அரங்கம்: நேர்மை

கமலா ஒரு கேரி பேக் டி வி அருகில் இருப்பதைப் பார்த்து, அதை குப்பைக் கூடையில் போட்டு எடுத்துச் செல்ல குப்பை வண்டி பாப்பம்மாள் அதை வாங்கி வண்டியில் கவிழ்த்து, காலி கூடையைத் தருகிறார்
அரங்கம்: நேர்மை


காட்சி - 1
இடம் - இல்லம்
மாந்தர் - துப்புரவுத் தொழிலாளி பாப்பம்மாள்
இல்லத்தில், அப்பா கோபாலன்,அம்மா கமலா
குப்பை சேகரிக்கும் பாப்பம்மாள், விசில் அடிக்கிறார்

பாப்பம்மாள் - அம்மா குப்பை.. குப்பை கோபாலன் - கமலா குப்பை வண்டி வருது டைனிங் டேபிளில் பேப்பர் கவரில் காய்ந்த் பூ, இன்னும் பழைய பேப்பர் பில் ரசீதுகள் இருக்கு... அதைப் போடு...
இன்னும் ஒரு கேரி பேகில் பழைய பிளாஸ்டிக், தகரம், டானிக், மருந்து காலி பாட்டில்கள் கட்டி வச்சிருக்கேன். அதையும் போட்டு விடு.

(கமலா ஒரு கேரி பேக் டி வி அருகில் இருப்பதைப் பார்த்து, அதை குப்பைக் கூடையில் போட்டு எடுத்துச் செல்ல குப்பை வண்டி பாப்பம்மாள் அதை வாங்கி வண்டியில் கவிழ்த்து, காலி கூடையைத் தருகிறார்)

கமலா - இந்தக் குப்பையைக் கொட்டறதுக்கு என்ன பாடு பட வேண்டி இருக்கு.
கோபாலன் - சலிச்சுக்காதே கமலா. அந்தக் குப்பை வண்டி பெண்மணி ஒவ்வொரு வீடா நின்னு வாங்கி எடுத்துப் போய் ஒரு இடத்தில் கொட்டி மக்கும் மக்கா தன்மை பார்த்து பிரிச்சு வரும் லாரியில் ஏற்றி விடும் வரை அவருக்கு வேலை. கடினமான பணி.

காட்சி 2
இடம் - குப்பை பிரிக்கும் இடம்
மாந்தர் - பாப்பம்மாள், லாரி டிரைவர் சுந்தரம் - லாரியில் குப்பை ஏற்றும் பணியாள், மாணிக்கம்.

(குப்பைகளைக் கொட்டி பிரிக்கிறார் பாப்பம்மாள் அப்போது கோபாலன் வீட்டு கேரி பேக்கைக் கவிழ்த்துக் கொட்ட அதில் தங்க நகைகள் பணம் மூவாயிரம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.)

பாப்பாம்மாள் - டிரைவர் அண்ணே... கொஞ்சம் சீக்கிரம் வாங்க.. இதைப் பாருங்க... யாருதுன்னு தெரியலே. நகை பணம் ஒரு பையில் இருக்கு.
(டிரைவர் சுந்தரமும் மாணிக்கமும் வண்டியில் இருந்து இறங்கி வந்து கவரைப் பார்க்க)

சுந்தரம் - ஆமாம், பாப்பம்மா..! தங்க நகை தான். (பணத்தை எண்ணி) மூவாயிரத்து நானூறு இருக்கு. யாரோ தவறுதலா குப்பை என எண்ணி உன்னிடம் போட்டு இருக்கணும்..!
பாப்பம்மாள் - ஒவ்வொரு வீடா போய் கேட்க முடியுமா, எப்படி உரியவர்களிடம் சேர்ப்பிக்கிறது மாணிக்கம்.
சுந்தரம் - நீயாக எதுவும் செய்யாதே, பிரச்சினையில் மாட்டிப்பே.. போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைச்சிடு.
நாங்க வண்டியில் போவணும் வரட்டுமா ?
(லாரியை ஓட்டிச் சென்று விடுகின்றனர்)

காட்சி - 3
இடம் - காவல் நிலையம்
மாந்தர் - இன்ஸ்பெக்டர், காவலர்கள், பாப்பம்மாள்
இன்ஸ்பெக்டர் - பாப்பம்மா.. இந்த கவர் யார் வீட்டில் இருந்து கிடைச்சுதுன்னு ஞாபகம் இல்லியா ?

