அரங்கம்: மாற்றம்!

சத்தியவாணி சாலை ஓரமாக நடந்து வருகிறாள். அவளது முகம் வாடியிருக்கிறது. --நிவேதா முதுகுப்பையுடன் எதிரில் வருகிறாள்.
அரங்கம்: மாற்றம்!

காட்சி : 1
இடம் : முதன்மைச் சாலை
நேரம் : காலை 9.15
மாந்தர் : சத்தியவாணி, நிவேதா

(சத்தியவாணி சாலை ஓரமாக நடந்து வருகிறாள். அவளது முகம் வாடியிருக்கிறது. --நிவேதா முதுகுப்பையுடன் எதிரில் வருகிறாள்.)

நிவேதா : (வழிமறித்து) அக்கா.. இங்க ஆஞ்சநேயர் கோயில் எங்க இருக்கு ?
சத்தியவாணி : (திரும்பி) நேரா போனா ரெண்டாவது லெஃப்ட் முதல் ரைட்..
(நிவேதா கண்களை உருட்டிக்கொண்டு அப்படியே நிற்கிறாள்.)
சத்தியவாணி : ( வெறுப்பாக) ம்ஸ்ஸ்ஸ்.. கூட யாரும் வரலையா ?
(நிவேதா இடவலமாகத் தலையசைக்கிறாள். --
சத்தியவாணி பெருமூச்சு விடுகிறாள்.)

சத்தியவாணி : வீடு எங்க?
நிவேதா : வீடு எக்ஸ்டென்ஷன்ல.. இங்க லைப்ரரி இருக்குனு கேள்விப்பட்டேன்.. அதான் மெம்பர் ஆகலாம்னு...
சத்தியவாணி : ( இடைமறித்து) இனிமே இப்டி தனியா எல்லாம் வரக்கூடாது.. வா, நானும் கூட வர்றேன்..
(நிவேதா புன்னகை செய்கிறாள்.)

காட்சி : 2
இடம் : கிளை நூலகம்
நேரம் : காலை 9.35
மாந்தர் : சத்தியவாணி, நிவேதா , நிறைமொழி.
(நிறைமொழி, இருவரது வெப்பநிலையையும் சோதிக்கிறார்.)

நிறைமொழி : ஓ.கே ! ஒரிஜினல் ஆதார் கார்ட், ரேஷன் கார்ட், ஃபோட்டோ எல்லாம் கொண்டுவந்தியா ?
நிவேதா : இருக்கு, மேடம். நீங்க நேத்து சொன்ன எல்லாமே கொண்டுவந்துட்டேன்..
நிறைமொழி : இந்தா.. இந்த உறுப்பினர் அட்டையை நிரப்பிட்டு வா..
சத்தியவாணி : மேடம், பத்திரிகைகள் படிக்கும் டேபிள் இல்லியா ?
நிறைமொழி : இல்லம்மா.. இன்னும் எங்களுக்கு ஆர்டர் வரல..
(நிவேதா நிறைமொழியிடம் ஃபாரத்தைக்
கொடுக்கிறாள்.)

நிறைமொழி : ம்ம்ம்.. அறுபத்தி ஒரு ரூபா கொடு..
(நிவேதா கொடுக்கிறாள்.)

நிறைமொழி : புக் எடுக்கணும்னா இந்த கார்ட் வேணும்.. மூனு புக்ஸ் எடுத்துக்கலாம்.. பதினஞ்சுநாள் கழிச்சு ரெனியூவல் பண்ணணும். இல்லேன்னா ரிட்டன் பண்ணிடலாம்..
நிவேதா : ஓ.கே. மேடம்.

காட்சி : 3
இடம் : முதன்மைச் சாலை
நேரம் : மாலை 6.15
மாந்தர் : சத்தியவாணி, நிவேதா
(சத்தியவாணி மிதிவண்டியை அழுத்துகிறாள். --நிவேதா பின்னிருக்கையில் அமர்ந்திருக்கிறாள்.)

நிவேதா : அக்கா.. இந்த லைப்ரரில நிறைய புக்ஸ் இருக்கு.. இதுகூட கம்பேர் பண்ணா எங்க பழைய லைப்ரரி கொஞ்சம் சிறிசுதான்..
(சத்தியவாணி அமைதியாக இருக்கிறாள்.)

நிவேதா : நீங்க எந்த மாதிரி புக்ஸ் படிப்பீங்க?
சத்தியவாணி : இங்க பார்.. நான் டெக்ஸ்ட் புக்ஸ் தவிர வேற எதுவும் படிக்கிறதில்ல.. லைப்ரரிக்குள்ள. போனதே இதான் ஃபர்ஸ்ட் டைம்..
நிவேதா : அப்படியா? உங்களுக்கு மேத்ஸ் நல்லா வருமா ?
சத்தியவாணி : மேத்ஸ் எல்லாம் நல்லாத்தான் வருது.. மார்க்ஸ்தான் அவ்ளவா வரமாட்டேங்குது..
(நிவேதா சிரிக்கிறாள். சத்தியவாணியும் சிரிக்கிறாள்.)

