மரங்களின் வரங்கள்!: யானையின் பலம் - மரசுரைக்காய் மரம்

நான் தான் மரசுரைக்காய் பேசுகிறேன். எனது தாவரவியல் கிகேலிய ஆஃபிரிக்கான என்பதாகும்.
மரங்களின் வரங்கள்!: யானையின் பலம் - மரசுரைக்காய் மரம்


குழந்தைகளே நலமா,
நான் தான் மரசுரைக்காய் பேசுகிறேன். எனது தாவரவியல் கிகேலிய ஆஃபிரிக்கான என்பதாகும். நான் பிக்னானியாசியேக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாயகம் ஆப்பிரிக்கா. நான் கென்யா, எரித்திரியா, சாட் தெற்கு முதல் வடக்கு தென்னாப்பிரிக்கா, செனிகல் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் அதிகமா காணப்படறேன்.

எனக்கு யானை பிடுகு மரம், தோட்டா மரம் என்ற வேறு பெயர்களுமிருக்கு. நான் ஆலமரம் போல் பரந்து விரிந்து வளர்ந்து, குளிர்ச்சி நிறைந்து உங்களுக்கு நிழல் கொடுப்பேன். நான் ஒரு அரிய மரமாவேன் குழந்தைகளே. அழிந்து வரும் மரங்கள் பட்டியலில் நானும் இருக்கேன். குழந்தைகளா, என்ன நீங்க பார்க்க ஆசைப்பட்டீங்கனா தேனி மாவட்டம், போடி தாலுகாவிலுள்ள ஏல விவசாயிகள் சங்க கல்லூரிக்கு போனா என்னை அங்கே பார்க்கலாம்.

நான் மிக வேகமாக 66 அடி வரை கூட வளருவேன். அதோட என் நண்பன் ஆலமரம் போல மிக பிரமாண்டமா இருப்பேன். என் மரத்தின் விழுதுகளில் சரம் சரமா பூக்கள் பூத்துத் தொங்கும். அது எப்படி இருக்கும் தெரியுமா குழந்தைகளா, திருக்கோவில்களில் இறைவனுக்கு முன் தொங்கும் சரவிளக்கு போல மிக அழகா இருக்கும். என் மரத்தில் விளையும் காயின் பெயர் சுசேஞ் அதாவது மர சுரைக்காய். இந்தக் காய் விஷதன்மைக் கொண்டது. ஆனாலும், பாருங்க குழந்தைகளே, என் காயை ஆராய்ச்சி மருத்துவர்கள் தோல் சம்பந்தபட்ட நோய்களுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தறாங்க.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட போது, நான் எங்கும் செழித்தோங்கி வளர்ந்திருந்தேனாம். அப்போ, என் விதைகளை துப்பாக்கிக் குண்டுகளாகப் பயன்படுத்தி இருக்காங்க. என் மரத்தின் காய்கள் 1 முதல் 2 அடி நீளம் வரை வளரும். அதன் எடை சுமார் 7 முதல் 10 கிலோ வரை இருக்கும். இந்த பலம் நிறைந்த காய்களை யாராவது துப்பாக்கியால் சுட்டால் எதிர்திசையில் அந்த குண்டு வராது. அப்படியே நச்சுன்னு பிடிச்சுக்கும். அவ்வளவு வலிமையான ஓடுகளைக் கொண்டது என் காய். என் காய்களை குடைந்தெடுத்து சுத்தமாக்கி பல வடிவங்களில் நீர் நிரப்பும் தொட்டியாகக் கூட பயன்படுத்தலாம்.

என் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும், வாசனை நிறம்பியது. பறவைகள் என்னைத் தேடி வருவாங்க. குறிப்பாக, வெளவால்களுக்கு என் பூக்களின் வாசம் மிகவும் பிடிக்கும். அதனால், மகரந்த சேர்க்கைக்கு வெளவால்கள் மட்டுமே உதவுறாங்க. வெளவால்களும் இப்போ அழிந்து வருவதால், என் மரத்தில் மகரந்த சேர்க்கை குறைஞ்சிக்கிட்டே இருக்குன்னு சொல்றாங்க. என் பழங்களை பாலூட்டிகள் குறிப்பாக யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், நீர்யானைகள், குரங்குகள், வாலில்லா குரங்குகள் எனப்படும் பபூன்கள், முள்ளம்பன்றிகள் விரும்பி சாப்பிடுவாங்க. மாடுகள் பூட்டும் நுகத்தடி, எண்ணெய் செக்குகள் செய்ய நான் பெரிதும் பயன்படுவேன்.

நான் மழைக் காலங்களில் மிகவும் பசுமையாக இருப்பேன். வறட்சிக் காலங்களில் என் இலைகள் உதிர்ந்து மண்ணுக்குத் தழை உரமாகும். குழந்தைகளா, என்னை சாலையோரங்களில் நீங்க வளர்த்தால் உங்களுக்கு நிறைய நிழல் தந்து சுற்றுச்சூலலைக் காப்பேன். ஆனால், என் மரத்தின் கீழ் வாகனங்களை நிறுத்தக் கூடாது. ஏன்னா, என் காய் அந்த வாகனத்தின் மீது விழுந்தால் அந்த வாகனம் சேதமாகி விடும். குழந்தைகளா, மனிதம் வளர்க்கும் மரம் உங்களின் முதல் நண்பன். மரங்களால் மனித குலத்திற்கு எந்த சேதாரமும் இல்லை. மரங்கள் காக்கும் தொழிலை செய்து வருகின்றன. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com