கருவூலம்: மேகாலயா

துராவிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது.
கருவூலம்: மேகாலயா

சென்ற இதழ் தொடர்ச்சி....

சுற்றுலாத் தலங்கள்

நோக்ரெக் தேசியப் பூங்கா

துராவிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. சிறுத்தை, தங்கப்பூனை, காட்டெருமை, சிவப்பு பாண்டா, ஆசிய யானை, புலி, பளிங்குப் பூனை, மகாக் வகைக் குரங்குகள், முதலான ஏராளமான விலங்குகளும், பீஸன்ட் உள்ளிட்ட அரிய பறவை இனங்களும், தாவர வகைகளும் இங்கு காணப்படுகின்றன. இப்பகுதி 2009 - ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உயிர்கோள இருப்புப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

துரா சிகரம்!

இச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ளது. இங்கிருந்து பங்களாதேஷின் பிரம்மாண்டமான சமவெளிப் பகுதிகளைப் பார்வையிடலாம்.

உமியம் ஏரி!

மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகிய உமியம் ஏரி, பசுமையான கிழக்கு காசி மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஏரியில் சூரிய உதயம் அற்புதமாக இருக்கும். இந்த ஏரி சுமார் 222 ச.கி.மீ. பரப்பளவில் பரந்து உள்ளது. படகு சவாரியும் இங்குண்டு.

யானை அருவி!

வடகிழக்கு இந்தியாவின் மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று இது. மூன்று அடுக்குகளுடன் காணப்படுகிறது. அருகில் யானை வடிவப் பாறை இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது.

லைட்லம் கானியன்!

அழகிய மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் அமைந்துள்ள சுற்றுலாத் தலம்.

ஷில்லாங் சிகரம்!

இச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6500 அடி உயரம் கொண்டது. இங்கிருந்து ஷில்லாங் நகரை முழுமையாகப் பார்க்கலாம்.

போலீஸ் பஜார்!

ஷில்லாங்கின் முக்கிய சந்தை இது. உள்ளூர்வாசிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இங்கு ஏராளமான கடைகள் உள்ளன.

மெüஃப்லாங் கிராமம்!

பழங்குடி மக்களின் பாரம்பரியம், கலாசாரம், மற்றும் வாழ்க்கை முறை பற்றி இங்கு அறிந்துகொள்ளலாம். காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அழகிய கிராமம்.

மவ்லிங் நொங் கிராமம்! - ஷில்லாங்

கிழக்குக் காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் 2003 - ஆம் ஆண்டில் ஆசியாவின் மிகத் தூய்மையான கிராமம் என அறியப்பட்டது. மற்றும் 2005 - இல் இந்தியாவின் தூய்மையான கிரமாம் என்ற பட்டத்தை வென்றுள்ளது. ஏராளமான நீர்வீழ்ச்சிகளும், பூச்செடிகளும் நிறைந்த அழகிய கிராமம். சாலையில் கூட தூசியைப் பார்க்க இயலாது.

மதினா பள்ளி வாசல்!

ஷில்லாங் நகரில் உள்ளது. இந்தியாவில் கண்ணாடியால் கட்டப்பட்ட மிகப்பெரிய பள்ளிவாசல் இது. 121 அடி உயரமும், 61 அடி அகலமும் கொண்டது. இங்கு 8000 பேர் பிரார்த்தனை செய்யலாம். மற்றும் 2000 பெண்கள் தொழுகை நடத்த தனி இடம் இங்குள்ளது. அழகிய தோட்டமும் உண்டு.

நோகலிகாய் அருவி!

உலகின் நான்காவது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி இது. சுமார் 1100 அடி உயரத்திலிருந்து நீர் கீழிறங்குகிறது! இந்தியாவின் மிக பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.

மவ்ஸ்மாய் குகை!

மேகாலயாலின் சில அற்புதமான மற்றும் மர்மமான குகைகள் உள்ளன. அவற்றுள் 150 மீ. நீளம் கொண்ட மவ்ஸ்மாய் குகை மிகப் பிரபலமானது. பல குறுகிய பாதைகளை உள்ளடக்கியது.

