அரங்கம்: பூக்களைப் பறிக்காதீர்கள்     

சபேசன், நம்ம ஊட்டி ரோஜா தோட்டம் இந்தியாவிலேயே மிகப் பெரியதென்று உங்களுக்குத் தெரியுமா ?
அரங்கம்: பூக்களைப் பறிக்காதீர்கள்     

காட்சி - 1.
இடம்: ஊட்டி ரோஜா மலர்த் தோட்டம்.
மாந்தர்கள்: முரளி அவரது மனைவி வித்யா, மகன்கள் சஞ்சு, தீபு மற்றும் அவர்களது குடும்ப நண்பர் சபேசன்.
 (முரளி குடும்பத்தினர்கள் அவர்களது குடும்ப நண்பர் சபேசனுடன் ஒரு விடுமுறை தினத்தன்று ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர்.)

முரளி: சபேசன், நம்ம ஊட்டி ரோஜா தோட்டம் இந்தியாவிலேயே மிகப் பெரியதென்று உங்களுக்குத் தெரியுமா ?
சபேசன்: அப்படியா? இதைக் கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறதே! பார்ப்பதற்கும் இந்த ரோஜா தோட்டம் மிக பிரம்மாண்டமாகத்தான் இருக்
கிறது!
சஞ்சு: அங்கிள்..இந்த ரோஜா தோட்டம் கடல் மட்டத்தில் இருந்து 2200 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
தீபு:  இந்தத் தோட்டத்தில் 1919 வகையான ரோஜா மலர்கள் பூக்கின்றன!
சஞ்சு : உலகத்தில் உள்ள அனைத்து ரோஜா நாற்றுகளும் இங்கு வரவழைக்கப்பட்டு, பதியன் போட்டு வளர்க்கப்படுகின்றன.
வித்யா: சபேசன் சார்... ஊட்டியின் இந்த மிதமான தட்ப வெட்ப நிலை, குளுமையான சீதோஷ்ண நிலை, மற்றும் மிதமான சாரல் மழை காரணமாக இங்கு ரோஜா மலர்கள் அதிகமாக பூத்துக்குலுங்கி, அதிக நாட்கள் செடிகளில் வாடி விடாமல் அப்பொழுது பூத்தது போலவே இருக்கும்.   
முரளி: இங்கு நடவு செய்யப்பட்டிருக்கும் 20,000 த்திற்கும் அதிகமான செடிகளிலிருந்து ஹைப்ரிட் எனப்படும்  ரோஜா மலர்கள், வாடாமல் வெகு நாட்களுக்கு அப்படியே இருக்கும். உயரிய வகை ரோஜா பூக்களும், பட்டன் ரோஸ் எனப்படும் சிறிய  வகை ரோஜா பூக்கள் முதல் பல அடுக்குகள் கொண்ட பெரிய ரோஜா மலர்கள் வரை இங்கே பூத்துக் குலுங்குகின்றன.
தீபு: அங்கிள், 10 ஏக்கரா பரப்பளவுல  அடுக்கடுக்காக, மலைச்சரிவுகளில் அமைந்திருக்கும் இந்த ரோஜா தோட்டத்தின் அழகைப் பார்ப்பதற்கு நமக்கு இரண்டு கண்கள் போதாது.
சஞ்சு: பல வித வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ஒவ்வொரு ரோஜா மலருக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு.
வித்யா: ஆமாம் சபேசன் சார். சிகப்பு வண்ண ரோஜாப்பூக்கள் அன்பை வெளிப்படுத்தும். மஞ்சள் நிறப்பூக்கள் நட்பை வெளிப்படுத்தும். ஆரஞ்சு நிறப்பூக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தும்.
சஞ்சு: வெள்ளை நிறப்பூக்கள் திறந்த மனத்தை வெளிப்படுத்தும். பிங்க் நிறப்பூக்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தும்.
முரளி: மொத்தத்தில் ரோஜா பூக்களின் சிறப்பு, மனிதர்களின் வெவ்வேறு குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. அதனால்தான் என்னவோ, ரோஜா மலர் என்றாலே நம் அனைவருக்கும் பிடித்துப் போய் விடுகிறது.
 
