மரங்களின் வரங்கள்!: சாதிக்கப் பிறந்தவன் சாத்துக்குடி மரம்

நான்தான் சாத்துக்குடி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் "சிட்ரஸ் லிமாட்டா' என்பதாகும்.
மரங்களின் வரங்கள்!: சாதிக்கப் பிறந்தவன் சாத்துக்குடி மரம்

குழந்தைகளே நலமா?

நான்தான் சாத்துக்குடி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் "சிட்ரஸ் லிமாட்டா' என்பதாகும். நான் ரட்டாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் வெப்ப, மித வெப்ப மண்டலங்களில் அதிக அளவில் வளருவேன். என் தாயகம் தென்கிழக்கு ஆசியா. என் பழத்தில் வைட்டமின் சி, ஊட்டச்சத்துகள், குளோரஃபில்கள், ஃபிளவனாய்டுகள், கரோடினாய்டுகள் அதிகமுள்ளன.

அதோடு கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் முதலிய தாது உப்புக்களும் எங்கிட்ட நிறையவே இருக்கு. என் மரத்தின் அனைத்து சத்துகளையும் ஒருங்கிணைத்து என் பழம் உங்களுக்குக் கொடுக்கிறது.

குழந்தைகளே! பழச்சாறுகளிலேயே மிகவும் ஆரோக்கியமான சாறு எதுவென்று கேட்டால்,எல்லோரும் ஒருமித்த குரலில் "சாத்துக்குடி' சாறுன்னு'தானே சொல்வீங்க. அதுதான் உண்மை. ஏன்னா,என் பழத்தில் கலோரிகள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் குறைந்த அளவே உள்ளன. அதோடு அமிலத் தன்மை அறவே இல்லை. அதனால், என் பழச்சாறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் குடிக்கலாம். என்பழத்தில் உள்ள அதிக அளவு பொட்டாஷியம் உங்களின் சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பையில் உள்ளநச்சுப் பொருள்கள் உருவாகாமல் தடுக்கின்றது. மேலும், சிறுநீர்ப் பையில் ஏற்படும் தொற்று நோயையும் சரி செய்யும் ஆற்றல் என் பழத்திடம் இருக்கு.

உங்கள் கல்லீரலைப் பாதிக்கும் நோயான மஞ்சள் காமாலைக்கு அருமருந்து என் பழம்தான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

சளி பிடித்திருப்பவர்கள் பழச்சாறு அருந்தக் கூடாதுன்னு சொல்வாங்க. ஆனால், என் பழச்சாறுஅப்படியில்லை. சளி பிடித்திருந்தால் மட்டுமல்ல,ஆஸ்துமா நோயால் பாதிப்படைந்தவர்கள்கூடசாத்துக்குடி சாறைக் குடிக்கலாம். ஏன்னா, என்பழத்திலுள்ள வைட்டமின் சி, உங்கள் உடலிலுள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை ஓடஓடவிரட்டி அழித்துவிடும்.

குழந்தைகளே! என் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாகவுள்ளது. உங்களில் யாருக்காவது பல் ஈறுகளில் வீக்கம், வாய்ப்புண், உதடு வெடிப்பு இருக்கா? அப்படி இருந்தால் கவலைப்படாதீங்க. என் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவை உடனே மறைந்துவிடும்.

நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றியவர்கள் என் பழச்சாற்றை அருந்தினால், அவர்களுக்கு நோய் குணமாகி, உடலுக்கு வலு கொடுப்பதுடன், புத்துணர்ச்சியுடன் மீண்டும் அதிக ஆற்றலுடன் செயல்படுவார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். சத்தான ஆகாரமின்றி ரத்த சோகையால் வாடுபவர்களுக்கு செலவின்றி மருத்துவம் எங்கிட்ட இருக்கு.

அதாவது குழந்தைகளே... சாத்துக்குடி பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் ரத்தம் விருத்தியாகும். அதோடு உங்க உடம்பும் புதுப்பொலிவு பெறும். உங்களில் சிலருக்கு எலும்பு வலு இல்லாமல், மெல்லியதாக சத்தின்றி இருக்கும். அவங்க என் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலுப்பெறும். ஏன்னா, சாத்துக்குடி பழத்தில் அதிகளவு கால்சியம் இருக்கு.

சாத்துக்குடி பழத்தைச் சாப்பிட்டால் வயிற்றில் செரிமானப் பிரச்னையே ஏற்படாது. என் பழத் தோலைக் காய வைத்துப் பொடி செய்து நீங்கள் தினசரி தண்ணீரிலோ, சத்தான பானங்களிலோ கலந்து குடித்து வந்தால் உங்கள் உடலிலுள்ள கழிவுகள் உடினடியாக வெளியேறுவதுடன், உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுவடையும்.

சாத்துக்குடி பழச்சாற்றை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நீங்கள் மிகவும் மென்மையான முடியைப் பெறலாம். அக்கால மக்கள் சீயக்காயுடன் காய்ந்த என் பழத் தோலையும் சேர்த்து அரைப்பார்களாம். அதனால், அவர்கள் நரை முடிகளின்றி கருகருவென்று கருமையான தலைமுடியைப் பெற்றதோடு, தலைமுடியின் வலிமையை அதிகரித்து, நல்ல அடர்த்தியான முடி வளர்ச்சியையும் பெற்றிருந்தார்கள்.

நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com