நிவேதா : அக்கா.. உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. டைம் இருந்தா எனக்கு மேக்ஸ் சொல்லித்தர்றீங்களா ?
(சத்தியவாணி அமைதியாக இருக்கிறாள்.)
நிவேதா : அக்கா.. அக்கா.. நிறுத்துங்க.. இதான் எங்க வீடு..
(மிதிவண்டி நிறுத்தப்படுகிறது.)

காட்சி : 4
இடம் : நிவேதாவின் வீடு
நேரம் : மாலை 5. 30
மாந்தர் : நிவேதா, பாட்டி, சத்தியவாணி.
(பாட்டி துணிகளை மடித்துக்கொண்டிருக்கிறார். செல்லிடப்பேசி ஒலிக்கிறது. அவர் அதை எடுக்கிறார்.)

பாட்டி : என்னடி?
நிவேதா : ( குரல்) பாட்டி.. வாணி அக்கா கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க.. காஃபி மாதிரி எதாவது குடிக்கக்கொடுங்க.. நான் ஃபிஃப்டீன் மினிட்ஸ்ல வீட்ல இருப்பேன் ..
பாட்டி : வாணி அக்கா.. வாணி அக்கா.. வாணி அக்கா.. என்னை ரொம்ப படுத்துற.. நான் பார்த்துக்கிறேன்.. நீ
கவனமா வந்துசேரு..
(அழைப்பைத் துண்டிக்கிறார்.)
(வாசலில் " நிவி..' என்று அழைக்கும் குரல்
கேட்கிறது.)

பாட்டி : (கதவைத் திறந்து) வாங்க வாணி அக்கா.. உங்களத்தான் எதிர்பார்த்திட்டிருந்தேன்..
(சத்தியவாணி திகைத்து நிற்கிறாள்.)

பாட்டி : காலையிலிருந்து எங்க பொண்ணு வாணி அக்கா வர்றாங்க வர்றாங்கனு ஒரே கூத்து.. அதான் அப்படி சொன்னேன்.. உள்ள வா..
சத்தியவாணி : நல்லாருக்கீங்களா, பாட்டி?
(பாட்டி சத்தியவாணியுடன் பேசிக்கொண்டே வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார்.)


காட்சி : 5
இடம் : நிவேதாவின் வீடு
நேரம் : மாலை 6. 10
மாந்தர் : நிவேதா, பாட்டி, சத்தியவாணி.
(பாட்டி தொடர்ந்து பேசுகிறார். சத்தியவாணி அவரை ஆர்வத்துடன் கவனிக்கிறாள்.)

சத்தியவாணி : பாட்டி.. உங்ககிட்ட பேசிட்டிருந்தா நேரம் போறதே தெரியல.. எப்படி இத்தனை கதைகள் உங்களுக்கு தெரியுது.. நீங்களும் நிவி மாதிரி லைப்ரரில மெம்பரா?
பாட்டி : இல்லம்மா.. எனக்கு அவ்வளவா படிக்க வராது.. எல்லாம் எங்க அம்மாச்சி சொன்ன கதைங்க.. இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கு..
சத்தியவாணி : (ஆச்சரியமாக) வாவ்.. ஷி இஸ் கிரேட்.. எவ்ளோ சொல்லிருக்காங்க ! இதையெல்லாம் நீங்க நிவிகிட்ட சொல்லி, அவ அவங்க பேரம் பேத்திகளுக்கு சொல்லி ... எல்லாம் உங்க தலைமுறைகளுக்குள்ளேயே போய்ட்டிருக்கும்.. நல்ல வேள.. எனக்கு அதுல ஒன்னு தெரிஞ்சுது ..
(பாட்டி அமைதியாக இருக்கிறார்.)

சத்தியவாணி : என்னாச்சு, பாட்டி ?
பாட்டி : ( வருத்தமாக) இதெல்லாம் அவளுக்குத் தெரியாது..
சத்தியவாணி : என்ன சொல்றீங்க.?
பாட்டி : ( வருத்தமாக) இந்த வீட்ல யாருக்கும் இதையெல்லாம் கேட்க நேரமே இருக்கிறதில்ல.. படிப்பு, வேல, ஃபோன், டி.வி.னு அதுக்குள்ளயே இருக்காங்க.. கதை கேட்கறதுல ஆர்வமில்ல..
(சத்தியவாணி அமைதியாக இருக்கிறாள்.
நிவேதா வருகிறாள்.)
நிவேதா : ஹாய் வாணி அக்கா.. !
(சத்தியவாணி அவளைப் பார்க்கிறாள்.)

காட்சி : 6
இடம் : நிவேதாவின் வீடு, மாடி
நேரம் : இரவு 7. 55
மாந்தர் : நிவேதா, சத்தியவாணி.

(நிவேதா எழுதி முடிக்கிறாள்.)

