மரங்களின் வரங்கள்!: வாசனை தரும் மரம் - வாடை வள்ளி  மரம்

மரங்களின் வரங்கள்!: வாசனை தரும் மரம் - வாடை வள்ளி  மரம்

நான்தான் வாடை வள்ளி   மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் அகேசியா ஃபெர்னீசியானா என்பதாகும். நான் மைமோசியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.


குழந்தைகளே நலமா? 

நான்தான் வாடை வள்ளி   மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் அகேசியா ஃபெர்னீசியானா என்பதாகும். நான் மைமோசியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு கஸ்தூரி வேலம், பெர்ஃபியூம்டு வாட்டில், ஸ்வீட் அகாசியா, அயன் வுட், ஹனிபால், நீடில்புஷ், ஃபிராகரண்ட் அகாசியா ஆகிய பெயர்களும் உண்டு.  என் தாயகம் மத்திய மற்றும் தென் அமெரிக்காவாகும். நான் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அழகிய பசுமை மாறா குறு மரமாவேன்.  எனது ஒவ்வொரு கணுவிலும் ஒரு ஜோடி கூர்மையான முட்கள் இருக்கும். 

பொதுவாக, எகிப்து, இஸ்ரேல், இந்தோனேஷியா, மத்திய தரைக்கடல் ஆகிய நாடுகளில் என்னை அழகு மரமாக நட்டு வளர்க்கிறார்கள்.  நான் ஒரு சிறந்த காற்றுத் தடுப்பான் மரமாவேன்.  அது மட்டுமா, என் இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள், பட்டைகள், வேர்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டவை. 

என் பூக்கள் இளமஞ்சள் நிறத்துடன் மிகுந்த வாசனையுடன் இருக்கும். ஆகவே, என் பூக்களிலிருந்து வாசனை திரவியங்களும், வாசனைப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. என் பூக்களிலிருந்து தயாரிக்கும் வாசனை பொருள்களை கேசி என்று அழைப்பாங்க. கேசி கட் பிளவர்ஸ் என்பது  உலகம் முழுவதும் பிரபலமானது.   அதாவது, ரோஜாப்பூ போல கட் பிளவர்ஸ் தருவேன்.  குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமா, கட்பிளவர்ஸ் என்றால் என்னவென்று, பூவுடன் கூடிய ஒரு நீளமான கிளையுடன் வெட்டி விற்பது தான் கட்பிளவர்ஸ் என்பது.  ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்கள் என் விதைகளையும், முளையிட்ட விதைகளையும் காய்கறிகளைப் போல உணவாக சமைத்து சாப்பிடுகிறார்கள்.  இதனால், அவர்களை எந்த நோய்களும் தாக்குவதில்லை என்று சொல்கிறார்கள். 
என் இலைகளை மசிய அரைத்து, புண், படை, சொரி, சிரங்கு, காயம், மேகவெட்டை ஏற்பட்ட பகுதிகளில் தேய்த்தால் அவை இருந்த இடம் தெரியாது. என் இலைகளையும், வேர்களையும் வெந்நீரிலிட்டு காய்ச்சி கஷாயமாக்கி அருந்தினால் மலேரியா, தோல் நோய்கள், இருமல், குமட்டல், குடலிறக்கம், சிறுநீர்ப்பை நோய்கள், வயிற்று உபாதைகள், தலைவலி குணமாகும். 
நம் நாட்டில், என் வேர் மற்றும் நெற்றுகளிலிருந்து ஒரு வகை பிசினை தயாரிக்கிறார்கள். இது "அரபிக்கம்' எனும் சர்வதேச பிசினுக்கு இணையானது. நான் கப்பல் கட்ட, விவசாயக் கருவிகள், இரும்புக் கருவிகளுக்குத் தேவையான கைப்பிடிகள், மேசைகள், நாற்காலிகள் செய்ய பெரிதும் பயன்படுவேன். என் மரத்தின் குச்சிகளை பல் துலக்கவும் பயன்படுத்தலாம், இதனால் பற்கள் வலுப்படுவதுடன், ஈறுகளும் கெடாது, ரத்தக் கசிவும் கட்டுப்படும்.  என் பிசின் மற்றும் பட்டைகளில் டேனின் அதிகமாகயிருப்பதால், தோல் பதனிடவும் உதவுவேன்.  
என்னை நாடி தேனீக்கள் ரீங்காரமிட்டுக் கொண்டே அதிகமாக வருவார்கள். அப்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என் விதைகள் பறவைகள் மற்றும் சிறு பிராணிகளுக்கு நல்ல உணவாகிறது. 

குழந்தைகளே, மரங்கள் காலத்தில் மழைப் பொழிவுக்கு உதவுகிறது. மரங்களை அழிப்பதால் தான் சில பகுதிகளில் பருவம் தவறி மழை பெய்கிறது.  பெய்தாலும் யாருக்கும் எந்தப் பயனையும் கொடுக்காமல் வீணே கடலில் சென்று கலந்து, மீண்டும் வறட்சியை உண்டாக்குகிறது.  மரங்களைக் காத்தால்தான், புவியைக் காக்க முடியும், புவியையைக் காத்தால்தான் உயிரினங்களைக் காக்க முடியும். மரங்களே மழைக்கு ஆதாரம்.  மரங்களை வளர்ப்போம், மழை பெறுவோம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com