இறைவன் உள்ளத்தில் இடம்!

உத்தானபாதன் என்று ஓர் அரசன். அவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தியின் பெயர் சுநீதி. அமைதியும், சாந்த குணமும் கொண்டவள்.
இறைவன் உள்ளத்தில் இடம்!

உத்தானபாதன் என்று ஓர் அரசன். அவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தியின் பெயர் சுநீதி. அமைதியும், சாந்த குணமும் கொண்டவள். மற்றொரு மனைவியின் பெயர் சுருசி.  தன் அழகில் கர்வமுள்ளவள்.
அரசனுக்கு சுருசியிடம் மட்டுமே மிகுந்த பிரியம். சுருசியின் சூழ்ச்சியால் சுநீதியை அவன் விரும்புவதில்லை.
சுநீதிக்கு ஒரு புதல்வன் இருந்தான். அவனது பெயர் துருவன். 
சுருசிக்கும் ஒரு புதல்வன் இருந்தான். அவனது பெயர் உத்தமன். 
 ஒருநாள் சுருசியின் புதல்வன் உத்தமன் தன் தந்தையின் மடியில் ஆசையோடு உட்கார்ந்தான். இதனைப் பார்த்த சுநீதியின் புதல்வன் துருவனுக்கும் அப்பாவின் மடியில் அமர வேண்டும் என்ற ஆசை பிறந்தது. வேகமாக ஓடிச் சென்று தந்தையின் மடியில் அமர்ந்தான். 
சுருசிக்கு இது பிடிக்கவில்லை.  துருவனைப் பிடித்துக் கீழே தள்ளினாள்! மேலும் சிறு குழந்தை துருவனைப் பார்த்து, ""நீ உன் தந்தையின் மடியில் அமரத் தகுதியற்றவன். என் பிள்ளை மட்டுமே அரசனின் மடியில் அமரலாம்.... போ!'' என்று கடுமையான வார்த்தைகளைக் கூறினாள். 
அரசன் உத்தானயாதனும் சுருசியை தட்டிக் கேட்கவில்லை. பேசாமல் இருந்தான். துருவனுக்கு கோபமும், துக்கமும் பீறிட்டுக்கொண்டு வந்தது. தன் தாயிடம் ஓடோடிச் சென்று நடந்ததைக் கூறினான். சுநீதியோ, ""துருவா, என்ன செய்வது? எல்லாம் விதிப்படி நடக்கிறது. இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே நாம் எதையும் சாதிக்க இயலும். கடவுளை வேண்டிக்கொள்! அவரது  உள்ளத்தில் இடம் பிடிப்பாய்....எல்லாம் சரியாகும்.  கவலைப்படாதே!...'' என்று கூறினாள். 
துருவனும் இறைவனைப் பிரார்த்திக்க வனம் சென்றான். அங்கு நாரதர் அவனைச் சந்தித்தார்.  துருவனும்  அவரிடம் நடந்ததை விவரித்தான். அவர் துருவனிடம், ""ஓம் நமோ பகவதே வாசுதேவாய'' என்ற நாமத்தை உபதேசித்து அதை விடாமல் கூறி தவமியற்றச் சொன்னார். 
துருவனும் விடாமுயற்சியுடன் தவத்தை மேற்கொண்டான். உணவும் நீரும் இன்றி மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டான். ஆறுமாதங்கள் ஆயிற்று. தேவலோகங்கள் கூட நடுங்கின.  துருவன் இறைவன் நினைவில் மூழ்கியிருந்தான். மஹாவிஷ்ணுவும் அவன் முன்பு பிரசன்னமானார்.
கடவுளின் நினைப்பிலேயே மூழ்கியிருந்த துருவனுக்கு மஹாவிஷ்ணு தன் முன் வந்ததுகூடத் தெரியவில்லை. கண்களை மூடியபடியே இருந்தான். 
விஷ்ணு புன்னகையுடன் தன் கையில் இருந்த சங்கின் நுனியால் துருவனின் கன்னத்தைத் தொட்டார். துருவன் கண்களைத் திறந்தான்! எதிரில் கடவுள்! கண்களில் பக்திக் கண்ணீருடன் கடவுளின் மீது 12  துதிகளைக் கொண்ட 
பாடலைப் பாடினான்.  
குழந்தையின் பாடலில் மகிழ்ந்த மஹாவிஷ்ணு! ""குழந்தாய்!.... துருவனே!.... உனக்கு என்ன வரம் வேண்டும்?.....கேள்!'' என்றார்.
துருவனுக்கு நீண்ட கடுமையான தவத்தாலும், நாராயணின் சங்கு தன் கன்னத்தில் பட்ட ஸ்பரிசத்தாலும் மிகத் தூய்மையான ஞானம் ஏற்பட்டுவிட்டது! அவன் எதையும் கேட்கவே இல்லை. 
எனினும் கடவுள் அவனுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் அரசாளும் பாக்கியத்தையும் தந்தார்.  மனிதப் பிறவி முடிந்த பிறகு அவனுக்கு ஆகாயத்தில் என்றென்றும் பிரகாசிக்கும் துருவ நட்சத்திரப் பதவியைக் கொடுத்தார். சப்த ரிஷிகள் பூமாரி பொழிந்து துருவனுக்கு வாழ்த்தைக் கூறினர். சுநீதிக்கும் துருவனின் அருகின் ஒரு சிறு நட்சத்திரமாக ஜொலிக்கும் வரத்தைத் தந்தார் கடவுள்!     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com