கிரெம் ஃபில்லெட் குகை!

சோராவிற்குத் (சிரபுஞ்சி) தெற்கே இந்தக் குகை உள்ளது. இந்தக் குகையை அடைய மூன்று வெவ்வேறு நுழைவாயில்கள் மற்றும் இரண்டு தனித்தனி நதிப்பாதைகள் உள்ளன. இந்த இடம் எப்பொழுதும் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளால் நிறைந்திருக்கும்.

மவ்ஸ்மாய் அருவி!

கிழக்குக் காசி மலை மாவட்டத்தில் மவ்ளிராம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி இது.

1035 அடி உயரம் கொண்டது. ஏழு பிரிவுகளைக் கொண்டது! காசிமலையின் சுண்ணாப்புக் குன்றின் உச்சியில் தோன்றுகிறது. நோஹ்சிங்கியாங் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது.

சிஜீ குகைகள்!

இந்தியாவின் மூன்றாவது பெரிய குகை இது. வெüவால்களின் குகைகள் என்றும் அழைக்கப்படுகிறது. குகையில் பல அறைகள் உள்ளன.

பால்பக்ரம் தேசியப் பூங்கா!

தெற்கு கரோ மலையில் 3000ல அடி உயரத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது. இவ்வனப்பகுதியில் எண்ணற்ற உயிரினங்களும் பறவையினங்களும், அடர்த்தியான மரங்களும், பல்வேறு மூலிகைத் தாவர இனங்களும் உள்ளன.

பெல்கா அருவி!

துராவிலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் இந்த அருவி உள்ளது. அமைதி தவழும் அருமையான இடம்!

ரோங்பாங் தார் அருவி!

இந்த அருவி துராவிற்கு மேற்கே சைனாபாத் கிராமத்தில் அமைந்துள்ளது. பருவமழைக் காலத்தில் பார்க்க ரம்மியமாக இருக்கும். இப்பகுதி முழுவதும் பசுமையான மூங்கில் மரங்கள் அடர்த்தியாக உள்ளன.

நாபக் ஏரி!

சிஜீ வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த அழகிய இடம். ஏரியில் அழகிய பறவைகளைப் பார்த்து மகிழலாம்!

உம்லாவன் குகை!

ஜெயந்தியா மலை மாவட்டத்தில் இக்குகை அமைந்துள்ளது. இந்தியாவின் ஆழமான மற்றும் மிகப்பெரிய குகை இது! சுமார் 350 ஆழமும், 75 அடி நீளமும் கொண்டது. மேலும் சில குகைகளை இந்தக் குகை வழிப்பாதை இணைக்கிறது.

மவ்திரைஷன் சிகரம்!

இங்கிருந்து வடக்கில் இமயமலையும் தெற்கில் பங்களாதேஷ் நாட்டையும் கிழக்கில் காசி மலையையும் மேற்கில் கரோ மலையையும் பார்த்து ரசிக்கலாம்!

ஜரேன் பிட்சர் ஆலை ஏரி!

50000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் படகு சவாரி செய்வது ஒரு அருமையான அனுபவமாகும்!

லேடி ஹைதரி பூங்கா! - ஷில்லாங்

ஷில்லாங்கின் முக முக்கியமான சுற்றுலாத் தலம் இது! பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளுடன் பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களும் தாவரங்களும் கண்களுக்கு நல்ல விருந்து! ஒரு சிறிய வனவிலங்குப் பூங்காவும் உள்ளே இருக்கிறது.

அழகான நீர்வீழ்ச்சிகள், பசுமையான மலைச்சரிவுகள், வேர்ப்பாலங்கள், தூய்மையான சுற்றுச் சூழலுடன் கண்ணுக்கினிய காட்சிகள் என மேகாலயத்தில் பார்த்து ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன.

நிறைவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com