காட்சி - 2
(அனைவரும்  ரோஜா மலர்த்தோட்டத்தின் அழகை ரசித்தபடியே சுற்றி சுற்றி வந்தனர். திடீரென்று சபேசன் அவருக்குப் பிடித்த சில ரோஜா மலர்களைப் பறிக்க முற்பட்டார்.)

தீபு: (பதறியப்படியே) அங்கிள் என்ன காரியம் செய்யறீங்க? நீங்கள் செய்வது சரியில்லை. தயவு செய்து  அந்த அறிவிப்புப் பலகையில் என்ன எழுதியிருக் கென்று பாருங்கள். உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற அறிவிப்பை எழுதி வைத்திருக்கிறார்கள்.
சஞ்சு: இங்கு வருகை தரும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு மலரைப் பறித்து எடுத்துச் சென்று விட்டால், பிறகு இந்த ரோஜா தோட்டம் தன் அழகையிழந்து விடும். அதற்காகவா அரசாங்கம் மிகுந்த பாடுபட்டு இந்த ரோஜா தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் ?
முரளி:  சபேசன், இந்த ரோஜா மலர்களின் அழகைப் பார்த்துவிட்டுத்தான், அழகின் மேன்மை, ஆனந்தத்தின் விலாசம் என்று ஜான் கீத் எனும் மேனாட்டு கவிஞர் கூறியிருக்கிறார்.
சஞ்சு: அங்கிள், தயவு செய்து இந்த அழகான மலர்களைப் பறித்து விட்டு, அவற்றை மற்றவர்களுடைய பார்வைக்கு போகாமல் இருக்கச் செய்யாதீங்க.
சபேசன்:  தீபு, நாம் இந்த மலர்களைப் பறிக்காமல் விட்டால் எப்படியும் அவை வாடி உதிர்ந்து விடுமே?
சஞ்சு: அங்கிள், இது போன்ற ரோஜா தோட்டங்கள் பார்வையாளர்கள் பார்த்து மகிழவே உருவாக்கப்படுகின்றன என்பதை  முதலில் உணருங்கள்.
சபேசன்: சஞ்சு, நீங்கள் இருவர் கூறுவதிலும் ஒரு உண்மையிருக்கிறது. சரி, இனி நான் பூக்களைப் பறிக்க மாட்டேன். உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி தானே ?

(சபேசன் பூக்களைப் பறிக்காமல் பின் வாங்குகிறார். சஞ்சுவும் தீபுவும் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர்.)
                              
காட்சி - 3
இடம்: ஊட்டி உயிரியல் தோட்டம்.
மாந்தர்கள்: முரளி அவரது மனைவி வித்யா, மகன்கள் சஞ்சு, தீபு மற்றும் அவர்களது குடும்ப நண்பர் சபேசன்.
(அனைவரும் ஊட்டி ரோஜா மலர்த்தோட்டத்தைக் கண்டு ரசித்து விட்டு ஊட்டி உயிரியல் பூங்காவிற்கு வருகின்றனர்)

முரளி: சபேசன்.. இவ்வளவு பெரிய பூங்காவை ஒரு உயர்ந்த மலைத் தொடர்களின் நடுவே எந்த ஒரு நாட்டிலேயாவது பார்த்திருக்கிறீர்களா ?

