மரங்களின் வரங்கள்!: சிங்கங்களும் அஞ்சி ஓடும்  - நஞ்சுண்டா  மரம்

நான்தான் நஞ்சுண்டா மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பாலனிட்டிஸ் ராக்ஸ்பர்க் என்பதாகும்.
மரங்களின் வரங்கள்!: சிங்கங்களும் அஞ்சி ஓடும்  - நஞ்சுண்டா  மரம்


குழந்தைகளே நலமா,

நான்தான் நஞ்சுண்டா மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பாலனிட்டிஸ் ராக்ஸ்பர்க் என்பதாகும்.  நான் சைகோபில்லேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை ஆங்கிலத்தில் டெசர்ட் டேட் ட்ரீ என்று அன்பா அழைப்பாங்க. எனக்கு நஞ்சுகண்டா மரம் என்ற வேறு பெயரும் இருக்கு.  நான் வறண்ட நிலத்தில் அதிகமா வளருவதால் அப்படி அழைக்கிறாங்க போலிருக்கு. ஆனால், என் மனசு அப்படியில்லை குழந்தைகளே.  என் தாயகம் ஆப்பிரிக்கா. நானும் உங்களுக்கு பல விதங்களில் பயன்படுகிறேன். இந்தியாவிலுள்ள பாரம்பரியம் மிக்க மரங்களுள் நானும் ஒருவன். 

நான் இராஜஸ்தான், மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும், மணல் பிரதேசங்களிலும் அதிகமா காணப்படறேன். நான் ஒரு முள் மரமாவேன்.  நானும் வீசும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்துவேன்.  சரஸ்வதி நதிக் கரைக்கு நான் அதிகம் வளம் சேர்த்ததாக மகாபாரத்தில் குறிப்புகள் இருப்பதாக சொல்றாங்க. எனக்குப் பெருமையா இருக்கு.  என் பெயரைக் கண்டு நீங்கள் அச்சப்பட தேவையில்லை.  நஞ்சுண்ட சிவன் திருநீலகண்டனாகி அனைவரையும் காக்கவில்லையா?  என் இலை, பூ, வேர் அனைத்தும் கொண்டது.  சொல்லட்டுமா? 

என் இலையை வெந்நீரிலிட்டு கொதிக்க வைத்து வாய்க் கொப்பளித்தால் வாய்ப் புண் விட்டால் போதும் என்று ஓடி விடும்.  சொறி, சிரங்கு, தேமல், படை ஆகிய தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என் இலையை மசிய அரைத்து, அதன் மீது தடவி வந்தால், அவை இருந்த அடிச்சுவடே  தெரியாது.   என் இலைகளையும், பூக்களையும் கலந்து கஷயமாக்கி அருந்தினால், இருமல், கல்லீரல், மண்ணீரல் தொடர்பான நோய்கள், தூக்கம் தொடர்பான பிரச்னைகள் தீரும். 

ஒரு காலத்தில் என் இலைகளும்,  இலைக் குருத்துகளும்தான் ஆப்பிரிக்க நாட்டு மக்களின் பஞ்ச காலத்தின் போது உணவாக இருந்ததாம்.   அக்கால மக்கள் கால்நடைகளைக் காக்க என் மரத்தின் கிளைகளை வெட்டி அரணாக அமைப்பார்களாம்.  இதைக் கண்டு சிங்கங்கள் கூட  என் மீது இருக்கும் முட்களைக் கண்டு காத தூரம் ஓடுமாம். 

என் பழம் இனிப்பும் கசப்பும் உடையதாக இருக்கும். என் பழத்தை நொதிக்கச் செய்து பானங்கள் தயாரிக்கிறாங்க.  என் இலைகளில் கால்நடைகளுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் இருப்பதால் கால்நடைகள் விரும்பி உண்பாங்க. என் விதையிலிருந்து எண்ணெய், பிண்ணாக்கு தயாரிக்கிறாங்க.  இந்த எண்ணெய் சோப்புத் தயாரிக்க பெருமளவில் பயன்படுகிறது.  என் மரத்தின் பட்டைகளை கூழாக்கி காகிதம் தயாரிக்கலாம்.  நான் வலுவானவன், அதே சமயத்தில் எடை குறைந்தவன் என்பதால் துப்பாக்கிக் கட்டை,  வலுவான கைத்தடி, உலக்கை, மர உரல், நீங்கள் விளையாட தேவையான பொம்மைகள் செய்ய நான் பெரிதும் உதவுவேன். காய்ந்த என் இலைகள், கிளைகள், ஏழை, எளிய மக்களுக்கு அடுப்பெரிக்க பெரிதும் உதவுகின்றன. 

நாங்கள் உங்களுக்கு உண்ண காய், கனிகளைக் கொடுக்கிறோம்.  அண்டி வரும்  உயிரினங்களுக்கு இல்லை என்று மறுக்காது தங்க இடம்  கொடுத்து உதவுகிறோம். நாங்கள் உதிர்க்கும் இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.  என் தமிழ் ஆண்டு துன்முகி.   நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com