பாப்பம்மாள் - அந்த நகரில் மொத்தம் நானூறு வீடுங்க இருக்கு. எதுன்னு சொல்லத் தெரியலீங்க.
இன்ஸ்பெக்டர் - (யோசிக்கிறார்) நகை 20 பவுன் இருக்கும்..ஒரு ஏழு லட்சம் மதிப்பு வரும். எப்படியும் தொலைச்சவங்க இங்கே புகார் தர வருவாங்க இருக்கட்டும்.
ஏட்டு கண்ணாயிரம் - ஐயா.. அந்த கவரில் சின்னதா ஒரு துண்டு சீட்டு இருக்கு. பாருங்க அடியில்.
இன்ஸ்பெக்டர் - ஆமாம் அது என் கண்ணுக்குத் தெரியலியே.. (எடுத்துப் பார்க்கிறார்)
ம்..பாதி கிழிஞ்சு இருக்கு. இது ஏதோ ஒரு பாங்கில் அடமானம் வச்சு மீட்ட நகை. மீதிப் பணமும் மீட்ட நகையையும் உரியவர் தவறுதலா குப்பையோட சேர்த்திட்டார். இந்த பாதி சீட்டில் பேங்க் பெயர் பகுதி மட்டும் இல்லே.

(ஏட்டு அதை வாங்கி திருப்பிப் பார்க்கிறார் பின் பக்கம் ரப்பர் ஸ்டாம்பு சீல் தெளிவில்லாமல் இருக்கிறது கூர்ந்து கவனித்து)

ஏட்டு - சார் பின் பக்க ரப்பர் ஸ்டாம்பில் பஜார் கிளை என்கிற சீல் எழுத்துக்கள் தெரியுது. பஜார் கிளை வங்கிக்குப் போனால் விவரம் தெரியும்.
இன்ஸ்பெக்டர் - சரிதான்.. நம்ம ஊரில் இருக்கிற வங்கிகள் கிளை பூரா பஜார் தெருவில் தான் இருக்கு. பார்ப்போம்...சரி பாப்பம்மா உன் நேர்மையைப் பாராட்டறேன். உடையவர்கள் வந்தா கூப்பிடறேன் சித்தே வந்திட்டுப் போ.. எங்கே வீடு உனக்கு..?
(பாப்பம்மாள் விலாசம் சொல்ல ஏட்டு குறித்துக் கொள்கிறார்)

காட்சி 4
அன்று மதியம்
இடம் - கோபாலன் இல்லம்
மாந்தர் - கோபாலன், கமலா


கோபாலன் - கமலா பாங்கில் இருந்து நகை மீட்டது மிச்ச பணம் இதெல்லாம் ஒரு கவரில் போட்டு உன்னிடம் தந்தேனே.. எடுத்து வா. பணத்தையும் நகையையும் பிரிக்கணும். நகையைப் பீரோவில் வை.
கமலா - என்னிடம் தரலியே.. எங்கே வச்சீங்க ?
கோபாலன் - டைனிங் டேபிளில் தானே
வச்சேன்.
குப்பை போடறேன்னு அந்த கவரையும் போட்டு விட்டியா.?
கமலா - நீங்க சொன்னீங்களேன்னு பேப்பர் பாட்டில் கவருடன் அதையும் போட்டு விட்டேங்க. இப்ப என்ன பண்றது ? குப்பை யோட போயிடுச்சா ?
கோபாலன் - குப்பைக்கார அம்மா இனி காலையில் தானே வருவாங்க. போய் காவல் நிலையைத்தில் சொல்றேன். அவங்க குப்பை லாரி கிடங்கில் கொட்டும் இடத்தில் ஆட்களிடம் தேடச் சொல்லுவாங்க. அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும்
 

