அரங்கம்: காவல் தெய்வம்!

இடம் - நகரின் நான்கு சாலைகள் பிரியும்நாற்சந்தி 
அரங்கம்: காவல் தெய்வம்!


காட்சி - 1
இடம் - நகரின் நான்கு சாலைகள் பிரியும்நாற்சந்தி 
மாந்தர் - போக்குவரத்து காவலர் ஆறுமுகம் காவல் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன், அமைச்சர்,பாதுகாப்பு அதிகாரி

(மோட்டார் சைக்கிளில் வரும் ராதாகிருஷ்ணன் ஆறுமுகம் அருகில் வண்டியை நிறுத்துகிறார். - ஆறுமுகம் விரைப்பாக சல்யூட் அடித்து உயர்அதிகாரிக்கு மரியாதை தெரிவிக்க)

ராதாகிருஷ்ணன் : அமைச்சர் மழை வெள்ள சேதத்தைப் பார்வையிட வருகிறார்.. அவர் வரும் கார் மற்றும் வாகனங்கள் இந்த வழியா தான் வரும். அப்போ எந்த வித இடைஞ்சலும் அமைச்சர் காருக்கு வராமல் பார்த்துக்குங்க மிஸ்டர் ஆறுமுகம்
ஆறுமுகம் - எஸ் சார்
(தன் டூ வீலரை ஓட்டிச் செல்கிறார் அதிகாரி. - காலை பத்து மணி வாக்கில் நகரின் முக்கியப் பகுதி ஆகையால் வாகனப் போக்குவரத்து
நெரிசல் அதிகரிக்கிறது. )

அவர் கையில் உள்ள வாக்கி டாக்கியில் குரல் :
....நாற்சந்திக்கு முதல் பீட்டுக்கு அமைச்சர் கார் நெருங்கி விட்டது! இன்னும் சில நிமிடங்களில் கார் நாற்சந்திக்கு வரும். கவனமா இருங்க'.....
(அப்போது ஒரு ஆம்புலன்ஸ் தன் சைரன் ஒலியை எழுப்பியபடி கிழக்கே அருகில்
வருவதைக் கவனிக்கிறார் ஆறுமுகம்.
எல்லா திசைகளிலும் வாகனங்களை சைகை மூலம் நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறார். ஆம்புலன்ஸ்
முன்னால் வரிசையாக வாகனங்கள் வழி
மறித்து நிற்கின்றன)

ஆம்புலன்ஸ் டிரைவர் : ஏட்டையா.. ஆம்புலன்ஸூக்குள் இருக்கும் பெண்மணிக்கு பிரசவ சிக்கல் ஆயிட்டு.. இன்னும் பத்து நிமிஷத்துக்குள் நாங்க ஆஸ்பத்திரி போயாகணும்!... இல்லாவிட்டால் தாயும் சேயும் பிழைப்பது கடினம்!...
ஆறுமுகம் : எல்லாரும் வண்டியை நகர்த்தி ஆம்புலன்ஸூக்கு வழி விடுங்க..அவசர கேஸ்ப்பா உள்ளே.....
(பாதை கிடைக்க ஆம்புலன்ஸ் நாற்சந்தியைக் கடக்க அப்போது சரியாக அங்கே அமைச்சர்கார் வருகிறது)
அமைச்சர் கார் முன்னால் வரும் செக்யூரிட்டி :
யோவ் என்னய்யா கன்னா பின்னான்னு வண்டிகள் நிக்குது. அமைச்சர் வர்றது தெரியாதா?....
ஆறுமுகம் : சார் ஆம்புலன்ஸில் அவசர பிரசவ கேஸ் இருக்காங்க. அதுக்கு வழிவிடத்தான்இப்படி ஆயிட்டுது.
செக்யூரிட்டி : இது க்ளியர் ஆக அரைமணி ஆகுமே.
(அப்போது அமைச்சர் காரில் இருந்து இறங்கி)

அமைச்சர் : என்ன சார்ஜண்ட்? என்ன மேட்டர் ?
அவசரமா நான் வெள்ள சேதம் பார்வையிடப் போறேன் இப்படி வாகனங்கள் வழி மறிச்சு நிக்குதே...!
ஆறுமுகம் பணிவுடன் :
ஐயா ஒரு ஆம்புலன்ஸ் டிராபிக்கில் சிக்கிடுச்சி.... அவசர பிரசவ கேஸ்...
அமைச்சர் : அப்படியா.... எல்லாரும் ஒதுங்குங்கப்பா ஆம்புலன்ஸூக்கு முதலில் வழிவிடுங்க...
(அமைச்சரே கை சைகையால் வாகனங்களை வழி விடச் சொல்ல ஆம்புலன்ஸ் மெல்ல வெளியேறி ஆஸ்பத்திரிக்குச் செல்கிறது. - ஆம்புலன்ஸ் பின்னால் ஆறுமுகம் சிறிது தொலைவு ஓடி, வழி தரச் சொல்லி சைகை காட்டி அனுப்பி விட்டு, மறுபடி நாற்சந்தி வருகிறார். பின் வாகன நெரிசலை சரி செய்ய அமைச்சர் காரில் ஏறிச் செல்லும் போது ஆறுமுகம் தோளில் தட்டி பாராட்டுகிறார்.)