சபேசன்: என்ன முரளி, கண்களுக்கு எட்டிய தூரம் வரை பூங்காவாகவே தென்படுகிறது.  ஒரு பூங்கா இத்தனை பிரம்மாண்டமாக இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை!
முரளி:  சபேசன், இந்த ஊட்டி உயிரியல் பூங்கா, 1847ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 55 ஏக்கராவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா கடல் மட்டத்திலிருந்து2500 மீட்டர் உயரத்தில் உள்ளது. 1896ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்தப் பூங்காவில் மலர்க் கண்காட்சி ஆண்டு தோறும் நடை பெற்று வருகிறது.
வித்யா: உலகத்தில் உள்ள பல நாடுகளில் வளரும் பூச்செடிகளை இங்கு வரவழைத்து, பூத்துக் குலுங்க வைத்து வருடந்தோறும் சுமார் ஒரு வாரத்திற்கு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து வைக்கிறது நமது அரசாங்கம்.
தீபு: இந்த மலர்க்கண்காட்சி, மற்றும் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான புல் தரையை நீங்க வேற எங்கயாவது பார்த்திருக்கிறீர்களா அங்கிள் ?
சஞ்சு: பச்சை நிறத்தில் இயற்கை போட்டிருக்கும் இந்த தரை விரிப்பின் அழகில் மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம்.
முரளி:  இந்த ரம்மியமான புல்வெளிகளைப் பாதுகாத்து, பராமரிக்கவே, அரசாங்கம் நூற்றுக்கணக்கில் பணியாளர்களை நியமித்திருக்கிறது. இந்த புல்வெளிகளைப் பராமரிக்க அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.  தினமும் தண்ணீர் ஊற்றாவிடில், புற்கள் காய்ந்து விடும். புற்களை வளர்ப்பது மிக மிக கடினம் அங்கிள்.
(சபேசன் புல்வெளியில் வளர்ந்திருக்கும் புற்களின் மென்மையைத் தன் கைகளினால் வருடி அனுபவிக்கிறார். ஆர்வம் தாங்காமல் அந்த புற்களின் மீது நடக்க ஆரம்பிக்கிறார். சஞ்சுவும் தீபுவும் மிகவும் அதிர்ச்சியடைகிறார்கள்)
சஞ்சு :  அங்கிள், திரும்பவும் நீங்க அதே தவறை செய்கிறீர்கள்.
தீபு : அங்கிள், அந்த அறிவிப்புப் பலகையைப் படித்து பாருங்கள். "புல் தரையில் நடக்காதீர்கள்' என்று எழுதியுள்ளதை ஏன் நீங்க கவனிக்க மாட்டேங்கறீங்க?
சஞ்சு :  அங்கிள், புல் தரையில் நாம் நடந்தால், 
அவற்றின் மென்மையான தண்டுகள் ஒடிந்து விடும். பிறகு புற்கள் அங்கு மீண்டும் வளராது.
சபேசன் : என்னப்பா, பூக்களைப் பறிக்காதீர்கள்... புல்தரையில் நடக்காதீர்கள் என்று கூறுகிறீர்கள். பின் எதற்கு இவற்றை வளர்க்கிறீர்கள்? பின் எதற்கு இவற்றை பொது மக்கள் பார்வைக்கு வைக்கிறீர்கள் ?
சஞ்சு :  அங்கிள், நாம் மனிதர்களை மதிப்பதைப் போலவே, இயற்கையையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மலர்களையும், புற்களையும் வளர்ப்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று யோசியுங்கள். நம் மனதை வருடி, நமக்கு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும் இந்த இயற்கைச் செல்வங்களை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டாமா?
(சபேசன் பச்சை பசேலென்று வளர்ந்திருக்கும் அந்த புல்தரையில் தன் மனதை பறி கொடுக்கிறார்.  நூற்றுக்கணக்கான தொட்டிகளில் பூத்திருந்த பூக்கள் ஊட்டியின் மிதமான குளிர்க்காற்றில் அசைந்து சபேசனுக்கு ஒரு இனம் புரியாத ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. சபேசன் தன் தவறை உணர ஆரம்பிக்கிறார். அவரது கால் மிதித்து, நசுங்கியப் புற்கள் அவரது கவனத்தை கவர்ந்தது. மீண்டும் அந்த இடத்தில் புற்கள் வளர அதிக நாட்கள் ஆகுமாம்)

சபேசன்: குழந்தைகளா, என் கண்களைத் திறந்து விட்டீர்கள். இனி இயற்கைக்கு பாதகம் விளைவிக்கும் எந்த செயலையும் நான் செய்ய மாட்டேன். இனி இயற்கையை நானும் தவறாமல் மதிக்க ஆரம்பிப்பேன். இது சத்தியம்.
 
(சபேசனின் இந்த மாற்றம் சஞ்சுவையும் தீபுவையும் மகிழ்ச்சியடையச் செய்தது.)

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com