காட்சி - 5
(இருவரும் காவல் நிலையம் விரைகின்றனர்
இன்ஸ்பெக்டரை வணங்கி விவரம் சொல்கிறார் கோபாலன்)

கோபாலன் - பாங்கில் இருந்து நகை மீட்டது, மிச்சம் மூவாயிரத்து நானூறு பணம் அதில் இருந்தது சார்.
இன்ஸ்பெக்டர் - ம்... எந்த பாங்க் ?
கோபாலன் - கூட்டுறவு வங்கி பஜார் கிளை சார்.
துண்டு சீட்டை காட்ட - இது தான் அந்த பேங்க் நகை பாக்கெட்டில் எடை குறிச்ச சீட்டு.

இன்ஸ்பெக்டர் - ஏட்டு போயி பாப்பம்மாளைக் கூப்பிட்டு வா.
(ஏட்டு போய் அழைத்து வர)

பாப்பம்மாள் - சார் ஞாபகம் வந்திட்டு. இந்த கவரை இந்த அம்மாதான் தனியா கொண்டுவந்து தந்து உள்ளே உடைஞ்ச மருந்து கண்ணாடி பாட்டில் இருக்கு. கையைக் கிழிச்சுக்காதேன்னு சொன்னாங்க.
(கவருடன் நகை பணம் இவற்றை ஒப்படைக்க கோபாலன் நெகிழ்ச்சியுடன் பெறுகிறார்)

கோபாலன் - இன்ஸ்பெக்டர் சார் நாணயம் மிக்க பாப்பாம்மாவுக்கு ஏதாவது அன்பளிப்பு செய்ய நினைக்கிறேன்.
பாப்பாம்மாள் - (நடுங்கியபடி) - ஐயய்யோ வேணாமுங்க. நான் போறேன்.
இன்ஸ்பெக்டர் -பணம் வேண்டாம். ஏதாவது பொருளா கொடுங்க.. உங்க ஞாபகமா வச்சுக்கட்டும்.
கோபாலன் - சொல்லுங்க பாப்பம்மா.. என்ன வேணும்? கேளுங்க. வாங்கித் தர்றேன். இல்லாவிட்டால் எங்களுக்கு பெரும் மனக்குறையா இருக்கும்.
பாப்பம்மாள் - பொருள் எல்லாம் வேணாங்க. நான் தனிக் கட்டை. புருஷன் காலமாயிட்டாரு. வந்து, எனக்கு கால்கிலோ முந்திரி அல்வா வாங்கித் தாங்க. சின்ன வயசில் இருந்து கண்ணால் பார்த்தது தான். சாப்பிட்டதே இல்லை..அது தான் ரொம்ப நாள் ஆசை எனக்கு.
கோபாலன் - இதோ வந்திடறேன் இருங்க.
(அருகில் இருக்கும் மிகப் பெரிய ஸ்வீட் ஸ்டாலுக்கு சென்று இரண்டு கிலோ முந்திரி அல்வாவை ஒரு புது டிபன் பாக்ஸில் வைத்து எடுத்து வந்து
இன்ஸ்பெக்டர் கையில் தந்து பாப்பம்மாளிடம் தர)

இன்ஸ்பெக்டர் - ம் வீட்டுக்கு எடுத்துப் போய் சாப்பிடு.. பாப்பம்மா.
பாப்பம்மாள் - எனக்கு கூச்சமா இருக்கு. இங்கேயே சாப்பிடறேன். எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கிட்டா நானும் சாப்பிடுவேன்.
இன்ஸ்பெக்டர் -ம்..அப்படியா ? ஏட்டய்யா.. ஆரம்பிச்சு வைங்க.

ஏட்டு எல்லோருக்கும் வழங்க ஆனந்தமாக பாப்பம்மாள் சாப்பிடுவதைப் பார்க்கும் கமலா கண்ணில் கண்ணீர் துளிர்க்கிறது.

(எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க எதேச்சையாக அங்கு வந்த பத்திரிக்கை நிருபர் ஒருவர் மறு நாள் புகைப் படத்துடன் செய்தி வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகி கோடிக் கணக்கானோர் கவனத்தை ஈர்க்கிறது).

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com