உதவி!

ரகு ஒரு காய்கறிக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தான். காலை நான்கு மணிக்கே எழுந்து சைக்கிளோடு மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சந்தைக்குப் போய் காய்கறி வாங்குவது அவனது முதல் வேலை.
உதவி!

ரகு ஒரு காய்கறிக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தான். காலை நான்கு மணிக்கே எழுந்து சைக்கிளோடு மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சந்தைக்குப் போய் காய்கறி வாங்குவது அவனது முதல் வேலை. இதில் கொஞ்சம் தாமதமாகிவிட்டால் முதலாளி கண்டபடி ஏசுவார்! சில சமயம் அடித்துவிடுவார்!

வழக்கம்போல் அதிகாலை சந்தைக்குச் சென்று காய்கறிகளை வாங்கி மூட்டைகளாகக் கட்டி சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கடைக்கு வேகமாக வந்துகொண்டிருந்தான் ரகு.

முன் சக்கரத்தில் காற்று குறைவாக இருந்ததால் வண்டியை வேகமாக ஓட்ட முடியவில்லை. கடை இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருந்தது. எப்படி மூட்டைகளோடு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போவது? நேரமாகிவிடும்! முதலாளி திட்டுவார்!.... ரகுவுக்கு பயமாகிவிட்டது!

தெருவோரம் இருந்த டீக்கடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு, ""ஐயா, எதிரே உள்ள சைக்கிள் கடை எப்போ திறப்பாங்க?...

காய்கறி வாங்கிட்டுப் போறேன்.... முன் டயரில் காற்று குறைச்சலா இருக்கு....கடை இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கு.... தள்ளிக்கிட்டு போறதுக்குள்ள நேரமாயிடும். முதலாளி ரொம்பக் கோபக்காரர்!.... அடிச்சுப்புடுவார்! ...'' என்றான்.

போட்டுக்கொண்டிருந்த டீயை வந்தவருக்குக் கொடுத்துவிட்டு, கடைக்குள் இருந்த காற்றடிக்கும் பைப்பை எடுத்துவந்து ""இந்தாப்பா, வேணும் மட்டும் அடிச்சிக்க...'' என்றார்.

மகிழ்ச்சியோடு பைப்பை வாங்கி வண்டிக்கு வேண்டிய காற்றை அடித்துக்கொண்டு டயரை அழுத்திப்பார்த்தான்.

""ஐயா, ரொம்ப நன்றிங்க,... எவ்வளவு காசு?'' என்று கேட்டான்.

""உதவிக்கெல்லாம் எதுக்குக் காசு?.... இது என் சொந்த உபயோகத்துக்கு உள்ளதுதான்.... நீ போ. எதுவும் வேணாம் என்றார்.
""ரொம்ப நன்றிங்க ஐயா'' என்று சைக்கிளில் ஏறிச் சென்றான்.
மற்றொரு நாள்.....
பகல் முழுக்க கால்வலியால் அவதிப்பட்ட பெரியவர், மாலை கிளினிக்குச் சென்று டாக்டரைப் பார்த்தார். டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். பிறகு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக கால்வலியுடன் காத்துக் கொண்டிருந்தார்.
சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்த ரகு அவரைப் பார்த்தான்.
""ஐயா வீட்டுக்கா?''
""ஆமாம்பா''
பஸ் வர நேரமாகும். வாங்க வண்டியிலே ஏறுங்க...''
""இல்ல தம்பி நீங்க போங்க...''
""ஐயா ஏறுங்க....''
""எங்க தம்பி இந்தப் பக்கம்?''
""சொந்தக்காரங்க வந்திருந்தாங்க..... அவங்களை பஸ் ஏத்திட்டு வர்றேன்...''
டீக்கடை வந்ததும் சைக்கிளை நிறுத்தினான். பெரியவர் இறங்கிக்கொண்டு ""ரொம்ப நன்றி தம்பி,.... வாங்க டீ குடிச்சிட்டுப் போகலாம்...''
""உதவிக்கெல்லாம் நன்றி எதுக்குங்க...'' என்று கூறிவிட்டு சைக்கிளில் ஏறி அமர்ந்தான் ரகு.நன்றி மறவேல்

(மலரடியான் எழுதிய ஆத்திச்சூடி சிறுவர் கதைகள் புத்தகத்திலிருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com