அரங்கம்: சொல்லிட்டுப் போ!

அம்மா : குமார்! குமார்! .... எங்கே போயிட்டான் இவன்? ஏங்க குமார் எங்கேங்க?
அரங்கம்: சொல்லிட்டுப் போ!

காட்சி - 1
இடம்: குமார் வீடு
மாந்தர்: குமார், குமாரின் அப்பா, அம்மா,பாட்டி.

அம்மா : குமார்! குமார்! .... எங்கே போயிட்டான் இவன்? ஏங்க குமார் எங்கேங்க?
அப்பா : தெரியாது! வாசல் திண்ணையிலே உங்க அம்மா இருக்கா, கேளு!
அம்மா : குமார் எங்கேம்மா போயிருக்கான், ஏதாவது சொன்னானா?
பாட்டி : இப்பத்தான் செருப்பை மாட்டிண்டு விறுவிறுன்னு தெருவிலே இறங்கி நடந்தான்.... எங்கே போறேன் எதுக்குப் போறேன்னு ஒண்ணும் சொல்லலே! என்னிக்கு சொல்லியிருக்கான் இன்னிக்கு சொல்றதுக்கு!
அம்மா : எப்பவும் அவன் இப்படித்தான்! சொல்லிட்டுப் போடா! சொல்லிட்டுப் போடா! ன்னு நூறு தடவை சொல்லியாச்சு! பாயசம் பண்ண அவசரமா வெல்லம் வேணும்! இவன் போறது தெரிஞ்சா வாங்கிவரச் சொல்லியிருப்பேன்! ஏங்க நாலாவது வீட்டு "எடை மெஷின்' இன்னும் நம்மகிட்டேயே இருக்கு.... திருப்பிக் கொடுக்க வேணாமா? அவங்களே இப்ப போன் பண்ணி கேட்டுட்டாங்க! அவசரமா வேணுமாம்!
அப்பா : குமார் எங்கே போனான், எப்போ திரும்பி வருவான்னு ஒண்ணும் தெரியலையே! அவன்கிட்டே கொடுத்துதான் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். சரி, நானே போய்க் கொடுத்துட்டு வந்துடறேன்.
அம்மா : இருங்க நீங்க, நான் போறேன்! கரோனா வந்தாலும் வந்தது பொழுது போகாம திண்டாடுறான் இவன்! அம்மா அடுப்பிலே குழம்பு கொதிக்கறது கொஞ்சம் பாத்துக்குங்க!

காட்சி -2
இடம்: வாசக சாலை
மாந்தர் : குமார், மகேஷ், ரகுநாத்

(குமார் படித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது மகேஷ் வருகிறான்)

மகேஷ்(பதற்றமாக) : டேய் குமார், நீ இங்கே என்னடா பண்ணிக்கிட்டிருக்கே? எழுந்திருடா, எழுந்திரு! உங்க வீட்டுக்குப் போய் நீ எங்கேன்னு கேட்டேன்... தெரியாதுன்னு சொன்னாங்க...
குமார் : ஏன்? என்ன ஆச்சு ?
மகேஷ் : டேய் குமார், நீ இப்போ இருக்க வேண்டிய இடம் ஹசாரே கிரிக்கெட் ஸ்டேடியம்!
குமார் : ஹசாரே ஸ்டேடியம்தானே... அதான் இண்டியன் கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு முன்னிலையிலே நடக்கப்போற டெஸ்ட்டைப் பத்திதானேடா சொல்றே? அடுத்த சனிக்கிழமைதானேடா அங்கே கிரிக்கெட் டெஸ்ட் ப்ரோகிராம்!
மகேஷ் : இல்லேடா... திடீர்னு அந்த நிகழ்ச்சியை இன்னிக்கே மாத்திட்டாங்க. நேத்து பேப்பர்லே இதைப்பத்தி அறிவிப்பு செய்திருந்தாங்க... நீ பாக்கலையா?
குமார் : பார்க்கல மகேஷ். நேத்துலேந்து பேப்பர் போடற ஆளை மாத்திட்டாங்க அதனால பேப்பர் தவறிப் போயிருக்கும். நானும் லைப்ரரிக்கு நேத்து வரல்லே...
மகேஷ் : சரி, டைமை வேஸ்ட் பண்ணாதேடா! இன்னும் ஒரு மணி நேரத்துலே நாம அங்கே இருந்தாதான், நீ உன் பெயரைப் பதிவு பண்ணி டெஸ்டுலே கலந்துக்க முடியும். டேய் இந்த ப்ரொகிராம்லே சிறப்புப் பார்வையாளர் யார் தெரியுமா?
குமார் : யாருடா?
மகேஷ் : உன்னோட ஹீரோ - ஸ்டார் கிரிக்கெட் ப்ளேயர் அர்ஜுன் தேவ்!
குமார் : ஹா, அர்ஜுன் தேவா!... அவர்கிட்டே ஆட்டோகிராப் வாங்க ஏங்கிக்கிட்டிருக்கேன்டா. இருடா, வீட்டுக்குப்போய் ஆட்டோகிராப் நோட் கொண்டு வந்துடறேன்.
மகேஷ் : இதோ இருக்குடா உன் ஆட்டோகிராப் நோட்! எங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ விட்டுட்டு வந்துட்டே நீ. லைப்ரரிக்கு தினம் வரதால பாக்கும்போது கொடுத்துடலாம்னு எப்பவும் கையிலே வச்சிருப்பேன்... சரி வாடா! டைமை வேஸ்ட்
பண்ண வேண்டாம்! (என்றபடி தெருவில் இறங்கி) ஆட்டோ, ஆட்டோ, நில்லுங்க! ஹசாரே கிரிக்கெட் மைதானம் போகணும்!
ஆட்டோ : வராது தம்பி!

