ரொம்ப சந்தோஷம்!

ஒரு அம்மையார் ஆதரவற்ற பெண்களுக்காக ஒரு இல்லம் கட்டினார். மேலும் பல சமூக சேவைகளையும் அந்த அம்மையார் செய்து வந்தார்.
 ரொம்ப சந்தோஷம்!

நினைவுச் சுடர் !
ஒரு அம்மையார் ஆதரவற்ற பெண்களுக்காக ஒரு இல்லம் கட்டினார். மேலும் பல சமூக சேவைகளையும் அந்த அம்மையார் செய்து வந்தார். ஆனால் இது போன்ற பொதுச் சேவைகள் செய்வதற்கு ஏராளமான பொருளுதவி தேவைப்பட்டது. ஆதரவற்றோர் இல்லத்தின் நலப்பணிகளுக்காக நிதி வசூல் செய்து கொண்டிருந்தார். கருணை உள்ளம் கொண்ட சிலர் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். அம்மையாரும் அயராது தினமும் பலரைத் தேடிச் சென்று பொருள் உதவி பெறுவதற்கு முயற்சி செய்து வந்தார்.
 சிலர் தங்களாலான உதவிகளைச் செய்வார்கள். சிலர் அவரை எரிந்து விழுவார்கள். ஆனால் அதற்கெல்லாம் அவர் அயரமாட்டார்.
 ஒரு முறை அவர் ஒரு பணக்காரரிடம் தனது ஆதரவற்ற பெண்களுக்கான இல்லத்தின் செலவுகளுக்காக நிதி கேட்டார். அந்தப் பணக்காரரின் வீட்டு வாசலில் ஒரு பூசணிக்காய் இருந்தது. அம்மையார் பணத்திற்காக வந்தது பணக்காரருக்கு எரிச்சலாக இருந்தது.
 "என்னிடம் பணம் இல்லை..... வேண்டுமென்றால் இந்தப் பூசணிக்காயை எடுத்துக்கிட்டுப் போங்க!'' என்று அலட்சியமும், கிண்டலுமாக அந்தப் பூசணிக்காயை உருட்டி விட்டார்.
 வசதி நிறைந்த அந்தப் பணக்காரர் நிதி அளிக்காததை நினைத்து அம்மையார் வருத்தப்படவில்லை. முகத்தில் புன்சிரிப்புடன் அந்தப் பூசணிக்காயை எடுத்துத் தன் தலை மீது வைத்துக் கொண்டார்.
 பிறகு, அந்தப் பணக்காரரைப் பார்த்து, ""பூசணிக்காயா! ரொம்ப சந்தோஷம்! .... ரொம்ப நன்றிங்க.... ஒண்ணுமில்லேன்னு சொல்லாம இதையாவது கொடுத்தீங்களே!.... இந்தப் பூசணிக்காய் எங்கள் இல்லத்தில் வாழும் அனாதைக் குழந்தைகளுக்கு, சாம்பார், கூட்டு வைத்துப் போடுவதற்கு உதவியாய் இருக்கும்! அவங்க வயிறும் நிறையும். உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்!....'' என்று கூறிக்கொண்டே நடந்தார்.
 பணக்காரரும், அவரைச் சுற்றியுள்ளோரும் திகைப்புடன் வாயடைத்து நின்றனர்.
 அன்பினால் எடுத்த முடிவை நிறைவேற்றுவதற்காக உறுதியுடன், பொறுமையுடன் இருந்த அந்த அம்மையார்தான் மனிதாபிமானம் மிக்க டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி! இன்றும் அந்த ஆதரவற்ற பெண்களின் இல்லம் அடையாறில் இயங்கிக் கொண்டு இருக்கிறது!
 தேனி. எஸ். ஆறுமுகம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com