கருவூலம்: திரிபுரா மாநிலம்!

திரிபுரா வடகிழக்கு இந்தியாவின் மலைப்பாங்கான மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலா மாநகரமாகும்.
கருவூலம்: திரிபுரா மாநிலம்!


திரிபுரா வடகிழக்கு இந்தியாவின் மலைப்பாங்கான மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலா மாநகரமாகும். இம்மாநிலம் 10,491 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. நாட்டின் மூன்றாவது மிகச்சிறிய மாநிலம் இது. 2011 - ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தின் மக்கள் தொகை 3, 671, 032 ஆகும். இம்மாநிலம் நிர்வாக வசதிக்காக 8 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலம் 60 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தொகுதியும் கொண்டது.

திரிபுராவின் வரலாறு!

சுதந்திரத்திற்கு முன் திரிபுரா முடியாட்சி நாடாக இருந்தது. இம்முடியாட்சிக்கு எதிராக எழுந்த கண முக்தி பரிஷத் இயக்கம் முடியாட்சியை வீழ்த்தி நாட்டை இந்தியாவுடன் இணைத்தது.

திரிபுரா அதிகாரபூர்வமாக இந்தியாவின் ஒரு பகுதியாக அக்டோபர் 15, 1949 - இல் ஆனது. இது செப்டம்பர் 1 ஆம் நாள் 1956 - இல் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. பின்னர் திரிபுரா ஜனவரி 21 ஆம் நாள் 1972 - இல் ஒரு மாநிலமாக மாறியது.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது,பெருமளவு வங்காள இந்து மக்கள் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து திரிபுரா மாநிலத்தில் குடியேறினார்கள்.

திரிபுரா வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் அண்டை நாடான பங்களா தேஷால் சூழப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்களான அஸ்ஸாம் வடகிழக்கிலும், மிசோரம் கிழக்கிலும் அமைந்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் வடக்கிலிருந்து தெற்கு வரை போரோ முரா, அதாராமுரா, லாங்தரை, ஷகான், ஜம்பூஸ் முதலான ஐந்து மலைத்தொடர்கள் உள்ளன. திரிபுராவின் தலைநகரான அகர்தலா, மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது. மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கும் மேல் வனங்களாக உள்ளன. இதன் நில அமைப்பின் காரணமாக இங்கு பொருளாதார முன்னேற்றம் தடைபட்டுள்ளது.

மலைச்சாதியினரே அதிகம் வாழும் மாநிலம் இது. புவியியல் ரீதியாக நாட்டின் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை மட்டும்தான் நாட்டின் பிற பகுதிகளுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது.

இம்மாநிலத்தின் ஆட்சி மொழி வங்காளம். இந்தி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன.

அகர்தலா

மஹாராஜா கிருஷ்ண மாணிக்யா என்னும் ராஜ வம்சத்து மன்னர் தெற்குப் பகுதியில் இருந்த ரங்கமதியில் இருந்த தம் ராஜ்ஜியத்தின் தலைநகரத்தை இந்த அகர்தலாவுக்கு மாற்றினார். அதிலிருந்து இந்நகரத்தின் வரலாறு துவங்குகிறது.

1940 - ஆம் ஆண்டில் மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பஹதூர் இந்நகரத்தை மறு நிர்மாணம் செய்து இப்போதிருக்கும் அமைப்பில் கொண்டு வந்துள்ளார்.

பழமையான கலாசாரமும், நவீன மயமும் இணைந்த முக்கிய வடகிழக்கு நகரம் இது.

உதய்பூர்

மன்னராட்சி காலத்தில் நாட்டின் தலைநகரமாக இருந்தது. உதய்பூர் ஏரி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பல அழகான ஏரிகள் உள்ளன.

கைலாஷாஹர் இது இந்தோ - பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ளது. உண்மையில் இது ஒரு சிறிய நகரம். இந்த அழகிய நகரத்தில் உள்ள கோயில்களும், பச்சைப் பசேல் தோட்டங்களும் சேர்ந்து கண்ணுக்கினிய காட்சியை வழங்குகிறது.

சுற்றுலாத் தலங்கள்!

உனகோடி!

இது இந்து சமயத்தினரின் யாத்திரைத் தலமாகும். உனகோடி மாவட்டத்தில் உள்ளது. இங்கு பாறைகளில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்களும், கற்சிற்பங்களும் உள்ளன. இவை கி.பி. 7 - ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. மலைகளும், அருவிகளும் சூழ்ந்த இடம். இங்கு "அசோகாஷ்டமி' என்ற திருவிழா மிகப் பிரபலம்.

உஜ்ஜயந்தா அரண்மனை!

இந்த அரண்மனை அகர்தலாவில் உள்ளது. ராதா கிஷோர் மாணிக்யா என்ற மன்னரால் 1901 - ஆண்டு கட்டப்பட்டது. இந்த அரண்மனைக்கு "உஜ்ஜயந்தா அரண்மனை' என்று ரவீந்திரநாத் தாகூர் பெயர் வைத்தார். 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. உமா மஹேஷ்வர் கோயில் மற்றும் லட்சுமி நாராயணர் கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் அரண்மனை வளாகத்தில் உள்ளன. நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. 2011 - ஆண்டு வரை இந்த அரண்மனையில்தான் திரிபுரா மாநில சட்டப்பேரவை செயல்பட்டது. தற்போது திரிபுரா மாநில அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. அருங்காட்சியகத்தில் 22 காட்சி அரங்குகள் உள்ளன. நாணயங்கள், கல்வெட்டுகள், கல்லாலான சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், ஓவியங்கள் என பலவிதமான பொருள்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பிலக்!

