மரங்களின் வரங்கள்!: வளைந்து கொடுப்பேன்- சடச்சி மரம்

நான்தான் சடச்சி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் கிரேவியா டெலிஃபோலியா என்பதாகும். நான் டிலியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: வளைந்து கொடுப்பேன்- சடச்சி மரம்

குழந்தைகளே நலமா?

நான்தான் சடச்சி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் கிரேவியா டெலிஃபோலியா என்பதாகும். நான் டிலியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை ஆங்கிலத்தில் ஷமாம் என்றும் அழைப்பாங்க. என் தாயகம் இந்தியா. எனக்கு தனுர் மரம் என்ற பெயருமுண்டு. நான் வறண்ட நிலத்திலும் வளருவேன். நான் சுற்றுச்சூழலின் நண்பன். வீசும் காற்றின் வேகத்தைத் தடுத்து, தூசு, மாசுகளை வடிகட்டி காற்றை சுத்தப்படுத்தி உங்களுக்கு சுத்தமான காற்றை தருவேன்.

என் இலைகள் உங்கள் இதய வடிவில் இருக்கும். ஒரு பாதி பெரியதாகவும், மறு பாதி சிறியதாகவும் காணப்படும். இதில் டானின் சத்து உள்ளது. என் இலைகளை பொடியாக்கி நீரில் கலக்கி தலையிலிட்டு குளித்தால் முடி பளிச்சென்று சுத்தமாக இருக்கும். என் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும். என் இலையை கஷாயம் செய்து குடித்தால் வயிற்றுப் போக்கு, சீதபேதி குணமாவதுடன், வயிறும் சுத்தமாகும்.

என் பூக்களை நாடி தேனீக்கள் சுற்றி சுற்றி வருவாங்க. என் பூக்கள் அவர்களுக்குத் தேவையான தேனைக் கொடுக்கும். என் கனிகளை உண்ணலாம், அதன் சுவை புளிப்பும், இனிப்பும் கலந்ததாக இருக்கும். என் பட்டையிலிருந்து நார் எடுத்து கயிறு திரிக்கலாம், நல்ல வலுவாக இருக்கும். காகிதக் கூழ் தயாரிக்கவும் என் பட்டைகள் பயன்படுது. என் பட்டையைப் பொடித்து, அதனை வாந்தியுண்டாக்கியாகவும் பயன்படுத்தலாம். ஓபியம் நஞ்சை இது முறிக்கும்.

நான் எவ்வளவு பளுவையும் தாங்கும் வலுவான மரமாவேன். அதோட வளைந்து கொடுக்கும் இயல்பும் எங்கிட்ட நிறையவே இருக்கு. அது முக்கியமில்லையா குழந்தைகளே, அப்போது தானே இந்த உலகில் வாழ முடியும். எங்கும், எப்போதும் பணிவு வேண்டும் குழந்தைகளே !

நான் மிகவும் பலம் வாய்ந்தவன் என்பதால் நான் உங்களுக்கு தூண்கள், மாட்டு வண்டிச் சக்கரங்கள், வளைவுகள், சட்டங்கள், குறுக்கு சட்டங்கள், கட்டட வேலைக்குத் தொடர்புக்குத் தேவைப்படும் சாரங்கள், மேசைகள், நாற்காலிகள் செய்யவும் நான் பெரிதும் பயன்படுகிறேன்.

அதுமட்டுமில்லை குழந்தைகளே, பில்லியர்ட்ஸ் விளையாட்டிற்கான கோல் செய்யவும், கோல்ப்ஃ விளையாட்டுக்கு கழி, கிரிக்கெட் ஸ்டெம்புகள் செய்யவும் நான் பெரிதும் பயன்படறேன். ஏழை, எளிய மக்கள் அடுப்பெரிக்கவும் நான் நல்ல விறகாவேன்.

மழை பொழிவுக்கும் மரங்களே காரணமாக விளங்குகின்றன. மரங்கள் வளராத அல்லது மரங்கள் இல்லாத இடங்களில் நிலத்தடி நீர் ஊற்று இருக்காது என்பதை நீங்கள் உணர வேண்டும் குழந்தைகளே. ஸ்ரீராமர் கையில் வைத்திருந்த வில் என் மரத்தினால் செய்யப்பட்டது என்பதை அறியும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு குழந்தைகளே. நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com