கருவூலம்!: மிசோராம் மாநிலம் பற்றி அறிவோமா?

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் மிசோராமும் ஒன்று. இம்மாநிலத்தின் தலைநகரம் அய்சால்.
கருவூலம்!: மிசோராம் மாநிலம் பற்றி அறிவோமா?

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் மிசோராமும் ஒன்று. இம்மாநிலத்தின் தலைநகரம் அய்சால். இந்த மாநிலத்தை திரிபுரா, அசாம், மணிப்பூர், மாநிலங்களும், மற்ரும் அண்டைநாடுகளான வங்காள தேசம், மியான்மார் நாடுகளும் சூழ்ந்துள்ளன. 

21,081 ச.கி.மீ. பரப்பளவுள்ள இம்மாநிலம் 11 மாவட்டங்களைக் கொண்டது. மிசோராமின் மக்கள் தொகை சுமார் 12 லட்சம் மட்டுமே.  இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநிலம் இது. மிசோ பழங்குடி இன மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர். 93 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். மிசோரம் 40 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியும் கொண்டது. ஆங்கில மொழியே ஆட்சி மொழி. மற்றும் ஹிந்தி, மிசோ மொழிகளும் பேசப்படுகின்றன. 

மிசோரம் இரண்டு புவித்தட்டுகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. அதனால் பூகம்பம் ஏற்படும வாய்ப்பு உள்ளது. மடிப்பு, மடிப்பாக 21 மலைத்தொடர்கள், ஆறுகள், ஏரிகள் கொண்ட மாநிலம் இது. இம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 91 % காடுகளே! 

மிசோ மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரம்!

காலங்காலமாக விவசாயமே இவர்களது முக்கியத் தொழில். மிசோ இனத்தவரின் திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் போன்றவை விவசாய அறுவடைக்காலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பருவங்களை மையமாகக் கொண்டுள்ளது.

சாப்சார் குட்திருவிழா!

இது மிசோரம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழா. வசந்தகாலம் வரும்போது நடனமும், பாடல்களும் கொண்ட  இந்த வண்ணமயமான திருவிழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

மிம்குட்!

மிசோரமின் அறுவடைக் கால பண்டிகை இது. இவ்விழாவின்போது இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் வழக்கமும் உள்ளது.  

பாவ்ல் குட்!

இது இரண்டுநாள் திரிவிழாவாகும். அறுவடை மற்றும் கலாசார விழா இது. செராவ் எனப்படும் ஒரு பாரம்பரிய நடனம் இம்மக்களின் முக்கியமான கலை வடிவமாக உள்ளது. மூங்கில் கொம்புகளை ஏந்தியபடி நுணுக்கமான ஒத்திசைவுடன் இந்த நடனம் ஆடப்படுகிறது.

முர்லன் தேசியப் பூங்கா

இண்டோ மியான்மர் எல்லையில் சபோ மாவட்டத்தில் 200 ச.கி.மீ. பரப்பளவில் இப்பூங்கா உள்ளது. நீரோடைகள் இவ்வனப்பகுதியில் உள்ளன. பாலூட்டிஇனங்களும், பறவையினங்களும் உள்ளன. இக்காடுகள் மிக அடர்த்தியானவை. காம்புய் என்ற இந்தியாவின் மிகப் பெரிய செங்குத்துப் பாறை இங்கு உள்ளது. சில இடங்களில் சூரிய ஒளி 1 % மட்டுமே இருப்பதால் "திரும்ப முடியாத காடு' என்று இவ்வனப்பகுதியை அழைப்பர்.

லெங்தெங் காட்டுயிர் சரணாலயம்

இச்சரணாலயம் சம்பாய் மாவட்டத்தில் மியான்மர் உடனான இந்திய எல்லைக்கு அருகில் 12000 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 2001 - ஆம் ஆண்டு இப்பகுதி காட்டுயிர் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இப்பகுதியில் ஏராளமான மலை முகடுகள் உள்ளன. புலி, கடமான், மான்ஸ அணில் கருங்கரடி, செம்முகக் குரங்கு முதலான வனவிலங்குகள் இங்குள்ளன. அரிய வகைப் பறவையினங்களும் ஏராளமாக இச்சரணாலயத்தில் உள்ளன.

ஜசெர்லுய் பி அணை!

இந்த அணை கோலாசிப் மாவட்டத்தில் உள்ளது. செர்லுய் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை மூலம் 12 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அருகில் காடும் ஏரியும் இருப்பதால் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக இருக்கிறது.

வாண்டாங் அருவி!

சர்ச்சிப் மாவட்டத்தில் இந்த அருவி உள்ளது. 229 மீ. உயரத்திலிருந்து வான்வா நதி இரண்டு அடுக்கு அருவியாக கீழிறங்குகிறது. மாநிலத்தின் மிக உயரமான நீர்வீழ்ச்சியும், நாட்டின் 13 - ஆவது  மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியும் இதுவே. காடுகளும் இயற்கை எழிலும் சூழ்ந்த இடம்.

பைராவி அணை!

கோலா சிப் மாவட்டத்தில் பைரா வி என்ற கிராமத்தில் தலாங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 80 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட  மின்உற்பத்தி நிலையம் இங்குள்ளது. 

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com