அமைச்சர் : உங்க பெயர் என்ன?
ஆறுமுகம் : எஸ் ஆறுமுகம், ஹெட் கான்ஸ்டபிள் சார்..
அமைச்சர் : எந்த ஸ்டேஷன்?
ஆறுமுகம் : டவுன் வெஸ்ட் சார்
(அமைச்சர் கார் போனதும் தன் கடமையைக் கவனிக்கிறார்)

காட்சி - 2
இடம் - மருத்துவமனை
மாந்தர் - அமைச்சர், மகப்பேறுக்கு வந்த பெண், அவள் தாய் தந்தை மருத்துவர், நர்ஸ்
(ஆம்புலன்ஸில் இருந்து பெண்ணை ஸ்டிரச்சரில் படுக்க வைத்து ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்கிறார்கள்--இரண்டு மணி நேரம் கழித்து...)

பெண் மருத்துவர் : (அறை வெளியே காத்திருக்கும் பெற்றோரிடம்) - கவலைப் படாதீங்க.. ஆண்குழந்தை.. தாயும் சேயும் நலம். அஞ்சு நிமிஷம் தாமதித்து வந்திருந்தாலும் ரொம்ப அபாயம் ஆகி இருக்கும்...
பெண்ணின் தகப்பனார் : டிராஃபிக் ஏட்டய்யா அமைச்சர் காரையே நிறுத்தி எங்களை அனுப்பினார்.. அவரே வழியை விடச்சொல்லி பின்னால் கொஞ்ச தூரம் ஓடி வந்தார் டாக்டரம்மா.. அவர் இல்லாவிட்டால் டயத்துக்கு வந்திருக்க முடியாது.
(அப்போது மருத்துவ மனை வாசலில்
அமைச்சரின் கார் வந்து நிற்கிறது)

அமைச்சர் : எங்கேப்பா ஆம்புலன்ஸில் வந்த பெண் நல்லா இருக்காங்களா?
பெண்ணின் தகப்பனார் : வணங்கி - ஐயா நல்லா இருக்காங்க ஆண்குழந்தைங்க..
(குழந்தையை நர்ஸ் கையில் ஏந்தி வர --
அமைச்சர் தன் கழுத்தில் இருக்கும் தங்க
சங்கிலியை குழந்தை கையில் நீட்ட இறுகப்
பற்றிக் கொள்கிறது)

பெண்ணின் தாயார் : ஐயா குழந்தைக்கு ஒரு பெயர் நீங்கதான் வைக்கணும்!....
அமைச்சர் : பெயர்தானே...! கடமையில் தவறாத மனிதாபிமானம் மிக்க போக்குவரத்துக் காவலர் ஆறுமுகம் பெயரை வைக்கிறேன்.. ஆறுமுகம்..ஆறுமுகம்
(பலத்தக் கரவொலி -- நர்ஸ் உள்ளே
சென்றதும்)

அமைச்சர் : இப்படி முன்னால் வாங்க ஆறுமுகம். (ஆறுமுகத்துக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கிறார்)... கடமை முக்கியம் தான்.. அதை விட மனிதாபிமானமும் துணிச்சல்லும் காவல் துறைக்கு மிகவும் அவசியம். அதற்கு எடுத்துக்காட்டு நம் ஆறுமுகம்..நான் காவல் துறை அமைச்சராக இருப்பதால் ஏட்டு ஆறுமுகத்துக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்கிறேன்..என்ன எஸ்பி ராதாகிருஷ்ணன் என்ன சொல்றீங்க?
உயர் அதிகாரி ராதாகிருஷ்ணன் : (சல்யூட் அடித்தபடி) நான் அதற்கான உத்தரவுக்கு பேப்பர்கள் அனுப்பறேன் சார்.
(அமைச்சர் செல்லுமுன் ஆறுமுகம் கையைக் குலுக்க, ஆறுமுகம் சல்யூட் அடிக்கிறார் --
கூட்டத்தினர் கரகோஷம்!-)


காட்சி 3
இடம் - நெடுஞ்சாலை
மாந்தர் - பஸ் டிரைவர், போலீஸ் ஜீப் ஓட்டுநர் மதியழகன், அதிகாரி நல்ல சிவம் மற்றும்
காவலர்கள்
(நள்ளிரவு நேரம் - காவல் துறை ரோந்து வாகனம் செல்கிறது)

நல்ல சிவம் : என்னய்யா இது... நடுரோட்டில் பஸ்ûஸ நிப்பாட்டிக்கிட்டு என்ன விளையாடறங்களா, ... நிப்பாட்டுங்க மதியழகன் என்னன்னு கேளுங்க...
(காவலர்கள் இறங்கி விசாரிக்க...)

