கருவூலம்: மிசோராம் மாநிலம்

இந்த தேசியப் பூங்கா மியான்மர் எல்லையை ஒட்டிய லாந்தலாய் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கருவூலம்: மிசோராம் மாநிலம்

சென்ற இதழ் தொடர்ச்சி.....

பாங்புய் தேசியப் பூங்கா!

இந்த தேசியப் பூங்கா மியான்மர் எல்லையை ஒட்டிய லாந்தலாய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வனப்பகுதியில் பாங்புய் மலைச்சிகரத்தில் இப்பூங்கா உள்ளது. இங்கு மலையாடு, பெரிய தேவாங்கு, புலி, சிறுத்தை உள்ளிட்ட பலவகையான மிருகங்களும், பல்வேறு பறவையினங்களும் காணப்படுகின்றன.

பாங்புய் மலைச்சிகரம்!

மிசோரத்தின் உயரமான மலைச்சிகரம் இது. நீலமலை என்றும் அழைக்கப்படுகிறது. 2157 மீட்டர் உயரம் கொண்டது. 1992 - ஆம் ஆண்டு முதல் இந்த மலைச்சிகரம் பாங்புய் தேசியப் பூங்காவின் நிர்வாக எல்லைக்குள் உள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான ஆறு மாத காலத்திற்கு மட்டும் மலையைக் கண்டு களிக்க அனுமதி உண்டு. மலையேற்றத்திற்கு பிரபலமான இடம் இது.

துய்ரியால் அணை!

அய்சால் மாவட்டத்தில் துய்ரியால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது இந்த அணை. 60 மெகாவாட் நீர்மின்சக்தி இவ்வணை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வான்சாவ்

புபன் கிராமத்திற்கு அருகிலுள்ள சாங்பில்ட் வாங்கின் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலைவாசஸ்தலம் இது. ஐஸ்வாலில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 1721 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

தம்பா புலிகள் காப்பகம்

இந்த சரணாலயம் லுஷாய் மலைகளில் சுமார் 500 ச.கி.மீ. பரப்பளவில் 800 முதல் 1100 மீட்டர் உயரத்தில் உள்ளது. 1994 - ஆம் ஆண்டு இவ்வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சரணாலயம் செங்குத்தான மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், காட்டு நீரோடைகள் என செழுமையான வனப்பகுதியாக உள்ளது.

இங்கு 1994 - ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்போது இப்பகுதியில் புலி எதுவும் காணப்படவில்லை. இச்சரணாலயத்தில் இந்திய சிறுத்தை, கரடி, குரைக்கும் மான், காட்டுப் பன்றி, ஹூலாக் கிப்பன், அணில் குரங்கு, சாம்பல் லாங்கூர், ரீசஸ் மெக்காக் குரங்குகள்என பல்வேறு விலங்கினங்கள் உள்ளன. இவ்வனப்பகுதிக்குள் யாரும் எளிதில் செல்ல இயலாது.விலங்குகளைப் பார்க்க விரும்பினால் காட்டுக்குள் நடந்துதான் செல்ல வேண்டும்.

மிசோரம் மாநில அருங்காட்சியகம்!

இந்த அருங்காட்சியகம் ஐஸ்வால் நகரில் உள்ளது. மிசோரமின் கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றைச் சித்தரிக்கும் 2500 க்கும் மேற்பட்ட பொருள்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

லுவாங் முவல் கைவினைப்பொருட்கள் மையம்!

இங்கு மிசோரம் பழங்குடி மக்களின் பல வகையான கைவினைக் கலைப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

குவாங்லங் வனவிலங்கு சரணாலயம்!

இந்த சரணாலயம் 35 ச . கி . மீ . பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறு வனவிலங்குகளும், பறவையினங்களும், இங்கு காணக்கிடைக்கின்றன.

ரிஹ் தில் ஏரி!

