மரங்களின் வரங்கள்!

நான் தான் பவளமல்லி மரம் பேசுறேன். நான் முதலில் ஒண்ணே ஒண்ணு உங்கக்கிட்ட சொல்ல விரும்பறேன்.
மரங்களின் வரங்கள்!


மருத்துவ சுரங்கம்  பவளமல்லி மரம்

குழந்தைகளே நலமா?

நான் தான் பவளமல்லி மரம் பேசுறேன். நான் முதலில் ஒண்ணே ஒண்ணு உங்கக்கிட்ட சொல்ல விரும்பறேன்.  தயவுசெய்து என்னையும் பாரிஜாத மரத்தையும் போட்டு குழப்பிக்காதீங்க.  எப்படி நெட்டிலிங்க மரத்தையும், அசோக மரத்தையும் ஒண்ணா சேத்து குழப்பிக் கொண்டிருக்கிறீர்களோ, அது போல என்னையும், பாரிஜாத அக்காவையும் குழப்பிக்காதீங்க.  அந்த அக்கா பெரியவங்க, அவங்க தேவலோகத்திலிருந்து வந்தவங்க. நான் வேற. எனது அறிவியல் பெயர் நைக்டன்டிரஸ் அர்போர்ட்ரிஸ்டிஸ் என்பதாகும். நான் ஒசியசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஆண் மரம். என் காய்கள் தட்டையாக வட்ட வடிவிலிருக்கும். இரண்டு விதைகள் இருக்கும். தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் உண்டாகும்.  என்னை வீட்டுத் தோட்டங்களிலும், பூங்காக்களிலும் காணலாம். 

என் இலை, பூ, பட்டை முதலியன மருத்துவ குணம் உடையன. வயிற்றுத் தொந்தரவு, மூட்டுவலி, காய்ச்சல், தலைவலி, இரத்தப்போக்கு போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுது. என் பூக்கள் கிளை நுனியில் பூக்கும், அது பவழ  நிறம் பட்டு வகைத் துணிகளுக்குத் சாயம் ஏற்ற பயன்படும்.  காம்பு பவழ நிறத்திலும், பூ வெண்மையாகவும் மல்லிகைப்பூ போல நறுமணத்துடனும் இருக்கும்.  என் மரத்தின் வேரை மென்று தின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலி குணமாகும். என் விதைகளை வறுத்து பொடியாக்கி உண்டு வந்தால் சரும நோய்கள் உருவாகாது.  இலைச்சாறு குழந்தைகளுக்கு சிறந்த மலமிளக்கி. 

என் இலைகள், பூக்கள், விதைகள், வயிற்று உப்புசம், மூட்டு வலி, காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுது. என் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து குடித்து வந்தீர்களேயானால், காய்ச்சல் வராது. உங்களுக்கு பதட்டத்தால் அதிக வியர்வை வருகிறதா, முதுகுவலி, காய்ச்சல் இருக்கா, என் இலையை சுடுநீரில் போட்டு நன்றாய் ஊற வைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை அருந்தி வாங்க, அவைகள் இருந்த இடம் தெரியாது. 

என் இலையை மென்று தின்னுங்கள். வியர்வை வராது.  அதுமட்டுமல்ல என் இலைக்கு சிறுநீர், பித்தம், ஆகியவற்றைப் பெருக்கி, மலமிளக்கும்.  என் பூவில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் மருத்துவத் தன்மை இருக்கிறது.  இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து.  என் இலைகளை 200 கிராம் எடுத்து மண்சட்டியில் வதக்கி, ஒரு லிட்டர் நீர் விட்டு சுண்டக்காய்ச்சி, குடித்து வந்தால்  இதயம் வலுப் பெறுவதுடன், இரத்தம் பெருகும்.  என் இலைச் சாறுடன் சிறிது உப்பு சேர்த்து, அத்தோடு தேன் கலந்து அருந்தினால் உங்கள் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறிவிடும்.  என் விதையைப் பொடி செய்து அதை தேங்காய் எண்ணெய்யில் குழைத்து தலையில் தேய்ந்து வந்தால் வழுக்கை மறைந்து முடி வளரும். 

குழந்தைகளே, மரங்கள் நிழலை மட்டுமா தருகின்றன. நாம் உண்ண காய், கனிகளைத் தருகின்றன. மண் அரிப்பைத் தடுத்து, மண்ணிலுள்ள நைட்ரஜன், பொட்டாஷ், பாஸ்பேட் போன்ற சத்துகளை வீணாக்கமாமல் தடுப்பதும் மரங்களே.  சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, நீங்கள் மாண்புற வாழும் வழிகளையும் காட்டுவது மரங்களே, மறக்கலாமோ அதன் வரங்களை. 

நான் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருள்மிகு பூமீஸ்வரர்,  நாகப்பட்டினம் மாவட்டம்,  சீர்காழி, அருள்மிகு சட்டைநாதர் பிரம்மபுரீஸ்வரர், தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை, தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேசுவரர், திருநறையூர், சித்தநாதேசுவரர் ஆகிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கேன். என் தமிழ் ஆண்டு  சோபகிருது. மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com