பஸ் டிரைவர் : ஐயா முன் வீல் பங்க்சர் ஆயிட்டுங்க....இந்த நேரத்தில் இந்த வழியில் அருகில் பங்க்சர் கடை எதுவும் இல்லீங்க என்ன பண்றதுன்னு புரியலே.. உள்ளே என். சி. சி. குடியரசு தின அணி வகுப்புக்கு வந்த கல்லூரி மாணவிகள் இருக்காங்க.
நல்லசிவம் : ஏன் ஸ்டெப்னி இல்லியா?.... மாத்த வேண்டியது தானே...
பஸ் டிரைவர் : ஐயா என்னால் தனியா செய்ய முடியாதுங்க ரொம்பவும் கஷ்டமுங்க.
ஓட்டுனர் மதியழகன் : (வண்டியிலிருந்து இறங்கி) போய்யா,... போய் டூல்ஸ் எடுத்து வா.... ஜாக்கி இருக்கா?
பஸ் டிரைவர் : இருக்குங்க எடுத்து வர்றேன்
நல்லசிவம் : என்ன பண்ணப் போறீங்க மதி
மதியழகன் : சார் நான் சின்ன வயசில் பங்க்சர் கடையில் வேலை பார்த்தவன் தான்... வீல் கழட்டறது மாட்டறது பங்க்சர் ஒட்டறது எல்லாம் தண்ணீர் பட்ட பாடு....
(மதியழகன் பஸ் மேல் ஏறி அங்கிருக்கும் மாற்று சக்கரத்தை கயிறு கட்டி பஸ் பாடியில் சார்ந்திருக்கும் வண்ணம் மெல்ல வளைவு கம்பிகளில் இறக்க கீழே மற்ற காவலர்கள் தாங்கிப் பிடிக்கின்றனர். இறங்கி வந்து ஜாக்கி மூலம் சுற்றி முன்பக்கத்தை உயர்த்தி பங்சர் ஆன சக்கரத்தைக் கழற்றி ஸ்டெப்னியை மாட்டி நட்டுகளை முடுக்குகிறார். ரிங் ஸ்பேனரில் துளையில் கடப்பாரை செருகி லீவரை காலால் மிதித்து நட்டுகளை இறுகச் செய்கிறார் மதியழகன். வேலை முடிந்த தும் பழைய வீலையும் பஸ் மேல் ஏற்றி கட்டி வைக்கிறார்)

பஸ் டிரைவர் பணிவுடன் வணங்கி : ஐயா உங்களுக்கு கோடி புண்ணியம் விழா அணிவகுப்புக்குப் போகும் மாணவிகள் உள்ளே இருக்காங்க.... என்ன பண்றதுன்னு தவிச்சுக்கிட்டிருந்தேன்...
பேராசிரியை : (பஸ்ஸிலிருந்து இறங்கி வணக்கத்துடன்) சார் காவல் துறை எப்போதுமே எங்கள் நண்பன். மறக்க மாட்டோம்!
(மாணவிகள் கை அசைக்க பஸ் செல்கிறது)

நல்ல சிவம் : மதியழகன் நம்பவே முடியலே வீல் மாற்றும் லாவகமும்
உங்கள் திறமையும்!
(மறுநாள் செய்தித் தாளிலும் யூ ட்யூப், வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், இன்ஸ்டா கிராம் முதலிய எல்லா சோஷியல் மீடியாக்களிலும் மதியழகன் போலீஸ் யூனிஃபார்முடன் டயர் கழற்றி மாட்டும் காட்சி புகைப்படம் மற்றும் விடியோக்கள் ஓளிபரப்பாகிறது! - அதை எடுத்துப் போட்டது பஸ் உள்ளே இருந்த மாணவி ஒருவர் - மதியழகனையும் நல்லசிவத்தையும் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து கமிஷனர் பாராட்டு மழை பொழிய பத்திரிகையாளர்களின் காமிராக்கள் கிளிக் கிளிக் என ஃப்ளாஷ்
பளிச்சிடுகின்றன.)

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com