அரியதும் பெரியதும்!

தகடூர் மன்னன் அதியமான் காட்சிக்கு எளியவன். கடுஞ்சொல் அறியாதவன். வள்ளல்! பல போர்களில் வெற்றி கண்டவன். ஆன்றோர் பலர் அதியமானின் அவையில் இருந்தார்கள்.
அரியதும் பெரியதும்!

தகடூர் மன்னன் அதியமான் காட்சிக்கு எளியவன். கடுஞ்சொல் அறியாதவன். வள்ளல்! பல போர்களில் வெற்றி கண்டவன். ஆன்றோர் பலர் அதியமானின் அவையில் இருந்தார்கள்.

ஒருநாள் அறிவிலும், அனுபவத்திலும் சிறந்த ஒரு முதியவர் அதியமானின் அவைக்கு வந்தார். அவரை வரவேற்று உபசரித்தான் மன்னன். அவரிடம் ஆசி வேண்டினான். முதியவரும் மன்னனை மனதார வாழ்த்தினார்.

பிறகு மன்னனிடம், ""அதோ! அங்கு தெரியும் குதிரைமலை முகட்டில் ஒரு அதிசய நெல்லிமரம் இருக்கிறது. அது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு நெல்லிக்கனியை மட்டுமே தரவல்லது! அந்த நெல்லிக் கனியை உண்பவர்கள் நெடுங்காலம் வாழ்வர்! ஆனால் அக்கனியைப் பறிப்பது அவ்வளவு எளிதானது அன்று! '' என்றார்.

அதியமான் அந்த மலைக்குச் சென்றான். முதியவர் கூறிய அந்த அதிசய நெல்லி மரத்தைக் கண்டான். அவர் கூறியது போலவே மலை முகட்டில் ஆபத்தான இடத்தில் அந்த மரம் இருந்தது. அதன் உச்சியில் அந்த ஒரு நெல்லிக் கனியும் இருந்தது! கடினமான முயற்சிக்குப் பிறகு மலை முகட்டில் இருந்த அந்த மரத்தில் ஏறி நெல்லிக்கனியைப் பறித்து வந்தான். உடனே அதை உண்ணாமல் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான் அதியமான்!

அவையோருக்கும் அதைக் காண்பித்து, ""அந்த முதியவர் காண்பித்த மரத்திலிருந்து இன்று இதை எடுத்து வந்தேன்!...'' என்று கூறினான். அவையோரும் அதைப் பாராட்டி, "" இது தங்களுக்கு உரியது! நீங்கள் இதை உண்டு நீண்ட நாள்கள் வாழ வேண்டுமென்பதே எங்கள் அனைவரின் விருப்பும்!'' என்றனர்.

அப்போது அரசவைக்குள் நுழைந்தார் தமிழ் மூதாட்டி ஒளவையார்! அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஒளவையைரைப் பார்த்ததும் அவர் தாள் பணிந்து வணங்கினான் அதியமான்! அவரை ஆசனத்தில் அமர்த்தினான். ஒளவையார் வெகுதூரத்திலிருந்து நடந்து வந்த காரணத்தால் களைப்பாகத் தோன்றினார்.
அதியமான் ஒரு தங்கத் தட்டைக் கொண்டுவரச் சொன்னான். அதில் அவன் பறித்த அந்த அதிய நெல்லிக்கனியை வைத்து, ""அன்னையே! இக்கனியை உண்பீர்!... களைத்திருக்கிறீர்கள்!'' என்று ஒளவையாரை வேண்டினான்.
அவையோர் அதிசயப்பட்டனர்.

ஒளவையாரும் அக்கனியை உண்டு களைப்பு நீங்கினார். அதன் ருசியில் மகிழ்ந்த ஒளவை, ""மன்னா!.... இக்கனியின் சுவை முக்கனியிலும் இல்லையே!.... இது எப்படிக் கிடைத்தது?'' என்று கேட்டார்.

அக்கனியைப் பற்றி முதியவர் கூறியதை ஒளவையிடம் கூறிவிட்டு, ""அன்னையே!....இதை உண்பவர் நெடுநாள் வாழ்வர்!.... அரிதான கனி இது! தாங்கள் தக்க நேரத்தில் வந்தீர்கள்!.... நான் இக்கனியை உண்டு நெடுநாள் வாழ்ந்து என்ன பயன்?.... தாங்கள் வாழ்ந்தால் தமிழ் செழிக்கும்!.... தங்கள் அறிவால் தமிழ் உலகம் பயன்பெறும்! தகுந்த நேரத்தில் தாங்கள் வந்தது நான் செய்த புண்ணியம்!'' என்றான் மன்னன்.

அதைக் கேட்ட ஒளவையார், அதியமானைப் பார்த்து, ""மன்னா!.... என்னே உன் கொடை உள்ளம்!....எத்தனையோ வள்ளல்களைப் பற்றி அறிந்திருக்கிறேன்! உனது செயல் எல்லாவற்றிலும் மேலானது! தன் உயிரினும் மேலாக தமிழை நேசித்த காரணத்தால் என்னை வாழ வைக்க விரும்புகிறாய்! இம்மண்ணும், விண்ணும் உள்ளவரை உன் புகழ் பேசப்படும்!'' என்று வாழ்த்தினார்.
ஒளவை கூறியபடியே தமிழ் மக்கள் நெஞ்சங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறான் வள்ளல் அதியமான்!

இக்கருத்தை "பெரியாரைத் துணைக்கோடல்' அதிகாரத்தில் வலியுறுத்துகிறது பின் வரும் குறள்!

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பொருள் : அறிவில் சிறந்த பெரியாரை மதித்துப் போற்றி தமக்குத் துணையாக, உறவினராகக் கொள்ளுதல் ஒருவர் பெற வேண்டிய அரிய பேறுகளில் எல்லாம் தலையாயது ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com