முயற்சி!

1940  ஜீன் 23. அமெரிக்காவின் தென்பகுதியிலுள்ள டென்னஸ் மாநிலத்திலுள்ள செயின்ட் பெத்லஹேம் என்னுமிடத்தில் ஒரு தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.  
முயற்சி!

1940 ஜீன் 23. அமெரிக்காவின் தென்பகுதியிலுள்ள டென்னஸ் மாநிலத்திலுள்ள செயின்ட் பெத்லஹேம் என்னுமிடத்தில் ஒரு தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அது அவர்களுக்கு இருபதாவது குழந்தை! குழந்தைக்கு "வில்மா ருடால்ஃப்' என்று பெயர் வைத்தனர். குழந்தைக்கு இரண்டு வயதாகியும் நடக்க ஆரம்பிக்க வில்லை. ருடால்ஃபுக்கு கால் சற்று பலவீனமாக இருந்தது. அவள் எழுந்திருக்கும்போதெல்லாம் சட்டென்று கீழே விழுந்து விடுவாள். டாக்டர்கள் அவளுக்கு போலியோ நோய் வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.
மிகவும் வருத்தமடைந்த பெற்றோர் அவளுக்கு நடப்பதற்கு ஒரு கட்டையை வாங்கித் தந்தனர். அந்தக் கட்டையின் உதவியுடன் வில்மா ருடால்ஃப் நடந்துகொண்டிருந்தாள்.
தன் போன்ற சிறுவர் சிறுமியர், மற்றும் தன் சகோதர சகோதரிகள் அனைவரும் ஓடி விளையாடுவதைப் பார்த்த சிறுமிக்கு தானும் அவர்களுடன் ஓடிவிளையாட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
ருடால்ஃபுக்கு ஒன்பது வயதாகியது. சட்டென்று நடக்க உதவிய கட்டையைத் தூக்கி எறிந்தாள். நடந்தாள்! பின் லேசாக ஓடவும் செய்தாள்!
டாக்டர்களுக்கு வியப்பாகிவிட்டது.
ஒரு நாள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்து விட்டாள் ருடால்ஃப்.
""உன்னாலேதான் வேகமாக ஓட முடியலியே... ஏன் ஓடி விளையாட ஆசைப்படறே?'' என அவளது நண்பர்கள் கேட்டனர்.
அந்தப் பெண்ணுக்கு ரொம்ப ரோசமாகிவிட்டது!
தினமும் அருகிலுள்ள மைதானத்தில் ஓடிப் பழக ஆரம்பித்தாள். முதலில் கொஞ்சம் சுமாராக ஓடப் பழகினாள். பிறகு நன்றாக ஓடினாள்.
ஆர்வத்தின் காரணமாக தன் பதிமூன்றாவது வயதில் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆசைப்பட்டாள். ஒரு ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டாள். அவள் கடைசியாக வந்தாள். ஆனால் அவள் தளரவில்லை. மறுபடியும் வேறொரு பந்தயத்தில் கலந்துகொள்ள அதிலும் கடைசி!
கலந்து கொண்ட அனைத்துப் பந்தயங்களிலும் கடைசியாகத்தான் அவளால் வரமுடிந்தது.
பெற்றோர்கள் அவளிடம், ""வில்மா, போதும் நீ இனி ஓட வேண்டாம்.... படிப்பில் கவனத்தைச் செலுத்து!'' என்று அறிவுரை கூறினர்.
ஆஸ்திரேலியாவில் அப்போது ஒலிம்பிக் போட்டி நடக்கவிருந்தது. ஓட்டப்பந்தய வீரர்களைத் தேர்வு செய்ய வாஷிங்டனில் தேர்வு நடந்துகொண்டிருந்தது.
""அம்மா இந்தத் தேர்வுப் போட்டியில் நான் கலந்துக்கறேம்மா.... ப்ளீஸ்'' என்று கேட்டாள் வில்மா.
பெற்றோர் அனுமதிக்க அதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டாள் வில்மா ருடால்ஃப்
ரூடால்ஃப் அதில் தேர்வானாள்! ஆஸ்திரேலிய ஒலிம்பிக்ஸில் முதல் வெண்கலப் பதக்கம். பிறகு சிகாகோவில் நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம்!
அதற்குப் பிறகு நடைபெற்ற மாநிலப் போட்டிகளிலும், பல்வேறு பந்தயங்களிலும் அவளே முதல்!
அதற்கடுத்து ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம்! உலகமே ருடால்ஃபின் சாதனையை போற்றிப் புகழ்ந்து பாராட்டியது! மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம்!
பெற்றோர்களும், சகோதரர்களும், ஆசிரியர்களும், மருத்துவர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
""உங்களின் சாதனையின் ரகசியம் என்ன?'' என்று சிலர் அவளிடம் கேட்டனர்.
அதற்கு சிரித்துக்கொண்டே, ""ஓடும்போது நான் மிகச் சுதந்திரமாக உணர்கிறேன்... தூயகாற்றில்
ஓடுவதுபோல் உணர்கிறேன்.... அது மட்டுமல்ல.... எனக்கு நானே சிறந்த போட்டி என நினைத்துக் கொண்டு ஓடுவேன்!.... எல்லா சாதனைகளுக்கும் உதவுபவர்களும், உற்சாகமூட்டுபவர்களும் உள்ளார்கள்'' என்றாள் வில்மா ருடால்ஃப்!
1994 - ஆம் ஆண்டு நவம்பர் 12 - ஆம் நாள் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட வில்மா ரூடால்ஃப் விண்ணுலகு எய்தினார். உலகமே வில்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது! தன்னம்பிக்கைக்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் வில்மா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com