மிசோரம் மற்றும் மியான்மரின் எல்லையில் அமைந்துள்ள இதய வடிவிலான ஏரியாகும். 1600 மீட்டர் நீளமும், 800 மீட்டர் அகலும் உள்ளது. துணை ஆணையர் அனுமதி பெற்று இந்த ஏரியைப் பார்வையிடலாம்.

துர்ட்லாங்!

ஐய்சால் நகரின் வடபகுதியில் அமைந்திருக்கும் பாறைப்பாங்கான மலைத்தொடர் இது. மலையேற்றத்திற்குச் சிறந்த இடம்.

லம்சியால் புக்!

சம்பை மாவட்டத்தின் ஃபர்கான் கிராமத்தின் அருகே இந்தக் குகை அமைந்துள்ளது. மிசோரமின் வீரத்திற்குச் சான்றாக இக்குகையை மதிக்கின்றனர். இக்குகையைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

லியான் சியாரி லுங்லெந்தாங் - சம்பை!

மதிமயக்கும் இயற்கை எழில் வாய்ந்த இந்த மலைமுகடு சம்பை மாவட்டத்தில் உள்ளது.

குங்காவர்ஹி புக்!

மிசோரத்தில் உள்ள மிகப்பெரிய குகைகளின் இதுவும் ஒன்று.

மான் பூங்கா - தெஞ்ஜாவ்ல்!

தெஞ்சாவ்ல் ஊர் ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்புதான் இங்கு மனிதர்கள் வாழத் தொடங்கினார்கள். இங்கு ஏராளமான மான்கள் காணப்படுகின்றன. மான்களைப் பாதுகாப்பதற்காகவே இப்பூங்கா அமைக்கப்பட்டது.

முரா புக்!

சம்பா நகரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஜோட் கிராமத்தில் முரா புக் அமைந்துள்ளது. இங்கு ஆறு குகைகள் உள்ளன. முன்காலத்தில் இக்குகைகள் மனிதர்களின் மறைவிடமாக இருந்தன.

துய்ரிஹியாவு அருவி!

செர்ச்சிப் மாவட்டத்தில் இந்த அருவி உள்ளது. மிசோரம் மாநிலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கண்கவர்அருவி இது. இந்த அருவியின் தனிச்சிறப்பு என்னவென்றால் நீர்வீழ்ச்சியின் பின்னால் குகைகள் உள்ளன. அதனால் பின்னால் இருந்தும் நீர்வீழ்ச்சியைக் காணலாம்.

ஹிமுய்ஃபங் த்லாங்!

இந்த மலைவாசஸ்தலம்ஐஸ்வாலில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்விடம் 1619 மீட்டர் உயரத்தில் காடுகளால் சூழப்பட்டுள்ளது. அழகிய இயற்கை எழில் கொண்ட மலைவாசஸ்தலம்.

புவான்வார் புக்!

இந்தக் குகை புவான்வார் கிளிஃப் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு இயற்கை குகை ஆகும். இது சாகச விளையாட்டுக்குப் பிரபலமானது.

ரெய்க் ட்லாங்!

ஐஸ்வாலில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் 1548 மீட்டர் உயரத்தில் இந்த மலைவாசஸ்தலம் உள்ளது.

லுங்லே நகரம்!

மிசோரமின் இரண்டாவது பெரிய நகரம். லுங்லே நகரம் மாநில தலைநகரைவிட உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கம்பீரமான மலைகள், பசுமையான சமவெளிகள் மற்றும் வளமான கலாசாரம் என சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க இங்கு நிறைய உள்ளது.

அரிதான தாவர வகைகள், வித்தியாசமான உயிரினங்கள், பிரமிக்க வைக்கும் மூங்கில் காடுகள், சலசலவென விழும் அருவிகள், பசுமையான வயல்கள் என்று காணும் இடமெல்லாம் இயற்கையின் ரம்மியமான காட்சிகளைக் கொண்டது மிசோரம்!

(நிறைவு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com