மரங்களின் வரங்கள்!: சர்வரோக நிவாரணி  -  துரியன்  மரம் 

நான்தான் துரியன் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் துரியோ ஜெபித்னஸ் என்பதாகும்.
மரங்களின் வரங்கள்!: சர்வரோக நிவாரணி  -  துரியன்  மரம் 


குழந்தைகளே நலமா?

நான்தான் துரியன் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் துரியோ ஜெபித்னஸ் என்பதாகும். நான் மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தாயகம் தென்கிழக்கு ஆசியா. நான் சுமத்ரா, போர்னியோ, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ்,  சிங்கப்பூர், சிவி ஆகிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறேன். என் தோற்றம் உங்களுக்குப் பிடித்தமான பலாப்பழத்தைப் போல மேல் பகுதி முள்ளாக இருக்கும். ஆனால், அளவில் சிறியவன். எனக்கு முள்நாரி மரம் என்ற வேறு பெயரும் உண்டு. 

என் பழங்களைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே அதிகபட்சமாக 7 சுளைகள் வரை காணப்படும். என்னை நீலகிரி மாவட்டம், பர்லியார், கல்லார் பழப் பண்ணைகளில் காணலாம்.  நான் மலைகளின் அரசியான நீலகிரியில் விளைவதால், என்னால் அந்த மாவட்டம் பெருமைப் பெற்றுள்ளது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கத்திய நாடுகளில் நான் அறிமுகமானதாக தாவரவியல் அறிஞர்கள் சொல்றாங்க.

குழந்தைகளே, என் பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃளோவின்), பி3 (நியாசின்), பி5 (பேண்டோதெனிக் அமிலம்), போலேட்டுகள் போன்றவையும்; தாது உப்புகளான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும்; ஆல்பா, பீட்டா கரோடீனாய்டுகளும்; கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள், கொழுப்புகளும், நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன.  

"பழத்தின் மணமோ நரகம், சுவையோ சொர்க்கம்' என்ற பழமொழி என்னைத்தான் குறிக்கிறது. குழந்தைகளே, என் பழம் பழுத்தப் பின்னர் அதிக நாள் வைத்து உண்ண முடியாது. துர்நாற்றம் வீசும், அதனால் என்னை வெறுக்காதீங்க. என் பழத்தின் அருமை, பெருமைகளை உணர்ந்தே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் என் பழம் "பழங்களின் அரசன்' என்று அழைக்கப்படுகிறது.  

பசியின்மை, உயர் ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல், மூலம், குடல்நோய், சருமப் பிரச்னை, முடிப் பிரச்னை ஆகியவற்றுக்கு என் பழம் அருமருந்து. என் பழம் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உங்கள் உடல் உட்கிரகித்து, வளர்ச்சிதை மாற்றம் நன்கு நடைபெறவும் உதவுகிறது. 

பலாப்பழம் போல் என் பழத்திலிருக்கும் "இண்டோல்' எனப்படும் ரசாயனப் பொருள் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுது. அதனால், உடல் பலவீனடைந்தவர்கள் என் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். அதோடு என்னிடம், அப்ரோடைசிக் எனும் தாதுப்பொருள் மிகுந்திருப்பதால் உங்கள் உடல் பலமும் கூடும்.

குழந்தைகளே, ஆண், பெண் பாலின ஹார்மோன் குறைப்பாட்டை சரி செய்து குழந்தைப் பேற்றினை என் பழம்  வழங்கும். பெண்களுக்கு "ஈஸ்ட்ரோஜென்' என்ற ஹார்மோன் சுரப்பியை என் பழங்கள் ஊக்குவிப்பதால் அவர்களுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. என் பழத்தில் அதிக சத்துகள் இருப்பதால் கிராக்கி அதிகம், அதனால் விலையும் அதிகம். 

என் பசுமையான இளந்தளிர்கள் மற்றும் தண்டுகள் சாலட் செய்வதற்கும், உணவாகவும் பயன்படுத்தலாம். என் இலைகளின் சாறு காய்ச்சலுக்கு அருமருந்தாகும். அதோடு, சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோயால் அவதிப்படுபவர்கள் என் இலைச் சாற்றைப் பயன்படுத்தினால், அவை இருந்த இடம் தெரியாது. என் இலைகளை வெந்நீரில் போட்டு குளித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் விட்டால் போதும் என்று ஓடிவிடும்.

என் பழத்திலுள்ள கொட்டைகளை, பலாப்பழக் கொட்டைகளைப் போன்று சமைத்தும், வறுத்தும்  உண்ணலாம். நான் 80 முதல் 150 வருடங்கள் வரை உயிர் வாழ்வேன். 

மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com