(நெடுநேரமாக ஆட்டோ கிடைக்காமல் தவிக்கிறார்கள்)

மகேஷ் : டேய், ஒரு மணியிலேந்து ஐந்து மணிவரைக்கும்தான் இந்த டெஸ்ட்! இப்பவே மணி மூணரைடா!... டேய் உடனே உங்க வீட்டுக்குப் போய், உங்க அப்பா கார்லே போய்டலாம்!
குமார் : அப்பா கார் சர்விஸூக்குப் போயிருக்குடா! ஸ்டேடியம் இங்கேந்து எவ்வளவு தூரம்?
மகேஷ் : சுமார் இரண்டு கிலோ மீட்டர் மேல இருக்கும்.
குமார் : அவ்வளவுதானே! வேகமா வேகமா ஓட்டம் பிடிப்போம்! ஈஸியா முக்கால் மணி நேரத்துக்குள்ளே போய் சேர்ந்துடலாம்! ம்.... ஸ்டார்ட்.... ஒன்... டு... த்ரீ...!
(கொஞ்ச நேரம் ஓடியபிறகு குமாரால் வேகமாக ஓட முடியவில்லை)

மகேஷ் : டேய் என்னடா ஆச்சு? உட்கார்ந்துட்டே! சென்னையிலே இருக்கற அத்தனை அமெச்சூர் டீமும், மத்த பெரிய டீம்களும் நீதான் சிறந்த பேட்ஸ்மேன், ஃபாஸ்ட் ரன்னர்னு பேசிக்கிட்டிருக்காங்க! நீயா இப்படி உட்கார்றது? எழுந்திருடா!
குமார்: அதெல்லாம் சரிதாண்டா, என் கால் செருப்பை பாருடா, எப்படி அறுந்திருக்கு!
மகேஷ் : அதை தூக்கி எறிடா, இன்னிக்கு நடக்கற டெஸ்டுலே நீதான்டா ஃபர்ஸ்ட் செலக்ஷன் ஆகப்போறே! ஆளுக்கு ஒரு ஓவர்தான் பேட்டிங் செய்யணும்! அவுட் ஆகக்கூடாது! அதிகமான ரன்ஸ் எடுக்கணும்! இதெல்லாம் உனக்கு ரொம்ப ஈஸிடா! எழுந்திரு, ம்! கொஞ்ச தூரந்தாண்டா!
குமார் : (எழுந்து ஓடத் தொடங்க) ஆ, ரோடு ஒரே சூடு! பொறுக்கமுடியல்லேடா!
மகேஷ் : வேற வழியில்லே... ஓடித்தான் ஆகணும்! எதிரே விட்டுவிட்டு மரம் இருக்கு... நிழல்லே கொஞ்சம் கொஞ்சம் தங்கித் தங்கி இன்னும் வேகமா ஓடுவோம்! நீ இந்த டெஸ்டுலே செலக்ட் ஆயிட்டா. வருங்கால சச்சின் டெண்டுல்கர் நீதான்!