தென் திரிபுரா மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி தளம் இது. 9 முதல் 12 - ஆம் நூற்றாண்டு வரையிலான இந்து மற்றும் பெளத்த மதத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல மணற்கல் சிற்பங்கள், ஏராளமான டெரகோட்டா தகடுகள் மற்றும் முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நீர் மஹால் அரண்மனை!

இது அகர்தலாவிலிருந்து சுமார் 62 கி.மீ. தூரத்தில் உள்ளது. மஹாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்யா என்பவரால் 1930 - ஆம் ஆண்டு ஆரம்பித்து, 1938 - இல் கட்டிமுடிக்கப்பட்டது. அகர்தலா நகரின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.

ஜகந்நாத் கோயில்!

உஜ்ஜயந்தா அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஓர் அற்புதக் கட்டடக்கலை அதிசயமாகும். குமிழ் மாடக்கோபுரம், விதான வளைவுகள், வாசற்கூரைகள் ஆகியவை தனித்தன்மை வாய்ந்தவை.

லட்சுமி நாராயணர் கோயில்!

இது அகர்தலா நகரத்தில் உள்ள மற்றுமொரு கோயில். கிருஷ்ணானந்த செவயாத் என்பவரால் கட்டப்பட்டது.

சிபாஹிஜலா வனவிலங்குகள் சரணாலயம்!

அகர்தலா நகரத்திலிருந்து 28 கி.மீ. தூரத்தில் இச்சரணாலயம் உள்ளது. 18.5 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு புலம் பெயரும் பறவைகள் அதிகம் வருகின்றன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் ஒரு மான் பூங்கா, ஒரு மிருகக்காட்சி சாலை, ஒரு தாவரவியல் பூங்கா மற்றும் இரண்டு ஏரிகளும் உள்ளன.

வேணுபன் புத்த விஹார்!

இது இப்பிரதேசத்தின் பிரசித்தமான பெளத்தக் கோயில். இங்கு உலோகத்தாலான புத்தர் சிலை உள்ளது. இங்கு புத்த பூர்ணிமா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

காலேஜ் டில்லா வளாகம்!

அகர்தலா நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 254 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வளாகத்தில் 1947 - ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மஹாராஜா பீர் பிக்ரம் காலேஜ், திரிபுரா பல்கலைக் கழகக் கட்டடங்கள், மற்றும் ஒரு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம், கால்பந்து விளையாட்டரங்கம், ஆகியவை அமைந்துள்ளன. இது தவிர பூங்காக்களும், ஏரிகளும் இந்த வளாகத்தில் உள்ளன.

ரபீந்த் கானன்!

ராஜ்பவன் மாளிகையின் உள்ளே இருக்கும் இந்த ரபீந்த கானன் ஒரு பரந்த பசுமையான தோட்டமாகும்.

பாராமுரோ சுற்றுச் சூழல் பூங்கா!

அமைதியையும் இயற்கையையும் விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் இது. பாராமுரா மலைத் தொடரின் காடுகள் சூழ அமைந்துள்ளது. இங்கு பல்வேறு குடில்களும், பாலங்களும் உள்ளன.

டம்பூர் ஏரி!

இந்த ஏரியின் அழகு பார்ப்பவர்களை மகிழ்விக்கும். ஏரியில் 48 குட்டிக் குட்டித் தீவுகள் உள்ளன. புலம் பெயரும் பறவைகள், பல்வேறு நீர் வாழ் உயிரினங்களும் இந்த ஏரியில் உள்ளன. படகு சவாரி வசதியும் உள்ளது.

கமலா சாகர் பிக்னிக் ஸ்பாட்!

மிகவும் அழகான இடம். இங்கு ஒரு செயற்கை ஏரியும் உள்ளது.

மகாமுனி புத்தர் ஆலயம்!

பகவான் புத்தர் வசித்ததாக நம்பப்படும் நகரத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் உள்ள புத்தர் சிலை உட்பட முழுக் கட்டடமும் ஜப்பானிய கட்டடக் கலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக் கட்டடமும் தங்க நிறத்தில் அமைந்துள்ளது.

பொம்மை ரயில்!

திரிபுராவின் பிரபலமான ரயில் இது! அகர்தலாவிலிருந்து டார்ஜீலிங் வரை ஆண்டு முழுவதும் பயணிக்கிறது.

சாபி முரா, தேவ்தா முரா, தியோட முரா!

சாப் முரா கோமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு செங்குத்தான பாறைச்சுவரில் பல இந்து மத தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இவை 500 ஆண்டுகளுக்கு முந்தியவையாகும்.

தேவ்தா முரோவில் இந்து கடவுளான துர்கா தேவியின் பாறைச் சிற்பங்கள் உள்ளன. இது ஒரு தொல்பொருள் ஆராய்ச்சிக்குட்பட்ட இடம்.

தியோட முரா திரிபுராவின் வடகிழக்குப் பகுதியில் கோமதி ஆற்றின் கரையில் உள்ளது. இங்குள்ள பாறையில் வெட்டப்பட்ட சிற்பங்கள் அவசியம் பார்க்க வேண்டியவை. சிவன், விஷ்ணு, விநாயகர் மற்றும் பல சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன.

திரிபுரா சுந்தரி கோயில்!

இந்தக் கோயில் உதய்பூரில் உள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இப்போதுள்ள கோயில் கட்டடம் 1501 - ஆம் ஆண்டில் மகாராஜா தன்யா மாணிக்க தேபர்மா வால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் ஆமை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.

பசுமையான மேய்ச்சல் நிலங்கள், மலைகள், அழகான ஏரிகள், பள்ளத்தாக்குகள் புண்ணியத் தலங்கள் நிறைந்த மாநிலம் திரிபுரா! இயற்கையை ரசிப்போரை கவர்ந்திழுக்கும் இடம் திரிபுரா மாநிலம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com