பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சிறு கதை: நிலா சோறு

நவீன் இரண்டு வயதாகும் குட்டிப்பையன், சுட்டிப்பையனும் கூட. அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்வதால் அவனுடன் இருப்பது பாட்டி தாத்தா மட்டுமே.
பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சிறு கதை: நிலா சோறு


நவீன் இரண்டு வயதாகும் குட்டிப்பையன், சுட்டிப்பையனும் கூட.

அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்வதால் அவனுடன் இருப்பது பாட்டி தாத்தா மட்டுமே.

மாலை நேரத்தில் வீடு திரும்பும் அம்மாவுக்கு, வீட்டு வேலை செய்யவே நேரம் சரியாக இருக்கும். அதனால் நவீனுடன் விளையாட முடிவதில்லை.

அம்மா, அப்பாவுடன் விளையாட முடியவில்லை என்ற ஏக்கம் நவீனுக்கு அதிகம் உண்டு.

அந்தக் குறையை போக்குபவர் தாத்தா. மாலை பொழுதில் மொட்டை மாடிக்கு நவீனை அழைத்துச் சென்று விடுவார்.

தாத்தாவை யானையாக்கி அவர் முதுகில் உட்காருவது என்றால் நவீனுக்கு கொள்ளைப் பிரியம்.

தாத்தாவுடன் எவ்வளவு நாள் தான் விளையாடுவது, ""இனி நான் மாடிக்கு வரமாட்டேன்'' என தாத்தாவிடம் கோபித்து கொண்டு ஓரமாக உட்கார்ந்து
கொண்டான் நவீன்.

வேலை முடிந்து வந்த அம்மா நவீனை பார்த்ததும், ""ஏன்னடா செல்லம் மாடிக்கு போகலையான்னு'' கேட்க, ""உன் கூட டூ..., எல்லார் கூடவும் டூ,... இனி நான் யார் கூட பேசமாட்டேன் போ'' என தலையை திருப்பி கொண்டேன்.

""அச்சச்சோ குட்டி, இன்னைக்கு நான் உன்னைய மாடிக்கு அழைச்சிட்டு போய் மம்மம் தர்றேன்'' என அம்மா ஆறுதல் சொன்னாள். ஆனால் நவீன் முகம் மாறவில்லை.

தனது வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு நவீனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, மாடிக்கு அம்மா அழைத்துப் போனாள்.

அன்று பெளர்ணமி. அழகு நிலா அற்புதமாக வெளிச்சத்தை பூமியில் கொட்டிக்கொண்டு இருந்தது.

நவீனுக்கு நிலாவைக் காட்டியதும் ஒரே உற்சாகம். ""இப்போ நீ சாப்பிடுறயே அது நிலா சோறு'' என்று அம்மா சிறுவயது ஞாபகத்தை சொல்ல, அப்படியே கேட்டுக் கொண்டிருந்தான் நவீன்.

அப்போது மேலே இருந்து ஒரு கலர் கலரான பப்பிள்ஸ், நவீன் மேல் வந்து விழுந்து காணாமல் போனது.

""அம்மா இந்த பப்பிள்ஸ் எங்க இருந்து வருது'?' என நவீன் கேட்டான்.

""அது நிலா அனுப்பியது'' என்றாள் அம்மை. ""நிலாவுக்கு உன்னை பிடித்துபோய்விட்டது. அதனால் உனக்கு அன்பு பரிசாக அதை அனுப்பி இருக்கிறது நிலா'' என்றாள்.

""அம்மா நானும் நிலாவுக்கு என்னுடைய அன்பை திருப்பி கொடுக்க வேண்டும். அதற்கு என்ன வழி?

என்று கேட்டான்'' நவீன்.

""நாம் ரெண்டு பேரும் சேர்ந்து பப்பிள்ஸ் தயார் செய்து நாளை நிலாவுக்கு அனுப்புவோம்'' என்றதும் நவீனுக்கு ஒரே சந்தோஷம்.

கீழே வந்ததும் தாத்தா , பாட்டியிடம், ""அம்மா வந்து நிலா சோறு தந்தாள். நிலா எனக்கு பப்பிள்ஸ் தந்தது'' என மழலை குரலில் பேசி ஆனந்தப்படுத்தினான்.

அன்று இரவு நிலா கனவு நவீனுக்கு வந்தது. மாடியில் இருந்து நவீன் பப்பிள்ஸ் ஊதி ஊதி நிலாவுக்கு அனுப்பினான். ஆனால் நிலாவிடமிருந்து தனக்கு எதுவும் திருப்பி வரவில்லை என்றதும் கோபம் வந்துவிட்டது நவீனுக்கு. கண் விழித்துப் பார்த்தான். அம்மா கையால் அரவணைத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

ஓ... அம்மா வந்தால்தான் நிலாவிலிருந்து பப்பிள்ஸ் வருமா..என யோசித்தபடி தூங்கிவிட்டான்.

மறுநாள் அம்மாவும் நவீனும் சேர்ந்து சோப்பை கரைத்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொண்டு மேலே போய் ஸ்ட்ரா வைத்து ஊதினார்கள். அழகான பெரிய பப்பிள்ஸ் மேலே பறந்தது.

ஒரே குஷி நவீனுக்கு. கலர் கலராக பப்பிள்ஸ் மேலே பறக்க நவீனும் பறப்பது போல் உணர்ந்தான். அம்மா கூட இருக்கிறாள் அதனால் பப்பிள்ஸ் வந்துவிடும் என்ற ஆனந்தத்தில்...

அம்மா இறுக்கி அணைத்து நவீனை முத்தமிட்டாள்.

விகசிதா
படம் வரைந்தவர் - கோ. ஹரிஹா,
எட்டாம் வகுப்பு "அ' பிரிவு,
வேளாங்கன்னி மேல்நிலைப்பள்ளி,
வளசரவாக்கம் - 110

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com