(அவ்வாறே சிறிது நேரம் ஓடியபின் ஸ்டேடியத்தை நெருங்கிவிடுகிறார்கள்)

மகேஷ் : டேய் குமார்! உள்ளே புல்தரைதான் ஓடுடா ஓடு!

(எதிரே டீம் கேப்டன் ரகுநாத் வருகிறார்)

ரகுநாத் : குமார் என்னப்பா இவ்வளவு லேட் பண்ணிட்டே? டெஸ்ட் எல்லாம் முடிஞ்சு இப்பதான் போர்டு மெம்பர்ஸ், அர்ஜுன் தேவ் எல்லோரும் கிளம்பிப் போறாங்க! உன் பேட்டிங்... ரன்னிங் பார்த்தா அர்ஜுன் தேவ் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்! நீதான் செலக்ஷன் லிஸ்டுலே டாப்புலே இருந்திருப்பே! உன் அப்பாவுக்கும் போன் பண்ணேன் கனெக்ஷன் கிடைக்கல.
குமார் : அப்பாவோட ஃபோன் ரிப்பைர். சர்வீசுக்கு போயிருக்கு... அதான் கணெஷன் கிடைக்கல. (குமார் கண்ணை கசக்க)
ரகுநாத் : என்ன ஆச்சுப்பா.... (-குமார் கண்களில் நீர் பெருக்கெடுக்க மகேஷ் நடந்ததை விவரிக்க-) சரி, அழாதே ப்ளீஸ்! உனக்கு இன்னும் வயசிருக்கு அடுத்த வாய்ப்பை நழுவவிடாதே! வா என் கார்லே உங்க வீட்லே இறக்கிவிட்டுட்டுப் போறேன்! வா!

காட்சி - 3
இடம் : குமார் வீடு
மாந்தர் : குமார், மகேஷ் , அப்பா, அம்மா, பாட்டி

அப்பா : இதோ பார் காமாட்சி! நேரம் ஆகிக்கிட்டே இருக்கு இன்னும் இந்தப் பய வரல்லே! மகேஷ் வேறே தேடிட்டுப் போனான்...நாளைக்கு எனக்கு முக்கியமான "ஆன்-லைன்" மீட்டிங் இருக்கு! எல்லாம் தயார் பண்ணணும்! அவன்கிட்ட சொல்லாம கொள்ளாம, திடீர்னு கடைக்கு அழைச்சுண்டுபோய் பிறந்தநாள் பரிசு வாங்கிக்கொடுக்கலாம்னு சொன்னே அவன் என்னடான்னா நம்மகிட்டேயே சொல்லாம கொள்ளாம போய்க்கிட்டிருக்கான்....
அம்மா : கொஞ்சம் பொறுங்க! குமார் வந்துட்டான்.

