முத்துக்கதை: கிணற்றைத்தானே விற்றேன்
By -அழகுநிலவன் | Published On : 04th December 2021 06:00 AM | Last Updated : 03rd December 2021 09:15 PM | அ+அ அ- |

ஒருவன் தனது கிணற்றை விவசாயி ஒருவனுக்கு விற்றான். வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான். அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருத்தான். வந்த விவசாயியைத் தண்ணீர் எடுக்கவிடாமல் தடுத்தான்.
அந்த விவசாயிக்குக் கோபம் வந்தது. "எனக்குக் கிணற்றை விற்றுவிட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்கவிடாமல் தடுப்பது நியாயமா?' என்று கிணற்றை விற்றவனிடம் கேட்டான்.
அதற்குக் கிணற்றை விற்றவனோ, "உனக்குக் கிணற்றை மட்டும்தான் நான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை இல்லை...' என்று தர்க்கம் செய்தான்.
விவசாயி குழப்பத்துடன் நாட்டாமையிடம் சென்று முறையிட்டான். நாட்டாமை இருவரையும் அழைத்து விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம்
"நீ கிணற்றை விற்றுவிட்டதால் இனிமேல் அது
உனக்குச் சொந்தமல்ல. அதில் உனது தண்ணீரை
இன்னமும் வைத்திருப்பது தவறு. அதை விடுத்து, உனக்கு அதில்தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டுமென்றால், அதற்கான வாடகையை விவசாயிக்குக் கொடுத்துவிடு. இல்லையென்றால், கிணற்றிலிருந்து உனது தண்ணீரை உடனே எடுத்துக்கொண்டு சென்றுவிடு' என்று தீர்ப்பளித்தார்.
கிணற்றை விற்றவன் தலைகுனித்து தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டான். விவசாயி பெருமகிழ்ச்சி அடைந்து நாட்டாமைக்குத் தன் நன்றியைத் தெரிவித்தான்.