மரங்களின் வரங்கள்!: இதயக் கனி - ஆப்பிள் மரம் 

நான்தான் ஆப்பிள் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர்  "மாலஸ் ஸ்ப்' என்பதாகும்.
மரங்களின் வரங்கள்!: இதயக் கனி - ஆப்பிள் மரம் 

குழந்தைகளே நலமா?

நான்தான் ஆப்பிள் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர்  "மாலஸ் ஸ்ப்' என்பதாகும். நான் ரோசாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தாயகம் மத்திய ஆசியா. நான் கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரம் உள்ள இடத்தில்தான் வளருவேன். பொதுவாக நான் 6 முதல் 15 அடி வரைகூட வளருவேன். எனக்கு ஆண்டுக்கு 75 மணி நேரம் உறைபனி வேண்டும். இதை ஆங்கிலத்தில் "சில்லிங் ஹவர்ஸ்' என்று அழைப்பார்கள். 

நான் பனி பொழியும் பகுதிகளில் மட்டுமே வளரும் தன்மை உடையவன். ஆரோக்கியம், அன்பு, ஆதரவு, வெற்றி, குழந்தை ஆகியவற்றின் அடையாளம் ஆப்பிள். அழகிய பெண்களின் அடையாளமாகவும் ஆப்பிள் மலர்கள் விளங்குகின்றன. பண்டைய கிரேக்கத்திலும், ரோமிலும் செல்வச் செழிப்பின் அடையாளம் நான்தான். 

நார்ஸ் புராணங்களில் இளைஞர்களின் தெய்வம், இடூன் மேஜிக் ஆப்பிள்களை வளர்ப்பதாக நம்பப்பட்டது. இது கடவுள்களை இளமையாக வைத்திருந்தது எனவும் நம்பப்படுகிறது. நியூயார்க் நகரம் "பெரிய ஆப்பிள்' என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படுகிறது. உலகிலேயே சீனாவில்தான் நான் அதிகம் விளைகிறேன்.

ஒருவரைப் பார்க்கும்போது கொடுக்க வேண்டிய பிரபலமான பரிசு ஆப்பிள். ஏனென்றால், சீனக் கலாசாரத்தில் ஆப்பிள்களுக்கான சொல் "பிங்' என்று உச்சரிக்கப்படுகிறது. இது அமைதியைக் குறிக்கிறது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இன்பமும், துன்பமும் இருப்பதுபோல, ஆப்பிளைக் கொடுத்து அன்பை வெளிப்படுத்தும் கிரேக்கப் பண்பாட்டின் அடையாளமாக நான் இருக்கிறேன் என்று மகிழும் அதே வேளையில், ஆதாம் - ஏவாளின் பாவத்தின் அடையாளக் குறியீட்டுப் பழ மரமாகவும் நான் இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாயிருக்கு.

மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சர்வ வல்லமை படைத்த கனியைத் தருபவன் நான். "தினம் ஒரு ஆப்பிள் மருத்துவரைத் தூர வைக்கும்' என்ற சொலவடையின் மூலம் என் பெருமையை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இதய நோய், எடைக் குறைப்பு, மகப்பேறின்மை, பல் வலி, மச்சம் மறைவு, புற்றுநோய், நீரிழிவு, வாய் துர்நாற்றம், அஜீரணம், தோல் நோய்கள் ஆகியவற்றிற்கு அற்புத நிவாரணி நான்தான்.  

ஆப்பிள் உங்கள் நினைவாற்றலை மிக வேகமாக அதிகரிக்க உதவும். குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமா? ஆப்பிளில்  அதிக அளவில் போரான் உள்ளது. இது மூளையின் செயல்பாட்டைத் தூண்டி, உங்கள் மனதை எப்போதும் விழிப்புணர்வுடனும், உடலை புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.

அது மட்டுமா குழந்தைகளே... என் பழத் தோலில் குர்செடின்,  ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் காணப்படுகின்றன. இதில் "பெக்டின்' எனப்படும் கரையக்கூடிய நார் உள்ளது. இது உங்கள் உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருள்கள் அல்செய்மர்ஸ், பார்கின்சன் நோய்களிலிருந்து மூளையைப் பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருள்கள் இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச் சக்தி உடையவை என்பதால் நரம்பு பாதிப்பிலிருந்து உங்களைக் காக்கின்றன. 

ஆப்பிள் தண்ணீரில் மிதக்கும். இதற்குக் காரணம், ஆப்பிள்களில் தண்ணீர் இருப்பதோடு, 25% காற்றும் இருக்கிறது. உலகின் மிக விலை உயர்ந்த ஆப்பிளின் பெயர் "செக்காய் இச்சி' ஆகும்.  "செக்காய் இச்சி' என்றால், ஜப்பானிய மொழியில் "உலகின் நம்பர் ஒன்' என்று பொருள். எனது ஆயுட்காலம் சுமார் 100 ஆண்டுகள்.  உங்களுக்குப் பசியும், சுவையும் உள்ளவரை நானும் உங்களுடனேயே இருப்பேன். 

மிக்க நன்றி குழந்தைகளே! மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com