நிவேதா: சூப்பர்-க்கா.. புரிஞ்சிருச்சுனு நினைக்கிறேன்..
சத்தியவாணி: புரிஞ்சிருச்சுதான், ஆனா நீ நிறையா கேர்லஸ் மிஸ்டேக்ஸ் பண்ற..
நிவேதா: போகப் போக பிக்கப் பண்ணிக்கிறேன்-க்கா..
சத்தியவாணி : ம்ம்ம்.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா.. ?
நிவேதா : சொல்லுங்கக்கா..
சத்தியவாணி: எனக்கு கதை படிக்கணும்னு ஆசை.. பட், படிக்க முடியல.. உங்க பாட்டிக்கு நிறைய கதை தெரியும்னு நினைக்கிறேன்.. டெய்லி எட்டு டூ எட்டரை ஒரு கதை சொல்லச் சொல்றியா ?
(நிவேதா அமைதியாக இருக்கிறாள்.)

சத்தியவாணி : என்னாச்சு?
நிவேதா : பாட்டி கொஞ்சம் போர் டைப்-க்கா.. பழைய கதைதான் சொல்லுவாங்க.. அவங்க கதையில ஸ்மார்ட்ஃபோன் கூட வராது..
சத்தியவாணி : வெரிகுட்.. எனக்கு அப்படிப்பட்ட கதைகள்தான் பிடிக்கும்..
(நிவேதாவின் முகத்தில் வியப்பு தெரிகிறது.)

காட்சி : 7
இடம் : நிவேதாவின் வீடு, மாடி
நேரம் : இரவு 8
மாந்தர் : பாட்டி , நிவேதா, சத்தியவாணி மற்றும் சிறுவர்கள்.

முதல் வாரம் :
மொட்டை மாடியில் நிவேதாவும் சத்தியவாணியும் அமர்ந்திருக்கிறார்கள்.
பாட்டி கதை சொல்கிறார்.
இரண்டாவது வாரம் :
பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலிருந்து சில சிறுவர்கள் பாட்டியைப் பார்க்கிறார்கள்.
மூன்றாவது வாரம் :
பாட்டி கதை சொல்கிறார்.
நிவேதாவும் சத்தியவாணிக்குப் பின்னால் நிறைய சிறுவர்கள் உடன் அம்ர்ந்திருக்கிறார்கள்.

காட்சி : 8
இடம் : நிவேதாவின் வீடு,
நேரம் : இரவு 8. 40
மாந்தர் : பாட்டி , நிவேதா, சத்தியவாணி .
(பாட்டியும் நிவேதாவும் வாசலில் நிற்கிறார்கள்.

சத்தியவாணி மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகிறாள்.)

சத்தியவாணி : சரி , நிவி.. நான் போய்ட்டு வர்றேன்.. நீ ட்ரிக்னாமெட்ரில வர ஃபார்முலாஸ நல்லா பார்த்துக்கோ.. பாட்டி.. இன்னிக்கும் கதை சூப்பர்..
பாட்டி : சந்தோஷமா இருக்கு, வாணி.. இந்த ஒரு மாசமா எனக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு..
(சத்தியவாணி சிரிக்கிறாள்.)

நிவேதா : தேங்க்ஸ்க்கா.. உங்களாலதான் எங்க பாட்டியைப் பத்தி முழுசா தெரிஞ்சது..
சத்தியவாணி : நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும், நிவி. எல்லாத்துக்கும் நீதான் காரணம்..
நிவேதா : (புரியாமல்) நானா? நான் என்ன பண்ணேன் ?
சத்தியவாணி : அன்னிக்கு நீ எங்கிட்ட லைபிரரிக்கு வழி கேட்டேயில்ல.. அன்னிக்கு நான் வீட்டுல சண்டைபோட்டுட்டு வந்திட்டிருந்தேன்..
(இருவரும் அமைதியாகப் பார்க்கிறார்கள்.)

சத்தியவாணி: லேப்டாப்ல எப்பப் பாரு விளையாடிட்டே இருக்காதேனு எங்கம்மா சொல்ல.. பெரிய சண்டை.. நானும் கேம்ஸ்க்கு அடிக்டா இருந்தேன்.. உங்களாலதான் அதிலிருந்து மாறி இப்ப ஒழுங்கா இருக்கேன்..
(இருவரின் முகத்திலும் வியப்பு தெரிகிறது.)

சத்தியவாணி: நேரத்தை வீணடிக்காம பெரியவங்ககிட்ட பேசி அவங்க அனுபவங்கள தெரிஞ்சுக்கிறது எவ்ளோ நல்ல விஷயம்னும் தெரிஞ்சுது..
தேங்க்ஸ்டி.. தேங்க்ஸ் பாட்டி.. பாய்..
(பாட்டியும் நிவேதாவும் மிதிவண்டியில் செல்லும் சத்தியவாணியை அமைதியாகப் பார்க்கிறார்கள்.)

( திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com