(குமார் அழுத முகத்தோடு, மகேஷுடன் உள்ளே நுழைகிறான்)
அம்மா : டேய் என்னடா இது? கண்ணெல்லாம் கலங்கி சிவந்து இருக்கு... குமார், என்ன ஆச்சு? ஏன் அழறே? மகேஷ் என்னப்பா நடந்தது?
(மகேஷ் நடந்ததையெல்லாம் சொல்கிறான்)
குமார் : ஆமாம்ப்பா நல்ல சான்ஸ்! கோட்டை விட்டுட்டேன்! எனக்குப் பிடிச்ச அர்ஜுன் தேவ் கூட சிறப்புப் பார்வையாளரா வந்தாராம்! அவரோட ஆட்டோ கிராப்பையும் மிஸ் பண்ணிட்டேன்பா!
மகேஷ் : ஆமாம், குமார் பாவம் அங்கிள்! அஞ்சு நிமிஷம் முன்னாலே போயிருந்தாகூட குமார் விளையாடி செலக்ட் ஆகியிருப்பான். நேரத்தை வீணாக்காம முடிஞ்சமட்டும் முயற்சி பண்ணோம்... முடியாம போயிடுத்து அங்கிள்!
அப்பா : அதுக்குதான் குமாரை தேடினியா?ஆனா குமார்! உங்க முயற்சியிலே குறை இருக்கு. ஆட்டோ பிடிக்கறதுக்கு முன்னால வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்லியிருக்கலாம் இல்லே? அந்தப் பழக்கந்தான் உனக்குக் கிடையாதே!
குமார் : சொல்லியிருந்தாலும் என்னப்பா செய்திருப்பீங்க? நம்ம கார்தான் சர்வீஸூக்குப் போயிருக்கே!
அம்மா : ம்! இதுக்குத்தான் பெரியவங்க கிட்டே சொல்லிட்டுப் போகணும்கிறது. கார் சர்வீஸ்லேந்து காலையிலேயே வந்தாச்சு! அப்போ நீ வெளியே போயிருந்தே!
அப்பா : அப்படியே நம்ம கார் இல்லாட்டாலும் பக்கத்து வீட்டு காரை ஏற்பாடு பண்ணிருப்பேன்! கார்லே போயிருந்தா பத்தே நிமிஷத்துலே ஸ்டேடியத்துக்குப் போயிருப்பீங்க... டென்ஷன், ஓட்டம், ரோடு சூடு, ஏமாற்றம், அழுகை எதுவுமே இல்லாம எல்லாம் வெற்றிகரமா நடந்திருக்கும்!
குமார் : தப்புதான்பா! சொல்லிட்டுப்போற பழக்கம் பலவிதத்திலேயும் நன்மைதரும் பழக்கம்கிறதை இப்போதான் புரிஞ்சுகிட்டேன்பா.
பாட்டி : குமார்! எங்கே போறே, எப்போ வீடு திரும்புவேன்னு விவரமா சொல்லிட்டுப் போயிட்டா வீட்லே உள்ள நாங்க உன்னைப்பத்தி கவலைப்படாம இருப்போம். வீட்டுக்கு அவசரமா ஏதாவது பொருள் வேண்டியிருக்கும்! நீ போயிட்டுவர வழியிலே அதை வாங்கிவரச் சொல்லலாம். யோசிச்சுப் பாரு!
அப்பா : அது மட்டுமில்லே, நீ போறபக்கம் தெரு சரியா இருக்கா, அரசியல் ஊர்வலம், திருவிழா கும்பல், போக்குவரத்து மாற்றம், இப்படி ஏதாவது இருக்கான்னு தெரிஞ்சதை சொல்லி எச்சரிச்சு வைப்போம்.
அம்மா : இதோ பார் மூணுநாளா லாண்டரிக்கான துணி அப்படியே கிடக்கு. நீ போற வழியிலே அதையும் கொடுத்துட்டுப்போயிருக்கலாம். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கூட நானோ, அப்பாவோ வெளியிலே போகும்படியா ஆயிடறது!

பாட்டி : என்ன புரிஞ்சுண்டியா?

குமார் : இதுக்கெல்லாம்தான் ஒரு செல்போன் வேணும்னு கேட்டுக்கிட்டிருக்கேன்.
அம்மா : சரி, இப்போ எங்ககூட ஒரு ஷாப்பிங் சென்டருக்குக் கிளம்பு!
குமார் : சரிம்மா! அதுக்கு முன்னால விவேக் நகர் வேணு வீட்டுக்கு நான் இப்பவே போயாகணும். அவனோட "வொர்க்புக்' எங்கிட்டே இருக்கு. உடனே வேணும் கொண்டுவான்னு நேத்தே சொன்னான். அஞ்சே நிமிஷத்துல சைக்கிள்லே போயிட்டு வந்துடறேன். என்னப்பா போயிட்டு வரவா? பக்கத்து விவேக் நகர்லேதான் வீடு.
அப்பா : சரி சரி, சீக்கிரம் வந்துசேரு!
(வேறு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்புகிறான்)
பாட்டி : குமார் ஒரு நிமிஷம்! விவேக் நகர்லே ராமய்யா இட்லி கடையிலே காஞ்சிபுரம் இட்லி ரொம்ப பேமஸ். வரும்போது மறக்காம வாங்கிண்டு வா!
(சிரிப்பலைகள்)

நிறைவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com