கருவூலம்!: ஜாலி டூர்!

தெற்கு சீனாவில், "ஜிஷாங்பன்னா தேசிய இயற்கை பாதுகாப்புப் பகுதி' ஒன்று உள்ளது. அங்கு பல யானைகளும் உள்ளன.
கருவூலம்!: ஜாலி டூர்!


தெற்கு சீனாவில், "ஜிஷாங்பன்னா தேசிய இயற்கை பாதுகாப்புப் பகுதி' ஒன்று உள்ளது. அங்கு பல யானைகளும் உள்ளன. அதில் பதினாறு யானைகள் ஒரு ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்தன. அது என்னன்னா,  "" நாம ஏன் ஜாலியா ஒரு டூர் போகக்கூடாது?.... இந்தப் பகுதியிலேயே எவ்வளவு நாள் வாழறது?.... உணவும் சரியா கிடைக்கிறதில்லே!  போரடிக்குது!....'' எனத் தீர்மானமாய் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி தங்கள் உல்லாசப் பயணத்தை ஆரம்பித்து விட்டன. சில கிலோ மீட்டர் தூரம் சென்றவுடன் அந்தப் பதினாறு யானைகளில் இரண்டு மட்டும், ""நாங்க ரெண்டு பேரும் அந்த தேசிய இயற்கைப் பாதுகாப்புப் பகுதிக்கே போயிடறோம்ப்பா!... இப்பிடி ஊர் ஊரா சோத்துக்கு அலையறது பிடிக்கலே!... எங்களுக்கு பயமாவும் இருக்கு!'' என்று தெரிவித்துவிட்டுத் திரும்பி விட்டன. 

ஆனா மீதியிருந்த 14 யானைகளும் முன் வைத்த காலைப் பின் எடுக்காம தங்கள் உல்லாசப் பயணத்தைத் தொடர்ந்தன. நகரங்கள், கிராமங்கள், எல்லா இடங்களுக்கும் சென்றன. இன்டர் நெட் யுகமாச்சே! விஷயம் தீவிரமா ஊடகங்களில் பரவ ஆரம்பிச்சுடுச்சு! சில அரசு அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்தார்கள். 

இதுலே ஒரு பெண்யானைக்கு நவம்பரில் பிரசவ வலி! டூர் போன இடத்திலே ஒரு அழகான குழந்தையைப் பெற்றது! கூட இருந்த யானைகளும் அதுக்குத் துணையா அங்கேயே சுமார் ஒருமாதம் தங்கி தாயையும், குழந்தையையும் நல்லா கவனிச்சுக்கிச்சிங்க. யானைப் பாப்பா நல்லா நடக்க ஆரம்பிச்சதும் திரும்பவும் தங்களோட ஜாலிப் பயணத்தை தொடர ஆரம்பிச்சிடுச்சுங்க!

அரசு அதிகாரிகளும் அவைகளுக்கு வேண்டிய உணவைத் தர அந்தந்த கிராமங்களுக்கும், அவைகள் போகும் பகுதிகளுக்கும் தகவல் அனுப்பிச்சுக்கிட்டே இருந்தாங்க! சாப்பாட்டுக்கு சில சமயம் வயல்களிலும், தோப்புகளிலும் புகுந்து ஆசை தீரத் தின்றன. சுமார் இதுவரைக்கும் இந்திய மதிப்பில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவைத் தின்று தீர்த்திருக்கின்றன. இது வரையில் சுமார் 500 கிலோ மீட்டருக்கும் மேல் தங்கள் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன!

ஒரு முதியோர் இல்லம், கார் விற்பனை நிலையம், கரும்புத் தோப்பு, வயல்கள், கோயில்கள் என்று அவைகள் எல்லா இடங்களையும் ரசித்துக்கொண்டு தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. 

இது பற்றி வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டபோது, ""இது மாதிரி காட்டு யானைகள் இடம் பெயர்வது சகஜம்தான்.  ஆனால் இந்த யானைகள் தகுந்த முன் அனுபவம் இல்லாதவை. ஏதோ தாறுமாறாய் ஊரைச் சுற்றுகின்றன... இதற்கு மனிதர்களும் முக்கிய காரணம்தான். நகரமயமாதல், உணவுப் பற்றாக்குறை, விலங்குகளின் இனப் பெருக்கம் முதலிய  காரணங்களும் உள்ளன. 

நல்ல காலம்! இதுவரை எந்த மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ இந்த 15 யானைகளால்  ( அதான் போற வழியிலே ஒரு குட்டி பிறந்தது இல்லே!.... அதைச் சேர்ந்து!) ஏதும் பாதிப்பில்லை! தற்போது இந்த யானைகள் யுங்ஸி நகரத்துக்கு அருகில் உள்ளனவாம்!  (அது சரி, டூர் எப்போ முடியும்?)

இப்படி விலங்குகள் சுற்றுலா பண்ண ஆரம்பிச்சா நம்ம கதி?  கொஞ்சம்... ஏன்? நிறைய... யோசிக்க வேண்டியிருக்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com