படுத்தி, உடல்நலத்தையும், மனநலத்தையும் காக்கும் திறன் எங்கிட்ட இருக்கு. என் பட்டைகள் மற்றும் பிசின் உடல்சோர்வை நீக்குவதுடன், சுவாசப் பாதிப்புகளையும் சரியாக்கும். என் இலைகளை அரைத்து, சாறெடுத்து, தண்ணீரில் கலந்து பருகி வந்தீர்களேயானால் உடல் சூடு சட்டென போயிடும், வயிற்றுப் போக்கு பாதிப்பு
 களும் விலகி, உடல் சோர்வும் நீங்கும். என் பிசினை காயவைத்து, தூளாக்கி அதை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால், உயிரணுக்கள் ஆற்றல் பெறும்.
 ஆலும், வேலும் பல்லுக்குறுதி என்ற பழமொழி என் நண்பர் வேப்ப மரத்தை மட்டும் குறிப்பிடவில்லை குழந்தைகளே, என்னையும் தான் குறிக்கிறது. என்னுடைய உறுதித் தன்மை, அதில் நிறைந்துள்ள தாதுகள் மற்றும் உயிர்மச் சத்துகள், பல் துலக்கும் போது, நன்கு செயலாற்றி, பல் வலி, பல் ஆடுவது, பல் கூச்சம் போன்ற பல பிரச்னைகளைச் சரி செய்யும். உங்களுக்கு இருமல் இருக்கா, அப்போ என் பிஞ்சு பூக்களை தூளாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுங்க, இருமல் இருந்த இடம் தெரியாது. என் பட்டையைத் தூளாக்கி, அதை நீரில் கலந்து கொதிக்க வைத்து, குடிநீர் போல அருந்தி வந்தால் சுவாசக் கோளாறுகளால், பேச முடியாமல் தொண்டைக் கட்டிக் கொண்டு ஏற்பட்ட தொண்டைப் புண் பாதிப்புகளை குணப்படுத்தும்.
 அந்தக் காலத்தில் கிழிந்த புத்தகங்களை ஒட்ட என் பிசினை தான் பயன்படுத்துவார்கள். எப்படி தெரியுமா, என் பிசினை சேகரித்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, சற்று நேரம் கழித்து பார்த்தால் அது தைலம் போல இருக்கும் இதைத் தான் தாள்கள், அட்டைகளை ஒட்டப் பயன்படுத்துவார்கள். இது தெரியுமா உங்களுக்கு ? இந்தியில் "பபூல்' என அழைக்கப்படும் பெரிய மருந்து கம்பெனி, என் மரத்தின் பட்டையிலிருந்து தான் டூத் பேஸ்ட்டை பல ஆண்டுகளாக தயாரிக்கறாங்க. என் பட்டைகள் உடல் உறுதியாக வலுவடைய வைக்கவும், இரத்த பாதிப்புகளை சரிசெய்யவும் உதவுது. என் பட்டைகளைக் கொண்டு பற்பொடிகளையும் தயாரிக்கலாம். உங்களுக்குக் கிடைத்த அரிய வரம், மரம். என் தமிழ் ஆண்டு விய. என் நட்சத்திரம் அஸ்தம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 -- பா.இராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com